Published:Updated:

பிரிவு 377 முதல் சபரிமலை நுழைவு வரை: 2018 பாலினப் புரட்சிக்கான ஆண்டா?

பிரிவு 377 முதல் சபரிமலை நுழைவு வரை: 2018 பாலினப் புரட்சிக்கான ஆண்டா?
பிரிவு 377 முதல் சபரிமலை நுழைவு வரை: 2018 பாலினப் புரட்சிக்கான ஆண்டா?

நமக்கே தெரியாமல் நம்முடன் இணைந்திருந்த பால் பேதம் சுட்டும், போற்றும் கிருமிகள் தங்களின் இருப்புக்கான சாத்தியத்தைக் கணக்கிட்டுப் பார்த்த ஆண்டு இது.

2018... பல அதிசயங்களை சமூக அரங்கில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறது. நம்மைச் சுற்றி நிலவி வரும், நம்மில் உறைந்திருக்கும் பால் பேதங்கள் ஆட்டம்கண்ட ஆண்டு எனலாம். காலங்காலமாக நம் சமூகத்தின் அடிநரம்புகளுடன் பின்னிப் பிணைந்திருந்த, நமக்கே தெரியாமல் நம்முடன் இணைந்திருந்த பால் பேதம் சுட்டும், போற்றும் கிருமிகள் தங்களின் இருப்புக்கான சாத்தியத்தைக் கணக்கிட்டுப் பார்த்த ஆண்டு இது. நிகழ்ந்த அத்தனை அதிசயங்களின் மீதும் `நிஜமாலுமே, அந்தளவு வளர்ந்துட்டோமா?’, `இது என்ன அசிங்கம்?’, `இது அடிப்படையையே ஆட்டிப் பார்க்குமே, எப்படி முடியும்?’ என்பன போன்ற பல்வேறு கேள்விகளும், எதிர்ப்புக் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. இப்படி, 2018-ல் நம்மை ஆச்சர்யமாகத் திரும்பிப் பார்க்கவைத்த சில அதிசயங்களின் தொகுப்பும், அதற்கான பதில்களும் இங்கே..

#மீடூ (#Metoo)

மீ டூ என்ற ஹேஷ்டேக் தொடங்கிய ஆண்டு 2018 கிடையாது. ஆனாலும், போன வருடத்தில்தான், மீ டூ தொடர்பான புகார்களும், அவற்றை முன்னெடுத்த மனிதர்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் அவரவர்களின் தனிப்பட்ட கருத்துகளில், தொலைக்காட்சி சேனல்களிலும், பத்திரிகைகளிலும் அதிகம் பேசப்பட்டார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, பின்னணிப் பாடகி சின்மயி என்னும் தனிநபர் முன்வைத்த மீ டூ புகார்களின் பேரில் நம் கருத்துகளை, அந்தப் புகாரில் புரிந்துகொண்ட நியாயங்களை சமூக வலைதளங்களில், டீ கடைகளில், நண்பர்களிடத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக விவாதித்துக்கொண்டே இருந்தோம். அப்படி என்னதான் இருந்தது மீ டூ-வில்?

பாலியல் அத்துமீறல்களைத் தயக்கத்துடனும், பயத்துடனும் தன் குடும்பத்தினரிடம் சொல்லும் (அல்லது சொல்லாமலே போகும்) பெண்களைக் கண்டு பழகிய சமூகத்துக்கும், பாலியல் கொடுமைகளைத் தன் பெண்ணின் மரியாதையுடனும், குடும்பத்தின் மானத்துடனும் சம்பந்தப்படுத்தி வைத்திருக்கும் குடும்ப அமைப்புக்கும் இயல்பாக எழுந்த அதிர்ச்சியும் கேள்விகளும்தான் மீ டூ-வை விவாதப் பொருளாக்கின. இப்படிப் பல தளங்களிலும் எழுந்த விவாதங்களில் `மீ டூ' எப்படிப் புரிந்து கொள்ளப்பட்டது?

மீ டூ எதற்கு?

எத்தனை காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் இருக்கின்றன? சமூக வலைதளத்தில் ஒரு ஆண் மேல் குற்றம் சுமத்திப் பதிவுகள் இடுவதென்றால் எதற்குச் சட்டங்கள்? நியாயமான கேள்விபோல்தான் தெரியும். ஆனால், மீ டூ பதிவுகளைப் படித்துப் பார்த்திருந்தால் இந்தக் கேள்விகள் தோன்றியிருக்காது. அவை என்ன பேசுகின்றன என்பது புரிந்து கொள்ளப்படவேயில்லை என்பதுதான் இந்தக் கேள்வி சொல்லும் உண்மை.

மீ டூ என்பது இரண்டே சொற்கள்தாம். ஆனால், அவை தாங்கி நிற்பது மிகப்பெரும் தைரியத்தை, தன்னம்பிக்கையை! அந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது என்பதுதான் மீ டூ-வின் சக்தியை உணர்த்துகிறது. அவை குற்றம் சுமத்தும் பதிவுகள் அல்ல. தன் உடலுடன் பிணைத்து வைக்கப்பட்டுள்ள மூடக் கருத்துகளை உடைத்துப் பொதுவெளியில் தான் அனுபவித்த பாலியல் அத்துமீறல்களை அச்சமின்றிச் சொல்லத் தூண்டிய ஒரு போராட்டம். அது எவ்வளவு அற்புதமான விஷயம் என்பது, `ஒரு பெண் பொதுவெளியில் `மீ டூ’ என்று வாயைத் திறக்க எவ்வளவு உட்தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும்' என்பது தெரிந்திருந்தால் விளங்கும்.

ஓர் ஆணின் பெயரைக் குறிப்பிட்டுப் பதிவுகளிட்டால், ஒரே நாளில் சம்பந்தப்பட்ட நபரை எல்லோரும் பார்க்கும் பார்வை மாறி விடுமே! பின் அந்த நபர் எப்படிச் சமூகத்தில் இயங்க முடியும்? ஒருவேளை அந்தப் பதிவு பொய்யாக இருந்தால்? இது நியாயமான கேள்விதான். ஆனால், இந்தக் கேள்விக்கு மீ டூ-வில் பதில் கிடையாது. எதை எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும் என்ற தெளிவு நம்மிடம் இருக்க வேண்டும். அந்தத் தெளிவின்மையும், அது கொடுக்கும் கலக்கமும்தான் இப்படியான கேள்விகளைத் தோற்றுவிக்கிறது. அது சட்டமானாலும் சரி, மீ டூ போன்ற இயக்கமானாலும் சரி, தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்தக் காரணங்களுக்காக மீ டூ-வையே மொத்தமாகச் சாடுவதும், குற்றம் சுமத்துவதும் அதுபோன்ற எழுச்சியைப் பொறுக்காத வக்கிரபுத்தியின் எதிர்வினைகள்தாம்.

#மென் டூ (#Mentoo) தேவையா? 

பாலியல் வன்கொடுமை என்பது ஒரு தனிமனிதர் மீது சுமத்தப்படும் மிக மோசமான வன்முறை. அது நிச்சயம் எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவர் மீது சுமத்தப்பட்டாலும் பெரும் குற்றம்தான். ஆண்கள் மீது நிகழ்த்தப்பட்டாலும்...! ஆனால், `மென் டூ' என்பது தேவையா? இங்கு ஓர் ஆணின் உடல் மீது எந்த ஒரு குடும்பத்தின் கௌரவமும் கட்டமைக்கப்படவில்லை. அது பெண்ணின் மீதுதான் எழுப்பப்பட்டிருக்கின்றது. அதை உடைக்கத்தான், `மீ டூ' என்று கொண்டுவந்து, அதைப் பெண்கள் சொல்வது அவசியமானதாகிறது. இயல்பாக, இங்கு ஒரு சாரார் போராடும்போது மற்றவர்கள் அருகில் நின்று, தோள் கொடுத்துத்தான் பழக்கம். ஆனால், மீ டூ பரவியபோது வெறும் வீம்புக்காக `மென் டூ' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியது, அதைப் பரப்பியது என்பதெல்லாம் பண்படாத சமூகத்தையும், ஆணாதிக்க எச்சத்தையும்தான் காட்டுகிறது. மீ டூ, பெண்களின் களம், அவர்களின் போராட்டம்! அந்தப் போராட்டத்தில் உடன் நிற்க விருப்பமில்லை என்பதைத் தாண்டி, போட்டி போட்டுக் கொச்சைப்படுத்தவும் விருப்பம் என்பது சில நம்பிக்கை இழைகளை அறுத்துத்தான் போடுகின்றன. 

தன் பாலின ஈர்ப்பு குற்றமாகாது     

இந்தத் தீர்ப்பு உண்மையாகவே அறிவிக்கப்பட்டுவிட்டதா என்ற வியப்பு இப்போதுவரை மறையவில்லை. `வரலாறு, தன் பாலின ஈர்ப்பாளர்களிடம் பெரும் மன்னிப்பு கேட்கிறது’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வாசகம்தான் 2018-ன் நம்பிக்கை வாசகம். பேதங்கள் அற்ற சமூகம் நோக்கிய பயணத்தில் இது ஒரு மாபெரும் பாய்ச்சல். அன்பின் பேரொளியைக் கொண்டாடித் தீர்த்த தருணங்கள் அவை. கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி, நம் சமூகம் விழித்துக்கொண்ட தேதி. சமூகத்தின் ஒரு சாரார் மீது நாம் உமிழ்ந்துகொண்டிருந்த வெறுப்புக்கு மன்னிப்புக் கேட்ட தேதி. அன்பின் பெருமையைக் கூறிக்கொண்டு, இனி அந்தத் தேதி வரலாற்றில் உயர்ந்து நிற்கும். இந்தத் தீர்ப்பின் எதிர்வினைகள் பலதரப்பட்டவை. `இது இயற்கைக்கு எதிரானது’ என்ற குரல்களுக்குப் பதிலாக `இயல்பாய்த் தோன்றும் உணர்வை மறுப்பதுதான் இயற்கைக்கு எதிரானது’ என்கிற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருப்பதுதான் நமக்கான ஒரே நம்பிக்கை.

சட்டப்பிரிவு 497 நீக்கம்

இந்தத் தீர்ப்பு உண்மையில் அற்புதமானது. சட்டப்பிரிவு 497-ன் படி, அனுமதியில்லாமலும், கணவனின் அனுமதியின்றியும்  மனைவியைத் தொடும் ஆணுக்கு ஐந்து ஆண்டுக்கால சிறைவாசமோ, அபராதமோ அல்லது ரெண்டுமோ விதிக்கப்படும். எழுப்பப்பட்ட கேள்வி என்னவெனில், `அதெப்படி மனைவி பாதிக்கப்பட்டவள் ஆகி, குற்றம் செய்தவன் ஆண் மட்டும் என்று கற்பிக்கப்படலாம்?’ என்பதுதான். ஆனால், வந்த பதில் நிச்சயம் அற்புதமான திருப்பம். தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, `மனைவியைக் கணவனின் உடைமையாகக் கருதும் மனப்பான்மைதானே இது. கணவனை மனைவிக்கு எஜமானனாக ஒருபோதும் சட்டம் விதிக்காது. ஆகையால், திருமணத்துக்கு வெளியில் நடக்கும் உறவானாலும், அது இருவர் சம்மதத்தின் பேரில் நடந்தால் அது கிரிமினல் குற்றமாகாது. ஆனால், இதே காரணி விவாகரத்துக்கு அடிகோலும் எனில், அப்போது இதை சிவில் குற்றமாகக் கருதலாம்’ என்று பதில் சொன்னது. ஆனால், இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள நம் சமூகம் இன்னும் வளர வேண்டும் என்பதுதான் உண்மை. அந்த வளர்ச்சிக்கு இப்படியான தீர்ப்புகள்தான், சத்தியமாக காம்ப்ளானாக உதவும். உடல்களின் எல்லைகளிலிருந்து சிறைப்பட்டிருக்கும் நம் அன்பு வெளிப்பட, ஏற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் நாம் கற்க வேண்டும். அதற்கான ஆரம்பத்தைக் கிள்ளியிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

சபரிமலைத் தீர்ப்பு

இது 2018-ன் மாபெரும் அதிசயம். சட்டப் பிரிவுகள் 377, 497-ன் தீர்ப்புகள் வெளிவந்த போதுகூட, இந்தளவு எதிர்ப்புகள் இல்லை. அப்படியெனில், மத உணர்வுகளின் சக்தியையும், வீச்சையும் கண்டு அஞ்சத்தான் வேண்டியிருக்கிறது. சில நாள்கள் முன்புவரை, `பெண்களுக்கே இந்தத் தீர்ப்பு பிடிக்கவில்லை’ என்ற பொய் மறுபடி மறுபடி உரைக்கப்பட்டு வந்தது. ஆனால், கேரளாவில் 30 லட்சம் பெண்கள் தோள் சேர்த்து உருவாக்கிய, 620 கிலோமீட்டர் நீண்ட 'வனிதா மதில்', அந்தப் பொய்யை அடித்து நொறுக்கியது. மும்பையில் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் மனிதச் சங்கிலி அமைத்து, கேரளப் பெண்களின் முயற்சிக்குத் தோள் கொடுத்திருக்கிறார்கள். 1990-ல் ஆலயத்துக்குள் பெண்கள் நுழைய ஏற்படுத்திய தடையைப் ‘பழங்கால’ மரபு என்று சொல்லிவந்ததும், இது பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் செயல் என்பதும் தீர்ப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. பெண்ணுடலை இன்னமும் அசிங்கம், தீட்டு என்று நம்ப வைக்க முடியாது என்று பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது சபரிமலை குறித்த தீர்ப்பு.

பெண்களுக்கான வென்றெடுக்கப்படாத உரிமைகள் எத்தனையோ இருக்கும்போது, வீம்புக்காக சபரிமலை கோயிலில் நுழைந்துதான் தீருவேன் என்று அடம்பிடிப்பது எப்படிச் சரியாகும்?

திரும்பத் திரும்ப ஒலித்த கேள்வி இது. ஆலய நுழைவுப் போராட்டங்கள்தான் நம் சமூக வரலாற்றின் போக்கைத் திசை திருப்பிவிட்டவை, சமத்துவத்தின் குரலை வலிமையாக ஒலிக்க வைத்தவை. அதற்குச் சற்றும் குறைவில்லாத முக்கியத்துவம் வாய்ந்ததுதான் பெண்களின் இந்தப் போராட்டமும். `வீம்பு’, `இது வெறும் ஈகோ மோதல்’ என்று ஆயிரம் சப்பைக்கட்டு கட்டலாம், பேசலாம். ஆனால், பொய்களை தொடர்ந்து உரக்கப் பேசினால் அது ஒருபோதும் உண்மை ஆகிவிடாது. வென்றெடுக்கப்படவேண்டிய உரிமைகள் எவ்வளவோ இருக்கலாம். அவற்றுக்கெல்லாம் பெயர்களும், களங்களும்தான் வேறு வேறு, அடிப்படையில் ஒன்றுதான். எல்லா நசுங்கிய உரிமைகளுக்கும் அடியில் பிறப்புக் காரணிகளும், பெண்ணுடலில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தேவையில்லாத ஆணிகளும்தான் இருக்கின்றன. ஒட்டுமொத்தக் களங்களிலும் உரிமைகளை வென்றெடுக்கத் தேவையில்லாத ஆணிகளைக் களைந்தால் போதும். அந்தத் தேவையற்ற கற்பிதங்களான ஆணிகளைக் காலில் போட்டு மிதிக்க, அந்த எழுச்சியை எல்லாப் பெண்களுக்கும் கடத்த, இந்த ஆலய நுழைவுப் போராட்டம் போன்ற ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் வேறு கிடைக்காது. வரலாறு அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. அந்த வாய்ப்பு ஒருபோதும் வீணாகப் போகாது என்பதும் ஆலய சுத்திகரணம் என்று எவ்வளவு பெரிய கம்பு சுத்தினாலும், `பழங்கால’ மரபுக் கதைகள் இனியும் நம்பப்படாது என்பதும்தான் நிதர்சனம்.

இந்தத் தீர்ப்புகள் குறித்து வழக்கறிஞர் ரஞ்சித்திடம் கேட்டோம். ``சமூகத்தின் உணர்வுகளோடு நீதிமன்றம் எப்போதுமே விளையாடக் கூடாதுதான். ஆனாலும், காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சில நடைமுறைகள், சில சமூக சலசலப்புகளையும் தாண்டி முன்னேற்றப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. தனிமனித உரிமைகள் என்று வரும்போது, அவை எந்த வகையிலும் மறுக்கப்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் இந்தத் தீர்ப்புகளை நான் வரவேற்கிறேன்” என்றார். 

2018-ம் ஆண்டில் வெளியான தீர்ப்பின் தாக்கம் 2019-ம் ஆண்டிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. ஆண்டின் முதல் நாளே மனிதச் சங்கிலிப் போராட்டம், அதற்கு ஆதரவாக வெவ்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் என 2018 கொடுத்த மாற்றத்தின் அரும்புகளை 2019-ம் ஆண்டிலும் எதிர்பார்த்து நிற்கிறோம். அடைய வேண்டிய இலக்குகள் அதிகம்தான். திருநங்கை, திருநம்பிகளுக்கான மசோதாவின் குறைகள், சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சரி செய்யப் படவேண்டிய சட்ட வழிமுறைகள், மீட்டெடுக்க வேண்டிய உரிமைகள் என்று எவ்வளவோ இருக்கிறது. 2018 கொடுத்த நம்பிக்கையில் பயணிப்போம்; சீக்கிரமே அந்த அரும்புகள் மலரட்டும், அதுவரை அன்பின் மேலான நம் நம்பிக்கை அணையாது நம்மை வழிநடத்தட்டும்.

அடுத்த கட்டுரைக்கு