Published:Updated:

‘காசு கொடுக்காததால் குழந்தையை கொண்டு போய் அடச்சு வச்சுடாங்க’ - ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் வடித்த தாய்

‘காசு கொடுக்காததால் குழந்தையை கொண்டு போய் அடச்சு வச்சுடாங்க’ - ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் வடித்த தாய்
‘காசு கொடுக்காததால் குழந்தையை கொண்டு போய் அடச்சு வச்சுடாங்க’ - ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் வடித்த தாய்

''வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் என் குழந்தைகளை கொண்டு போய் சோறு தண்ணீர் தராமல் ஒரு நாள் முழுக்க அடைச்சு வச்சுட்டாங்க.  இத்தனை குழந்தையை பெத்து வச்சிருக்கல்ல அதுல ஒண்ண வித்து கடனை அடைக்கச் சொல்லி துன்புறுத்துகிறார்கள்'' என்று சேலம் கலெக்டரிடம் புகார் கொடுத்திருக்கிறார் ஒரு தாய்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குழந்தைகளுடன் வந்த வாழப்பாடியை சேர்ந்த யசோதா என்ற பெண்  தான் வாங்கிய கடனுக்காக தனியார் பைனான்ஸ் நிறுவனத்தினர் தங்கள் குடும்பத்தினரை மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்.

இதுகுறித்து அந்தப்பெண்ணிடம் பேசிய போது, '' என் பேரு யசோதா, எங்க வீட்டுக்காரர் பேரு அர்ஜூனன். எங்களுக்கு 3 பெண் குழந்தைகள், ஒரு பையன். எல்லோரும் சின்னஞ்சிறு பிள்ளைகள். நாங்க வாழப்பாடி பக்கத்தில் கொட்டவாடி காமராஜ் தெருவில் குடியிருக்கிறோம். எங்க வீட்டுக்காரர் நூல் மில்லுக்கு வேலைக்கு போறார். நான் வீட்டிலேயே பாக்கு கொட்டை உடைப்பேன். எங்க ரெண்டு பேரு வருமானமும் போதுமானதாக இல்லை.

கடன் வாங்கி குடும்பம் நடத்திட்டு வர்றோம். நான் மகளிர் சங்கம் மூலமாக வாழப்பாடியில் உள்ள எல் அண்ட் டி பைனான்ஸ் கம்பெனியில் 30,000 வாங்கி மாதம் தோறும் 1600 வீதம் 11 மாதம் கட்டி விட்டேன். இன்னும் 13 மாதம் கட்ட வேண்டும். அதே போல ஆர்.பி.எல் பைனான்ஸ் கம்பெனியில் 30,000 கடன் வாங்கி மாதம் தோறும் 1750 வீதம் 5 மாதம் கட்டி வந்திருக்கிறேன்.

எக்குவிடாஸ் பைனான்ஸ் கம்பெனியில் 26,000 கடன் வாங்கி மாதம் தோறும் 1750 வீதம் 8 மாதம் கட்டி இருக்கிறேன். தென்பெண்ணையாறு பைனான்ஸ் கம்பெனியில் 26,000 கடன் வாங்கி மாதம் தோறும் 1750 ரூபாய் வீதம் 5 மாதம் கட்டி இருக்கிறேன். இந்த நிலையில் கடந்த மாதம் என்னுடைய 3ம் வகுப்பு படிக்கும் என் மூத்த பெண் குழந்தை பிரிய தர்ஷிணி மீது வாகனம் ஏற்றிட்டு போயிட்டாங்க.

அந்த குழந்தையை மருத்துவமனை தூக்கிட்டு போய் மருத்துவம் பார்த்துட்டு இருக்கிறேன். நான் வேலைக்கும் போக முடியவில்லை. இந்த நிலையில் 2 மாதத் தவணைத் தொகை கட்டவில்லை என்று எக்குவிடாஸ் பைனான்ஸ் கம்பெனியை சேர்ந்த தமிழரசும், எல் அண்ட் டி பைனான்ஸ் கம்பெனியை சேர்ந்த சக்தியும்  என்னுடைய 2 பெண் குழந்தைகளையும், என் தம்பியின் 3 குழந்தைகளையும் கொண்டு போய் ஒரு நாள் முழுக்க சோறு தண்ணீர் கொடுக்காமல் ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டார்கள்.

குழந்தைகளுக்குச் சோறு போடவே முடியல. கடனைக் கட்ட சொன்னால் எப்படி முடியும். ''இத்தனை குழந்தையை பெத்து வச்சிருக்கல்ல அதுல ஒண்ண வித்து கடனை அட, இல்லைன்னா உன்னோட கிட்னியை விற்றுக் கொடுத்திடு. ஏமாற்ற நெனச்ச குடும்பத்துக்கே விஷத்தை வைத்து கொலை செய்து விடுவோம்'' என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டறாங்க'' என்று கண்ணீர் வடித்தார். 

இதுபற்றி ஆர்.பி.எல் பைனான்ஸ் கம்பெனியின் மேலாளரிடம் பேசியதற்கு, ''யசோதாவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று கூறி போனை கட் பண்ணி விட்டார்.