Published:Updated:

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை... மருத்துவரீதியாக என்ன நன்மை? - விளக்கும் மருத்துவர்கள்

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை... மருத்துவரீதியாக என்ன நன்மை? - விளக்கும் மருத்துவர்கள்
பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை... மருத்துவரீதியாக என்ன நன்மை? - விளக்கும் மருத்துவர்கள்

ஒரு மாதத்துக்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதாக ஒரு கணக்கீடு இருக்கிறது.

புத்தாண்டு பிறந்ததும் ஏதோவொரு பழக்கத்தைக் கைவிடப்போகிறேன் என்றோ, புதிய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போகிறேன் என்றோ நம்மில் பலர் தீர்மானம் எடுத்துக்கொள்வார்கள். சிலர், எடுத்துக்கொண்ட தீர்மானத்தை சரியாகப் பின்பற்றுவார்கள். பலர் ஆண்டுதோறும் தீர்மானம் எடுப்பதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருப்பார்கள். பொதுவாக இதுபோன்ற தீர்மானங்கள் தனிநபர்கள் தங்கள் நலனுக்காக எடுத்துக் கொள்வதாகவே இருக்கும். 

தனிநபர்களின் தீர்மானங்கள் ஒருபுறமிருக்க, தமிழக அரசின் சார்பில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் காரணமாக, பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் கேரி பேக், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அது கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பிளாஸ்டிக் பொருள்கள் மீதான இந்தத் தடைக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட ஒரு சிலரின் எதிர்ப்பு இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பொதுவாக மக்களை முன்னிறுத்தி எந்தவொரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது அமலுக்கு வரும்போது சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பது வாடிக்கை. மக்கள் அதற்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள காலதாமதம் ஏற்படும். ஆனால், பிளாஸ்டிக் மீதான தடையைப் பொறுத்தவரை, மக்கள் வெகு விரைவாக மாற்றத்துக்குத் தயாராகி, பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக வாழை இலை, மந்தாரை இலை, காகிதப்பை, துணிப்பை போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இது பெருமளவில் உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேநேரம் மருத்துவரீதியாக இது மக்களுக்கு எந்த வகையில் நன்மை தரும் என்று மருத்துவர்களிடம் கேட்டோம்.

''பெருகிவரும் தொற்றா நோய்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த இந்தத் தடை கண்டிப்பாக உதவும். அதனால், மிகவும் முக்கியமான,

தேவையான ஒரு விஷயமாக இந்தத் தடையைப் பார்க்கிறேன் '' என்று சொல்லும் சித்த மருத்துவர் சிவராமன் தொடர்ந்து பேசினார்.

''நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில், பிளாஸ்டிக் மட்டுமல்லாமல் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை ஹார்மோன் பாதிப்புகளை உண்டாக்கி மார்பகப் புற்றுநோய் முதல் புராஸ்டேட் புற்றுநோய் வரை ஏராளமான பாதிப்புகளை உண்டாக்குவதாக ஒரு அச்சம் இருக்கிறது. அது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. புற்றுநோய் மட்டுமல்ல சர்க்கரைநோய் வரவும் பிளாஸ்டிசைசர் (Plasticiser) என்ற பொருளே காரணம் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை, நோய் பாதிப்புகள் நம்மை நெருங்கவிடாமல் இருக்க உதவும். 

பிளாஸ்டிக் பொருள்கள்மீது அரசு தடை விதித்தாலும், அதைப் பின்பற்ற வேண்டியது மக்களாகிய நம் கைகளில்தான் இருக்கிறது. ஒவ்வொருமுறை கடைக்குச் செல்லும்போதும் அவர்கள்தான் துணிப் பைகள் தரவேண்டும் என்று எதிர்பார்க்காமல், எந்தப் பொருளை வாங்கச் சென்றாலும், அதற்கேற்ப நம் கையோடு துணிப்பைகளை கொண்டு சென்றாலே பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகத் தடுத்துவிட முடியும். ஒரு மாதத்துக்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதாக ஒரு கணக்கீடு இருக்கிறது. அது எரிக்கப்படும்போது அதிலிருக்கும் டையாக்சின் (Dioxin) காரணமாக ஏராளமான சுவாசப் பிரச்னைகள் உண்டாகின்றன. 

அதேபோல, பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணில் அடைத்துக்கொண்டு, மணல்பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடை செய்துவிடுகின்றன. இந்த மணல் பூஞ்சைகள்தான் தாவரங்களின் வேருக்குத் தேவையான சத்துகளைக் கொடுப்பவை. அவற்றின் வளர்ச்சி தடைபடுவதால்,  சத்துக்கள் இல்லாத தானியங்கள்தான் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றைச் சாப்பிடுவதால், நம் உடல் ஆரோக்கியம் பெறாது. எனவே, அனைத்துநிலைகளிலும் நமக்கு ஆபத்தாக இருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கைவிடுவது நமக்கும், நம் எதிர்காலத் தலைமுறைக்கும் ஏராளமான நன்மைகளை அளிக்கும்'' என்கிறார் சிவராமன். 

இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் மகாதேவனிடம் கேட்டபோது,

''பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள ரசாயனங்களால்,  சாதாரண வயிற்றுப் பிரச்னைகள் முதல் குடல் புற்றுநோய் வரை ஏற்படுகின்றன'' என்று கூறிய அவர்...

''பிளாஸ்டிக் பொருள்களில் இருக்கும் `டைஈதைல் லெக்ஸைல் ப்தலேட்' (Diethylhexyl phthalate - DEHP), `பாலிவினைல் குளோரைடு' (Polyvinyl chloride - PVC) போன்ற கார்சினோஜென்கள் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை. சூடான உணவுகளை பிளாஸ்டிக் பை அல்லது டப்பாக்களில் வைக்கும்போது, பிளாஸ்டிக் உருகி, அதிலுள்ள மெர்க்குரி, காப்பர் போன்ற வேதிப்பொருள்கள் உணவுப் பொருள்களுடன் கலந்துவிடுகின்றன. அந்த உணவைச் சாப்பிடுவதால், வயிற்றுப்பிரச்னைகள் உண்டாகின்றன. அது தொடரும்போது புற்றுநோய் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல பிளாஸ்டிக்கில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உடலில் தங்கிவிடுகின்றன. இதுவும் உடலுக்கு நல்லதல்ல. முக்கியமான இதுபோன்ற ரசாயனங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடுகின்றன. ரசாயனங்கள் கலந்த உணவுகளைக் கர்ப்பிணிகள் சாப்பிடும்போது குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 

பிளாஸ்டிக் கவர்கள், கப்கள் போன்ற பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பொருள்கள் அடிப்படையிலேயே சுகாதாரமற்றவை. அவற்றை

நீரில் சுத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்துவதால் ஏராளமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகின்றன. அதனால் நாம் உணவு உண்ண வாழை இலை போன்ற இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தலாம். வாழை இலையில் இருக்கும்  'பாலிபீனால்', நேச்சுரல் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மையைக் கொண்டவை. இதனால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச்சக்தி கிடைக்கும். இலைகள் மறுசுழற்சிக்கும் ஏற்றவை என்பதால் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லை'' என்கிறார் மகாதேவன். 

இறுதியாக, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத்திடம் கேட்டபோது,

``பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முறைப்படுத்தியிருக்க வேண்டுமே தவிர முழுமையாகத்  தடை செய்திருக்கக் கூடாது'' என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார். 

``சிறுவியாபாரிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளும் கவர்களும் எளிதாக மக்கிவிடக் கூடியவை. ஆனால், அதற்குத் தடை விதித்தவர்கள் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய இரண்டு, மூன்று அடுக்குகளுடன் கூடிய மக்காத பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கவில்லை. அதனால் பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாக இந்தத் தடை இருக்கிறது. 

இனிவரும் காலங்களில் முழுமையாக பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது நடக்காத ஒன்று. மருத்துவத் துறையில் பிளாஸ்டிக் பொருள்களின் தேவை அதிகம் இருக்கிறது. அதனால், அதன் ஆபத்து குறித்தும், தேவையற்ற பயன்பாட்டைக் குறைப்பது குறித்தும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். உணவகங்கள், விடுதிகளில் வாழை இலை, மந்தாரை இலை போன்றவற்றைப் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தியிருக்கவேண்டும். அதேவேளையில், பிளாஸ்டிக்கை முழுமையாகத் தடை செய்திருக்கக் கூடாது'' என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.

பின் செல்ல