Published:Updated:

16 நாளில் 9,000 கி.மீ பாலைவனத்தைக் கடக்க வேண்டும்... உலகின் கடினமான ரேஸ்!

16 நாளில் 9,000 கி.மீ பாலைவனத்தைக் கடக்க வேண்டும்... உலகின் கடினமான ரேஸ்!
News
16 நாளில் 9,000 கி.மீ பாலைவனத்தைக் கடக்க வேண்டும்... உலகின் கடினமான ரேஸ்!

இதுவரை அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள ரேஸ் இதுதான். மொத்தம் 59 போட்டியாளர்கள் மரணித்துள்ளார்கள். 100-க்கும் அதிகமானோர் இனி பைக் ஓட்டமுடியாத அளவு காயங்களுடன் தப்பித்துள்ளார்கள்.

1977-ம் ஆண்டு, ஒரு பைக் ராலியின்போது லிபியா பாலைவனத்தில் தொலைந்துவிட்டார் தியரி சபைன். ஆல் அரவமற்று மணல்களும் மலைகளுமாக இருக்கும் அந்த இடத்தில் இருந்து வழி கண்டுபிடித்து நகருக்குள் வந்த அனுபவம் செம த்ரில் கொடுக்க, தியரி சபைனுக்கு ஒரு ஐடியா உதிக்கிறது. சாகச விரும்பிகள் நடுங்கும் அளவு, அவர்களின் தைரியத்தைச் சோதிக்கும் அளவு ஒரு ரேஸ் நடத்த வேண்டும் என நினைத்தார். 

1978-ம் ஆண்டு டக்கார் ராலியை உருவாக்கினார். என்டியூரன்ஸ் ரேஸ்களில் மிகக் கடுமையானது டக்கார் ராலி. டிராக் ரேஸர்களுக்கு மோட்டோ ஜீபி என்றால் ஆஃப் ரோடு ட்ரையல் ரேஸர்களுக்கு டக்கார் ராலிதான் கனவு. 16 நாள்களில் 9,000 கி.மீ தூரத்தைக் கடக்க வேண்டும். தார்ச்சாலை கிடையாது; கடுமையான பாலைவனம் மட்டும்தான். ஈஃபில் டவரின் நிழலில் ஆரம்பித்து டக்கார் எனும் இடத்தில் முடிவதால், இதற்கு டக்கார் ராலி என்ற பெயர் வந்தது. ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் 2002 முதல் டக்கார் ராலி தென் அமெரிக்க நாடுகளுக்கு மாற்றப்பட்டது. 

தெரிந்த ஊருக்குள் 1,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் கிளம்பினாலே சங்கடங்கள் நம் பாக்கெட்டுக்குள் வந்து உட்கார்ந்துகொள்ளும். இப்படி ரூட் தெரியாமல், ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு, எதிரே என்ன வரும் என்று தெரியாத பாலைவன மணலில் சென்றால் எப்படியிருக்கும்? ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமான கிளைமேட், மணல் புயல், புதை குழி, மிருகங்கள், காட்டுத்தீ எனப் பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கும். ஒவ்வோர் ஊரின் சுற்றுச்சூழல் கெடாமல் அந்த இடத்தைக் கடந்து போக வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சின்ன வலி அல்லது சுளுக்கு ஏற்பட்டால்கூட அந்த ஸ்டேஜ் முடியும் வரை வலியுடன்தான் கார்/பைக் ஓட்ட வேண்டும். கீழே விழுந்து சுயநினைவு இழந்துவிட்டால் பின்னால் வருபவர் ரேஸ் டைரக்டருக்கு சிக்னல் கொடுத்துக் காப்பாற்றினால்தான் உண்டு. டக்கார் ராலியில் வந்து பயத்தால் பலர் மாரடைப்பால் இறந்துள்ளார்கள். 9,000 கிலோமீட்டர் முடியும் வரை வேகம், விவேகம் மட்டுமல்ல  உள்ளுணர்வும்  சுயமுன்னேற்றமும் மிகவும் முக்கியம்.

டக்கார்  ராலி, கார், பைக், க்வாட், ட்ரக் என 4 பிரிவுகளில் நடைபெறுகிறது. இந்த ரேஸில் மொத்தம் 14 ஸ்டேஜ்கள் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் 500 பேர் வரை கலந்துகொள்வார்கள். இதுவரை அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள ரேஸ் இதுதான். மொத்தம் 59 போட்டியாளர்கள் மரணித்துள்ளார்கள். 100-க்கும் அதிகமானோர் பெரிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்கள். டக்கார் ராலிக்கான வாகனங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்படும். முதலில் இந்த ராலியை முடிப்பதே கஷ்டம். முதலிடத்தில் முடிக்க வேண்டும் என்றால் இந்தப் போட்டிக்காகவே வாழ்ந்தாக வேண்டும். 

இந்தப் போட்டியை வெற்றிகரமாக முடித்த ஒரே இந்தியர் C.S.சந்தோஷ் மட்டும்தான். 5 ஆண்டுகளாக டக்கார் ராலியில் பங்குபெறும் இவரின் பெஸ்ட் பொசிஷன் 35-வது இடம். ஹீரோ மோட்டார் ஸ்போர்ட்ஸ் டீமுக்காகப் போட்டிபோடும் இவரின் இலக்கு இந்த ஆண்டு முதல் 20 இடங்களுக்குள் வருவதுதான். ஷெர்க்கோ டிவிஎஸ் அணியைச் சேர்ந்த அரவிந்த் K.P என்பவரும் இந்த ஆண்டு டக்கார் ராலியில் போட்டிபோடுகிறார். '2018 Raid de Himalaya' போட்டியின் வெற்றியாளர் இவர். இந்தியா சார்பாக டக்கார் ராலியில் பங்கேற்பது இந்த இருவர் மட்டுமே. அதிலும் கார், டிரக் மற்றும் குவாட் கேட்டகரியில் யாரும் இதுவரை போட்டிபோடவில்லை.