Published:Updated:

இரவு நேரம்... கொட்டும் மழை... 35,000 புத்தகங்களைப் பாதுகாத்த யாழ்ப்பாண நூலகர்!

பத்திரிகையின் வழியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் துணை நூலகர் பதவி காலியாக இருப்பதையறிந்து அதற்கு விண்ணப்பித்தார். துணை நூலகர் பதவியும் கிடைக்க... தன்னுடைய பணியை, தான் விரும்பிய நூலகத்திலேயே தொடர்ந்தார்.

இரவு நேரம்... கொட்டும் மழை... 35,000 புத்தகங்களைப் பாதுகாத்த யாழ்ப்பாண நூலகர்!
இரவு நேரம்... கொட்டும் மழை... 35,000 புத்தகங்களைப் பாதுகாத்த யாழ்ப்பாண நூலகர்!

"I think that, when libraries are targeted, the idea is to destroy entire culture, and to deny learning. There is a famous Tamil saying, that to look at one’s own reading is to know one’s mind and culture" - Rohini Prarajasingam என்கிற யாழ்ப்பாண நூலகர்.

தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலகமும் ஒன்று. 1930-களில் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில், நூற்றாண்டுக்கும் பழைமையான ஓலைச்சுவடிகள், 1600-களில் எழுதப்பட்ட புத்தகங்கள், 1800-களில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த நாளிதழ்களின் மூலப்பிரதிகள் ஆகியன அரிய பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்தன. தனிமனிதர் ஒருவரின் முயற்சியில் தொடங்கி, பலரின் பங்களிப்பால் பிரமாண்டமாக வளர்ந்த நூலகம் 1981-ல் தீக்கிரையானது. அந்த நிகழ்வு பலரையும் காயப்படுத்தியது. நீண்டபோரில் பலமுறை அந்த நூலகம் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதல்களிலிருந்து தன்னால் இயன்றவரை புத்தகங்களைக் காப்பாற்றியவர்தான் நூலகர் ரோகிணி பரராஜசிங்கம்.

இலங்கையிலுள்ள பருத்திதுறை என்னுமிடத்தைச் சேர்ந்த ரோகிணி பரராஜசிங்கம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர். நூல்களின் மீதுள்ள பிரியத்தால் டிப்ளமோ மற்றும் முதுகலையை நூலக அறிவியல் பாடத்தில் அதே பல்கலைக்கழகத்தில் முடித்தார். இந்தியாவில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு தாய்நாடு திரும்பிய ரோகிணி, சிலகாலம் புத்தகக் கடை ஒன்றில் பணியாற்றினார். தீவிரமான வாசிப்பு பழக்கமுடைய ரோகிணி, பத்திரிகையின் வழியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் துணை நூலகர் பதவி காலியாக இருப்பதையறிந்து அதற்கு விண்ணப்பித்தார். துணை நூலகர் பதவியும் கிடைக்க... தன்னுடைய பணியை, தான் விரும்பிய நூலகத்திலேயே தொடர்ந்தார். சுமார் 35 ஆண்டுகள் நூலகத்தில் பணியாற்றிய ரோகிணி, போர் தீவிரமான காலங்கள் முழுவதும் அந்த நூலகத்திலேயே துணை நூலகர், தலைமை நூலகர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றி முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளார். 1987-ல் இருபிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் 35,000 புத்தகங்களைக் காப்பாற்றியுள்ளார்.

புத்தகங்களைக் காப்பாற்றிய அனுபவம் பற்றி ஆங்கில நேர்காணல் ஒன்றுக்குப் பேட்டியளித்த ரோகிணி, ``1987-ல் போர் தீவிரமடைந்திருந்தது. போரில் ஈடுபட்ட அந்நியர்களால் புத்தகங்கள் சேதமாகிக்கொண்டிருந்தன. அப்போது, நான் துணை நூலகர். தலைமை நூலகர் விடுப்பில் இருந்ததால், தற்காலிகத் தலைமை நூலகராக என்னை நியமித்திருந்தனர். அந்தச் சமயம் கடுமையான இரவு மற்றும் கொட்டும் மழை வேறு... அப்படியான சூழ்நிலையில் நனைந்துகொண்டிருந்த புத்தகங்களைக் காப்பாற்ற உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. பல அரியப் பொக்கிஷமான நூல்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை என்னிடம் இருந்ததை நான் நன்கு உணர்ந்திருந்தேன். மாணவர்களையும் அலுவலக நண்பர்களையும் இணைத்துக்கொண்டு ராணுவ வீரர்களின் உதவியுடன் நனைந்த புத்தகங்களைப் பட்டுச்சேலைகளில் சுற்றி, லாரிகளில் ஏற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றோம். இதற்காக, பலரும் என்னை விமர்சித்தார்கள். அந்த நேரத்தில், புத்தகங்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் நானும் செய்தேன். நாங்கள் புத்தகங்களின்மீது அதீத அன்பு செலுத்துகிறோம். அதற்கு மாற்று என்பதே இல்லைதானே! யாழ்ப்பாண மனிதர்கள் கல்வியையும் கற்றலையும் விரும்புபவர்கள். இன்று புதிய புத்தகங்கள் வாங்கிவிடலாம். ஆனால் பழைய புத்தகங்களுக்கு மாற்றாக அவை என்றுமே ஆகிவிடாது. தொலைக்கப்பட்டவை தொலைக்கப்பட்டவைதான்" எனக் கண்ணீரோடு அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் போரில் 60,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அழிந்தன. ஆனால், ரோகிணியோ, புத்தகத்தின் மீதிருந்த தீராத காதலால் 35,000 புத்தகங்களைக் காப்பாற்றி அதைப் பாதுகாப்பாக வைத்தார். அதே ரோகிணி, இழந்த புத்தகங்களை நினைத்து இன்றும் வருந்துகிறார். 2005-ல் தலைமை நூலகர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற ரோகிணி, 70 வயதைக் கடந்தும் புத்தகம் மீதான காதல் அவருக்குக் குறையவே இல்லை. அமைதியற்ற பயங்கரமான போர்ச்சூழலில் வாழ்ந்தபோதும் புத்தகங்களுக்காகத் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவர்  ரோகிணி. அவருடைய இந்தச் செயலைப் பாராட்டும் வகையில் யாழ்ப்பாணம் நூலகம், அவரைக் கௌரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“We treat books with great care and love” என்று சொல்லும் நூலகர் ரோகிணி பரராஜசிங்கத்துக்கு, ஒவ்வொரு புத்தகப் பிரியரும் கடமைப்பட்டவர்கள்தாம்.