Published:Updated:

செல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா?

செல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
செல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா?

செல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா?

செல்பேசியில் வைத்திருக்கும் டிரைவிங் லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் பாலிசியை போக்குவரத்து போலீஸாரிடம் காட்டினால் அபராதம் விதிப்பதிலிருந்து தப்பிக்க முடியும் என நண்பன் கூறுகிறான். இது உண்மையா?

ராஜ்குமார், விழுப்புரம்

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்


“ ‘மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989’ சட்டப்பிரிவு 139-ன் படி, காவல்துறையினர் வாகனச்சோதனை செய்யும்போது ஆர்.சி புக், காப்பீட்டு ஆவணம், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை காவல்துறையிடம் காண்பிக்க வேண்டும். ஆனால், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், கடந்த நவம்பர் 19-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில் காவல்துறையினர் கேட்கும் ஆவணங்களை செல்பேசிமூலம் ஒளிப்பட நகலாகவும் காண்பிக்கலாம் என்று கூறியுள்ளது. எனவே, உங்கள் நண்பன் கூறியுள்ளபடி இனிமேல் செல்பேசி வழியாகவே அனைத்து ஆவணங்களையும் காண்பிப்பது சட்டப்படி செல்லுபடியாகும்.”

செல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா?

வீட்டு மனை பட்டாவை எனது பெயருக்கு மாற்ற, ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவர் ஒருவர் உதவி செய்து, சேவைக் கட்டணம் பெற்றுக்கொண்டார். பட்டா பெயர் மாற்றிவந்துவிட்டது. ஆனால், அதற்கான கோப்புகளில் கையெழுத்துப்பெற்று முடித்துக்கொடுக்க அதிக செலவானது என்றுகூறி மேலும்  இருபதாயிரம் ரூபாய் கேட்கிறார். அதைக் கொடுக்காவிட்டால் கட்டட அனுமதி வாங்கும்போது பிரச்சனையாகும் எனக்  கூறுகிறார். அவர் சொல்வது உண்மையா?  

திருப்பதிராஜா, சென்னை

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்


“பட்டாவில் பெயர் மாற்றுவதற்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, அந்தப் பணிக்கான கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். அந்தக் கட்டணம் அனைவருக்கும் பொதுவானதே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரசு அதிகாரிகளிடம் கையெழுத்துப் பெறுவதற்காக தனியாக பணம் எதுவும் கொடுக்கத்தேவையில்லை. அப்படி நிர்ப்பந்திப்பது சட்டப்படி தவறு. மேலும், கட்டட அனுமதியென்பது வேறு அலுவலகத்தில் நடக்கும் செயல்பாடு. அங்கே எவ்வித இடையூறுகளையும் இவர்களால் ஏற்படுத்த முடியாது. எனவே, பணம் தரவேண்டாம். அப்படி பணம் தருவது சட்டத்திற்குப் புறம்பானது.”

நான் (வயது 30) ஃப்ரீலான்ஸ் புகைப்படக்காரர். ஆண்டு வருமானம் சுமார் ரூ.5-7 லட்சம். ஆண்டு  பிரீமியம் ரூ.30,000 கட்டும் விதமாக மணிபேக் பாலிசி கடந்த வருடம் எடுத்துள்ளேன். வரிச் சேமிப்பு மற்றும் ஓய்வூதிய நிதிக்காக எஸ்.ஐ.பி முறையில் ரூ.5,000 கட்டும் விதமாக எனக்கேற்ற இஎல்.எஸ்.எஸ். ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யுங்கள்.

ஜோசப் பென்ட்லீ, நாகர்கோயில்

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்


“வருமான வரிச் சட்டம் 80சி-யின் கீழ் வரிச் சேமிப்பிற்காக ரூ.2,500 வீதம் ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டிலும், ரிலையன்ஸ் ரிட்டயர்மென்ட் ஃபண்டிலும் ஓய்வூதிய நிதிக்காக முதலீடு செய்யுங்கள். ரிலையன்ஸ் ரிட்டயர்மென்ட் ஃபண்ட் வரிச்சேமிப்பிற்கும் பயன்படக்கூடியது. முடிந்தால் கூடுதலாக ஒரு லிக்விட் ஃபண்டில் ரூ.2,500 முதலீடு செய்து வந்தால் (ஆண்டு சராசரி வருமானம் 7%) உங்களது ஆண்டு இன்ஷுரன்ஸ் பாலிசிக்கு பிரீமியம் கட்டுவது எளிதாகி விடும்.”

என் வயது 30. எனது இரண்டு வயது மகளின் எதிர்காலத் தேவைக்காக மாதம் ரூ.5,000 மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதற்கேற்ற நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பரிந்துரைக்கவும்.

நாராயண மூர்த்தி, ஈரோடு

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா


“உங்கள் இரண்டு வயது மகளின் எதிர்காலத் தேவைக்காக,  இன்னமும் 15 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்யலாம். இந்தக் காலவெளியில் நல்ல ரிஸ்க் எடுத்து அதிக பலன் கிடைக்கும் விதத்தில் முதலீடு செய்வது சாத்தியம் மற்றும் உகந்தது.

15 ஆண்டுகளுக்கு ரூ.5,000 என்ற விகிதத்தில் முதலீடு செய்தால் (வருடம் 12% கூட்டு வளர்ச்சி வரும் என்ற அனுமானத்தில்) உங்களுக்கு ரூ.25 லட்சம் சேருவதற்கு வாய்ப்புள்ளது. ஆதித்ய பிர்லா ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்டுகளில் தலா ரூ.2,500 முதலீடு செய்து வந்தால் தேவையான வருமானத்தை எதிர்பார்க்கலாம்.”

நான் ஏற்றுமதி செய்த பொருளுக்கான டூட்டி ட்ராபேக் தொகை எனக்குக் கிடைக்கவில்லை. என்ன காரணமாக இருக்கக்கூடும்?

நந்த குமார், சேலம்

கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், புளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்


“நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு டூட்டி டிராபேக் இருக்கிறதா என்று indiantradeportal.in வெப்சைட்டில் முதலில் சரிபார்க்க வேண்டும். அப்படி இருக்கிறது என்றால், கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டிடம்(சி.ஹெச்.ஏ.) நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு டூட்டி ட்ராபேக் பதிவு செய்யும்படி வலியுறுத்துங்கள்.

அப்போதுதான் அந்தப் பொருளுக்கு டூட்டி ட்ராபேக் தொகை கிடைக்கும். இல்லையென்றால் அப்பொருளை ஃப்ரீ ஷிப்பிங் பில் எனப் பதிவு செய்துவிடுவார்கள். டூட்டி ட்ராபேக் தொகை கிடைக்காமல் போகும்.”

செல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா?

எனது மாமனார், அவரிடமுள்ள ஒரு வீட்டு மனையை விற்று, அதில் வரும் தொகையில் ஒரு பகுதியை எனது மனைவிக்கு அன்பளிப்பாகக் கொடுக்கவுள்ளார். அந்த வீட்டு மனை அவரிடம் 6 ஆண்டுகளாக உள்ளது. அந்த விற்பனைக்கும், அன்பளிப்புக்கும் எவ்வளவு வரிவிதிக்கப்படும்?

பிரவீன் குமார், திருச்சி

கே.வைத்தீஸ்வரன், ஆடிட்டர்


‘‘வீட்டு மனையை விற்பனை செய்த தொகைக்கு, வருமான வரிச்சட்ட விதிகளின்படி, நீண்ட கால மூலதன ஆதாய வரியாக, பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு 20 சதவிகிதம் வரியை உங்கள் மாமனார் செலுத்த வேண்டும். ஆனால் அவர், உங்கள் மனைவிக்கு ரொக்கமாகக் கொடுத்த அன்பளிப்புக்கு (Gift) வரி எதுவும் கிடையாது.”

நான் சமீபத்தில் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்தில் பத்து லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். இதற்கு வருமான வரி விலக்கு கிடைக்குமா?

கார்த்திக், மதுரை

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதியாண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு, வருமான வரிச்சட்டம் 80சி-யின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு உண்டு. இந்த முதலீடு மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரிச் செலுத்த வேண்டி வரும்.”

தொகுப்பு : தெ.சு.கவுதமன்

செல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757,
அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.