Published:Updated:

ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, எம்பிவி... இதில் எந்த கார் வாங்கலாம்? - வாசகர் கேள்வி பதில்கள்!

ஆல்ட்டோ 800 காரில் இருக்கும் பெட்ரோல் இன்ஜின், மாருதி 800 காரில் இருக்கும் அதே 3 சிலிண்டர் இன்ஜின்தான்; எனவே இது காலத்துக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டிருந்தாலும், ஓட்டுதலில் வியக்கத்தக்க வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம்!

ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, எம்பிவி... இதில் எந்த கார் வாங்கலாம்? - வாசகர் கேள்வி பதில்கள்!
ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, எம்பிவி... இதில் எந்த கார் வாங்கலாம்? - வாசகர் கேள்வி பதில்கள்!

`பணி நிமித்தமாக, தினசரி பைக்கில் 100 கிமீ தூரம் பயணிக்கின்றேன். தற்போது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, புதிதாகக் கார் வாங்க முடிவெடுத்திருக்கிறேன். குறைவான பராமரிப்புச் செலவுகள் - நல்ல மைலேஜ் - நீடித்த ஆயுள் ஆகியவற்றைக் கொண்ட டீசல் கார்தான் வேண்டும். டியாகோ, ஸ்விஃப்ட், எட்டியோஸ் லிவா ஆகியவற்றில் எது பெஸ்ட்?’  

- பி. ராம்குமார், சென்னை

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கார்கள் அனைத்துமே 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட ஹேட்ச்பேக் கார்கள் என்றாலும், வெவ்வேறு செக்மென்ட்டைச் சேர்ந்தவை. இதில் டியாகோ விலை குறைவான காராகவும், ஸ்விஃப்ட் விலை அதிகமான காராகவும் இருக்கிறது. Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய எட்டியோஸ் லிவா, பிராக்டிக்கல் காராக இருப்பினும் வசதிகளில் பின்தங்குவதுடன் பழைய மாடலாகவும் இருக்கிறது. கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க காராக டியாகோ ஈர்க்கிறது என்றாலும், இங்கிருப்பதிலேயே பவர் குறைவான கார் இதுதான்! எனவே உங்களுக்கு நெடுஞ்சாலைப் பயணங்கள் அதிகம் என்றால், இது பெரிய நெருடலாக இருக்கும். மாருதி சுஸூகி கார்களுக்கான அத்தனை பலத்துடன் ஸ்டைலான காராகவும் ஸ்விஃப்ட் அசத்துகிறது. இதை ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துபார்க்கவும். உங்கள் பட்ஜெட்டை நீங்கள் சொல்லவில்லை என்பதால், ZDi வேரியன்ட் நல்ல சாய்ஸாக இருக்கும்.

`நான் கடந்த 7 ஆண்டுகளாக, ரேபிட் டீசல் காரைப் பயன்படுத்தி வருகிறேன். இதை எக்ஸ்சேஞ்ச்சில் கொடுத்துவிட்டு, வேறு கார் வாங்க உள்ளேன். சிட்டியின் டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லை. ஆனால், எனக்கு வெர்னாவில் இருக்கும் CVT, சன் ரூஃப், வென்டிலேட்டட் முன்பக்க சீட் போன்ற மாடர்ன் வசதிகள் பிடித்திருக்கிறது. இன்றுமே ஸ்கோடா மீது எனக்குக் காதல் உண்டு. என்றாலும், அதில் DSG தவிர ஏதும் பெரிய புதுமை ஏதும் இல்லை. எனக்கான தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.’

- சரவணக்குமார், இமெயில்

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வெர்னாவே சரியான சாய்ஸாக இருக்கிறது. ஆனால், ஓட்டுதல் அனுபவத்தில் நீங்கள் சொன்னபடியே ரேபிட்தான் முன்னிலை வகிக்கிறது. அதனுடன் ஒப்பிடும்போது மாடர்ன் டிசைன், ஸ்டைலான கேபின், அதிக வசதிகள், பவர்ஃபுல் இன்ஜின், சிறப்பான டீலர் நெட்வொர்க் - ரீசேல் மதிப்பு என ஆல்ரவுண்டராக வெர்னா கவர்கிறது. ஒருமுறை காரை டெஸ்ட் டிரைவ் செய்யவும்.

`முதன்முறையாகக் கார் வாங்க முடிவெடுத்துள்ளேன். எனது பட்ஜெட் 4-7 லட்ச ரூபாய். குறைவான பராமரிப்புச் செலவுகள் கொண்ட கார் வேண்டும்.’

- சந்தோஷ்,  இமெயில்

ஆல்ட்டோ - க்விட் - டியாகோ - டட்ஸன் கோ - செலெரியோ/வேகன் ஆர் - சான்ட்ரோ என நிறைய ஆப்ஷன்கள், உங்கள் பட்ஜெட்டில் இருக்கின்றன. 7 லட்ச ரூபாய் வரை பட்ஜெட் இருப்பதால், க்விட் மற்றும் ஆல்ட்டோ கார்களைத் தவிர்த்துவிடலாம். முதல் முறையாகக் கார் வாங்குபவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாருதி சுஸூகி வேகன்-ஆர், புதிய அவதாரத்தில் வந்திருக்கிறது. சான்ட்ரோ நல்ல சாய்ஸாக இருப்பினும், விலை மற்றும் வெயிட்டிங் பிரியட் அதிகமாக உள்ளது. முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட அவதாரத்தில் கிடைக்கும் டட்ஸன் கோ, ரீசேல் மதிப்பு - டீலர் நெட்வொர்க் ஆகியவற்றில் பின்தங்கிவிடுகிறது. செலெரியோ டிசைன், வசதிகளில் பழையதாக இருக்கிறது. Big Car Feel தரும் டியாகோ, இன்ஜினில் சொதப்புகிறது. ஒட்டுமொத்தமாக, சான்ட்ரோ அல்லது டியாகோவில் இருந்து ஒன்றை நீங்கள் டிக் அடிக்கலாம்.

`சிறப்பான ஓட்டுதல் அனுபவம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடனான காம்பேக்ட் எஸ்யூவி அல்லது செடான் வேண்டும். பட்ஜெட் 15 லட்ச ரூபாய். மாதத்துக்கு 1,500 கிமீ தூரம் பயன்படுத்துவேன்.’

- ரமணா பாலாஜி. எஸ், சென்னை.

உங்கள் காரின் மாதாந்திர பயன்பாட்டை வைத்துப் பார்க்கும்போது, பெட்ரோல் கார் ஏற்புடையதாக இருக்கும். எனவே செடான் என்றால் சிட்டியையும், எஸ்யூவி என்றால் எக்கோஸ்போர்ட்டையும் நீங்கள் பரிசிலிக்கலாம். டீசல் கார் வேண்டுமென நினைத்தால், செடானில் வெர்னாவையும், காம்பேக்ட் எஸ்யூவி என்றால் நெக்ஸானையும் லைக் செய்யலாம்.

`நான் கடந்த 10 ஆண்டுகளாக, மாருதி சுஸூகி 800 காரை ஓட்டி வருகிறேன். தற்போது 4 லட்சத்தில் கார் வாங்க விரும்புகிறேன். எதை வாங்குவது என்பதில் ஒரே குழப்பம்.’

- ஶ்ரீராம் சுராஜ், இமெயில். 

நீங்கள் ஏற்கெனவே மாருதி சுஸூகி காரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது, ஆல்ட்டோ உங்களுக்கான காராக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதில் இருக்கும் இன்ஜின், மாருதி 800 காரில் இருக்கும் அதே இன்ஜின்தான்; எனவே இது காலத்துக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டிருந்தாலும், ஓட்டுதலில் வியக்கத்தக்க வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம். மற்றபடி மாருதி 800 உடன் ஒப்பிடும்போது இடவசதி, சிறப்பம்சங்கள், டிசைன், பராமரிப்புச் செலவுகள், ரீ-சேல் மதிப்பு ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறது ஆல்ட்டோ. இதே விலையில் கிடைக்கும் க்விட்டும் நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

`எனக்கு எஸ்யூவிகள் என்றால் மிகவும் பிடிக்கும். யூஸ்டு கார் மார்க்கெட்டில் டஸ்ட்டர் அல்லது எக்கோஸ்போர்ட் ஆகியவற்றில் ஒன்றை வாங்க முடிவெடுத்திருக்கிறேன். டஸ்ட்டரின் AMT மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் செம என்றால், எக்கோஸ்போர்ட்டின் மாடர்ன் ஸ்டைல் மற்றும் வசதிகள் வாவ். இரண்டில் எந்த டீசல் மாடலை வாங்கலாம்?’

- பீட்டர் எட்வின் ராஜ், திருச்சி.

நீங்கள் குறிப்பிட்ட இரண்டு மாடல்களின் பேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய வெர்ஷன்களையே, யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிகமாகப் பார்க்கலாம். டஸ்ட்டரில் ஆட்டோமேட்டிக்/4WD ஆகியவற்றைச் சேர்த்தபடி வாங்க முடியாது. இந்த மாடல்களைக் கண்டுபிடிப்பதும் கொஞ்சம் சிரமம்தான். ஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் உடனான கார் வேண்டுமென்றால், இரண்டுமே நல்ல சாய்ஸ்தான். பிராக்டிக்காலிட்டி மற்றும் மெக்கானிக்கல் பேக்கேஜிங்கில் டஸ்ட்டர் அசத்தினால், வசதிகள் & ஸ்டைலில் எக்கோஸ்போர்ட் வெல்கிறது. எனவே தேவைக்கேற்ப முடிவெடுக்கவும். 

`கடந்த மூன்று வருடங்களாக, வேகன்-ஆர் காரைப் பயன்படுத்தி வருகிறேன். தற்பொழுது விட்டாரா பிரெஸ்ஸா அல்லது வெர்னா ஆகியவற்றில் ஒன்றை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். இந்த இரண்டு வாகனத்தில் எந்த வாகனம் சிறந்தது. வசதிகள், ரீசேல் மதிப்பு, ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றில் சிறந்தது எது? மாதத்துக்கு 600 கிமீ வரை பயணம் செய்வேன் என்பதால், பெட்ரோல் அல்லது டீசல் ஆகியவற்றில் எந்த மாடலை வாங்கலாம்?’

- அனஸ், ராமநாதபுரம். 

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, பெட்ரோல் கார் ஓகே. இதனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கார்களில் ஒன்றான விட்டாரா பிரெஸ்ஸா இதிலிருந்து வெளியேறிவிடுகிறது. இதில் டீசல் இன்ஜின் மட்டும் இருப்பதே அதற்கான காரணம். வெர்னாவின் பெட்ரோல் இன்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. 1.4 லிட்டர்/1.6 லிட்டர் என இரு இன்ஜின் ஆப்ஷன் இருப்பது ப்ளஸ். எனவே உங்கள் பயன்பாடு நகரத்துக்குள் மட்டுமே என்றால், 1.4 லிட்டர் மாடல் ஓகே; நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர் என்றால் 1.6 லிட்டர் மாடல் ஏற்றதாக இருக்கும். ஆனால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, மைலேஜ் விஷயத்தில் வெர்னா கொஞ்சம் பின்தங்கிவிடுகிறது. சிட்டி நல்ல மாற்றாக இருக்கலாம்.

`நான் கடந்த 6 ஆண்டுகளாக, போலோ 1.2 டீசல் காரை ஓட்டி வருகிறேன். தற்போது புதிய கார் வாங்க உள்ளேன் என்றாலும், இதே காரை இன்னும் எவ்வளவு நாள்கள் பயன்படுத்தலாம்? ஒரு டீசல் காரின் சராசரி ஆயுள் எவ்வளவு?’

- அரவிந்த், பெங்களூரு 

மாடர்ன் டீசல் கார்களைப் பொறுத்தவரை, முறையான பராமரிப்பு இருந்தாலே, அவற்றை 1 லட்சம் கிமீ வரை பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் வைத்துக் கொள்ளமுடியும். ஆனால், அதன்பின்னே காரின் வயது மற்றும் தேய்மானம் காரணமாக, பராமரிப்புச் செலவுகள் வழக்கத்தைவிட அதிகமாக வருவதைப் பார்க்கலாம். எனவேதான் பலர் 3 அல்லது 5 வருடத்துக்கு ஒருமுறை காரை மாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் கரெக்ட்டான சர்வீஸ் ஹிஸ்டரியைக் கொண்ட கார் என்றால், தாராளமாக அதை வைத்துக் கொள்ளலாம். 

`வங்கிக் கடனில் புதிதாகக் கார் வாங்க உள்ளேன். எப்பொழுதாவதுதான் அதனைப் பயன்படுத்துவேன் என்றாலும், எனக்கு மைலேஜ் முக்கியம். செலெரியோ, க்விட், KUV 1OO ஆகியவற்றில் எதை வாங்கலாம்?’

- இ. ராஜேஸ்கண்ணன், ராஜபாளையம்

நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, இது உங்களின் முதல் காராக இருக்கும் எனத் தோன்றுகிறது. எனவே நல்ல மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்புச் செலவுகளுக்குப் பெயர்பெற்ற ரெனோ க்விட் அல்லது மாருதி சுஸூகி செலெரியோ ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வது நலம். மினி எஸ்யூவி தோற்றத்தில் க்விட் கவர்ந்தால், வழக்கமான டிசைனில் செலெரியோ செட்டில் ஆகிவிட்டது. இரண்டிலுமே 1000 சிசி இன்ஜின்தான் என்பதால், பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் விஷயத்தில் இவை ஏறக்குறைய சமமாகவே இருக்கும். இரண்டுமே ரீ-சேல் மதிப்பிலும் ஓரளவுக்கு ஸ்கோர் செய்கின்றன. எனவே டெஸ்ட் டிரைவ் செய்துபார்த்து தெளிவாக முடிவெடுக்கவும். இரண்டுக்குமே ஆஃபர்கள் இருக்கின்றன.

`நான் யூஸ்டு கார் மார்க்கெட்டில், வெர்னா 1.6 SX டீசல் கார் ஒன்றைப் பார்த்துவைத்திருக்கிறேன். 62 ஆயிரம் கிமீ ஓடியிருக்கும் அந்தக் காருக்கு, 7.5 லட்ச ரூபாய் விலை சொல்கிறார் அதன் உரிமையாளர். சிறப்பான கண்டிஷனில் இருக்கும் அதற்கு, இந்த விலை ஓகேவா?’

- டி. வினோத் குமார், இமெயில்

நீங்கள் சொல்லியிருக்கும் வெர்னாவை, 7 லட்ச ரூபாய்க்கு வாங்கலாம். ஏனெனில் கார் மெக்கானிக்கலாகவும் எலெக்ட்ரிக்கலாகவும் சிறப்பாக இருக்கிறது என நீங்கள் சொன்ன காரணத்துக்காக மட்டுமே இந்த விலை! ஆனால், காரின் சர்வீஸ் ரெக்கார்டு, விபத்து அல்லது வெள்ள ப் பாதிப்பு, இன்சூரன்ஸ் க்ளெய்ம் ஹிஸ்டரி ஆகியவற்றை செக் செய்துவிட்டு, காரை டெஸ்ட் டிரைவ் செய்துபார்த்துவிட்டு முடிவெடுக்கவும். 

`நான் கடந்த 3 ஆண்டுகளாக, எக்ஸென்ட் பெட்ரோல் காம்பேக்ட் செடான் காரைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது மிட் சைஸ் செடான் வாங்கும் முடிவில் இருக்கிறேன். சிட்டி, சியாஸ், வெர்னா, வென்ட்டோ, யாரிஸ் ஆகிய கார்களை டெஸ்ட் டிரைவ் செய்தும் பார்த்துவிட்டேன். இதில் சியாஸ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெர்னாவும் ஓகேதான். எனது மாதாந்திரப் பயன்பாடு மிகவும் குறைவு என்பதால் (600கிமீ), பெட்ரோல் காரே போதும்.’

- பார்த்திபன், வேலூர்.  

மிட் சைஸ் செடான் செக்மென்ட்டில் அதிகளவில் விற்பனையாகும் மாடல் சியாஸ்தான். இதன் பேஸ்லிஃப்ட் மாடல் 2018 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் SHVS தொழில்நுட்பத்துடனான புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை மாருதி சுஸூகி பொருத்தியுள்ளது. இது முந்தைய மாடலைவிட மைலேஜ் மற்றும் பவர் விஷயத்தில் அசத்தினாலும், வெர்னாவுடன் ஒப்பிடும்போது பர்ஃபாமென்ஸில் பின்தங்கிவிடுகிறது. எனவே பவர்ஃபுல்லான பெட்ரோல் கார் வேண்டும் என்றால், நீங்கள் வெர்னாவைத் தேர்வு செய்யலாம்.