Published:Updated:

`விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்!' - ஆய்வுக் குழுவினரின் காலில் விழுந்த பெண்

`விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்!' - ஆய்வுக் குழுவினரின் காலில் விழுந்த பெண்
`விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்!' - ஆய்வுக் குழுவினரின் காலில் விழுந்த பெண்

விவசாயிகள் கடும் எதிர்ப்பை மீறி சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்ல நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து சாலை அமைத்து லாரி இயக்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர் காலில் விழுந்த பெண் ஒருவர், "விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்" என்று கதறி அழுத சம்பவம் அங்கிருந்தோரைக் கண்கலங்க வைத்தது. 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் ராம்கோ சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு வெட்டி எடுக்கப்படும் சுண்ணாம்புக் கற்களை லாரிகள் மூலம் உஞ்சினி மற்றும் நல்லாம்பாளையம் கிராமங்கள் வழியாகக் கொண்டு சென்றனர். இதற்கு அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இலங்கைச்சேரி கிராம எல்லைக்கு உட்பட்ட நீர்வழித் தடம் மற்றும் வண்டிப்பாதை வழியாகச் சாலை அமைத்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர். இதற்கு அப்போது விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். இதனிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதே பகுதியில் பாதை அமைத்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர். இதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 10-ம் தேதி காலை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி சுண்ணாம்புக்கல் லாரி நிர்வாகம் செந்துறை போலீஸார் பாதுகாப்போடு நீர்வரத்து வழியில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் திரண்டு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். 

அங்கிருந்த அதிகாரிகள், ``நீதிமன்றம் உத்தரவின்பேரில் அவர்கள் பாதை அமைக்கிறார்கள். நீங்களும் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று வாருங்கள். சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தக் கூடாது" என்று எச்சரிக்கை செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் மனுத் தாக்கல் செய்தனர். அதில், ``நீர் வழித்தடம் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தும் வண்டி பாதை வழியாக சிமென்ட் ஆலை லாரிகள் செல்ல பாதை அமைத்து விவசாயிகளை அழிக்கின்றனர் இதைத் தடுக்க வேண்டும் என்றனர். அதைத் தொடர்ந்து நீதிபதி கமிஷனர் நியமித்து கள ஆய்வு செய்ய உத்தரவிட்டார். 

நீதிபதி உத்தரவின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வர்ஷா தலைமையில் 4 பேர் கொண்ட ஆய்வுக் குழுவினர் நேற்று பிரச்னைக்குரிய இடத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விவசாயிகள் சிமென்ட் ஆலை லாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நீர்வழித் தடங்களில் அத்துமீறி சிமென்ட் ஆலை நிர்வாகம் பாதை அமைத்து லாரிகள் இயக்கப்படுவது குறித்து ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து வக்கீல் வர்ஷா பிரச்னைக்குரிய இடத்தை நடந்தே சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது, விவசாயப் பெண் ஒருவர், ஆய்வுக் குழுவினரின் காலில் விழுந்து, "விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்" என்று கதறி அழுதது அப்பகுதியில் இருந்தோரைக் கண்கலங்க வைத்தது.