Published:Updated:

`ஆரம்பத்தில் தயக்கமா இருந்துச்சு; இப்போ எல்லாரும் பாராட்டுறாங்க!’ - நெகிழும் கோவை 'வைரல்' கண்டக்டர்

"இந்த அணுகுமுறையால் வேலை ரொம்ப ஈஸியா இன்னும் அழகா ஆகிடுச்சி. நான் பேசுறதைப் பார்த்துட்டு பலர் எழுந்து நின்னு டிக்கெட் வாங்குறாங்க. இறங்கியதும் இளைஞர்கள் என்கூட செல்ஃபி எடுத்துக்கறாங்க. ரொம்பவும் மரியாதையா நடத்துறாங்க."

`ஆரம்பத்தில் தயக்கமா இருந்துச்சு; இப்போ எல்லாரும் பாராட்டுறாங்க!’ - நெகிழும் கோவை 'வைரல்' கண்டக்டர்
`ஆரம்பத்தில் தயக்கமா இருந்துச்சு; இப்போ எல்லாரும் பாராட்டுறாங்க!’ - நெகிழும் கோவை 'வைரல்' கண்டக்டர்

ண்டக்டர் சிவசண்முகம்... கடந்த சில நாள்களாக வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக்கில் அதிகமாக வலம்வரும் முகம். ``இவர மாதிரி ஒரு கண்டக்டரைப் பார்த்திருக்க மாட்டீங்க...’’ என்றபடி அவரைப் பற்றிப் பகிரப்படும் வீடியோ செம வைரல். கண்டக்டர் என்ற வார்த்தையைக் கேட்டதுமே நமக்குள் எழும், சில்லறை கொடுக்காத சிடுசிடு சித்திரத்தை மறக்கடித்து மனதில் ஒட்டிக்கொள்கிறார், கோவை கண்டக்டர் சிவசண்முகம்.

கோவையிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் கண்டக்டராகப் பணிபுரியும் சிவசண்முகம், பேருந்தில் பயணிகள் ஏறியதும் பேருந்து புறப்படுவதற்கு முன்பாக, ``எல்லோருக்கும் வணக்கம்...’’ என்றபடி பயணிகள் முன்பு தோன்றுகிறார். கண்டக்டர் வணக்கம் சொல்வதைக் கேட்டதும் வியப்போடு அவரை நோக்குகிறார்கள் பயணிகள். சாந்தமான முகபாவனையோடு அவர் தன் பேச்சைத் தொடர்கிறார்... ``பேருந்துக்குள் குப்பைகளைப் போடாமல், பேருந்தைச் சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள். வழியில் யாருக்காவது வாந்தி வந்தால் என்னிடம் சொல்லுங்கள். பை தருகிறேன், பயன்படுத்திக்கொள்ளுங்கள். புளிப்பு மிட்டாய் தருகிறேன், பயன்படுத்திக்கொள்ளுங்கள்’’ என்று அவர் பயணிகள் மீதும் பேருந்தின் மீதும் அக்கறையோடு பேசுவதைக் கேட்டு அனைவரும் சிலிர்த்துப்போகிறார்கள்.

எவ்வளவு கேட்டாலும் சில கண்டக்டர்கள் கட்டண விவரங்களைச் சொல்லாமல், நம்மை ஏதோ எதிரியைப்போலப் பார்ப்பார்கள். சிலர் காது கேட்காததுபோல இருப்பார்கள். பலர் அலுத்துக்கொண்டு சொல்வார்கள். ஆனால், இவரோ ஒவ்வோர் ஊருக்கும் இவ்வளவு ரூபாய் என்று பட்டியல் போட்டு கட்டண விவரங்களைச் சொல்கிறார். ``முடிந்த அளவுக்கு சில்லறையாகக் கொடுத்து உங்களுக்குச் சேவை செய்ய எங்களுக்கு உதவுங்கள்’’ என்று கோரிக்கை வைக்கிறார். அடுத்ததாக, ஒவ்வொரு நோக்கத்தோடும் பயணம் செய்யும் பயணிகளின் பயணம் இனிதாக அமைய தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார். இறுதியாகப் பயணத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி சொல்லிவிட்டு டிக்கெட் கிழிக்க ஆரம்பிக்கிறார்” - இது சின்ன விஷயம்தான். ஆனால், சிவசண்முகம் தன் வேலையின் மீது கொண்டுள்ள காதலும் ஈடுபாடும் சின்னது கிடையாது.  அதனால்தான் அவர் வைரல் ஆக்கப்பட்டுள்ளார்.

இந்த அன்பான அணுகுமுறை குறித்து சிவசண்முகத்திடம் பேசினோம், “எனக்குச் சொந்த ஊரு கோயம்புத்தூர் மாவட்டம், பேரூரை அடுத்த ராமசெட்டிப்பாளையம். 1985-லிருந்து கண்டக்டரா இருக்கேன். 10 வருஷம் ப்ரைவேட் பஸ்ஸில் ஓடினேன். 95-லிருந்து கவர்மென்ட் பஸ். எனக்கு, 'ஏதாவது பப்ளிக் சர்வீஸ் பண்ணவேண்டும்’னு ஆசை. போலீஸில் சேரலாம்னு போனேன். வயசு பத்தாது’னு திரும்ப அனுப்பிட்டாங்க. வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் கண்டக்டர் தொழில் கண்ணுக்குத் தெரிஞ்சது. மேலோட்டமா பார்த்தா, இது சாதாரண வேலையா தெரியலாம். தினமும் ஏதாவது ஒரு பிரச்னையை ஃபேஸ் பண்ண வேண்டும். ஸ்டாப் வர்றதுக்குள்ள டிக்கெட் கிழிக்கணும். ஸ்டேஜ் தாண்டுறதுக்குள்ள என்ட்ரி போடணும்னு டவுன் பஸ்ல வேலை டைட்டா இருக்கும். வேலையைக்கூட சமாளிச்சுடலாம். ஆனா, வம்பு இழுக்கறதுக்குன்னே வர்ற பயணிகளை எப்படிச் சமாளிக்கிறது? நானும் ஆரம்பத்தில் ரொம்ப சூடாதான் இருந்தேன். சண்டைக்கெல்லாம் போயிருக்கிறேன். ஆனா, நாள்கள் ஆக ஆகத்தான் ஒரு தெளிவு கிடைச்சது. 

நான், 'ரொம்ப கரெக்ட்டா இருக்கணும்’னு நினைக்கிற ஆள். பள்ளிக் குழந்தைகளைப் படியில் நிக்கிறதுக்கு அனுமதிக்கவே மாட்டேன். அதேபோல, அவசரப்படுத்தாமல் பள்ளிக் குழந்தைகளையும் பள்ளி ஆசிரியர்களையும் நின்னு ஏத்திக்கிட்டுப் போவேன். அதனாலேயே குழந்தைகளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். புது டிரஸ் போட்டு வர்றத வைச்சு, குழந்தைகளுக்கு பிறந்தநாள்னு கண்டுபிடித்து அவங்களுக்கு ஏதாவது பரிசு வாங்கிக் கொடுப்பேன். பஸ்ல பாட்டு பாடச் சொல்வேன். எனக்கும் ஹேப்பி. குழந்தைகளுக்கும் ஹேப்பி. ஆனா, குடிச்சுட்டு பஸ் ஏறுகிறவர்களோடுதான் பெரும் தலைவலி. சமாளிக்கவே முடியாது. பலர் சில்லறை கொடுக்க மாட்டாங்க. இன்னும் சிலர், ஏதோ நினைப்பில் டிக்கெட் எடுக்காமல் உட்கார்ந்திருப்பாங்க. 'அங்க நிறுத்தல, இங்க நிறுத்தலை’னு சண்டை போடுவாங்க. இதையெல்லாம் தவிர்க்க என்ன வழியென்று யோசித்தேன்.  

அப்போதான் இந்த ஐடியாவைப் பிடிச்சேன். பயணிகளும் ஆயிரத்தெட்டு தலைவலியில் வருவாங்க. நாமும் ஆயிரத்தெட்டு டென்ஷன்ல இருப்போம். அதைக் கடந்து அவங்களுக்குள்ள நாம போகணும்னா... பஸ் புறப்படுகிறதுக்கு முன்னாடியே பயணிகளிடம் மனசு திறந்து பேசிடணும்னு முடிவெடுத்தேன். எனக்கு இப்படியெல்லாம் பேச வராது. இதற்காக வீட்டில் உட்கார்ந்து ரெண்டு மூணு நாள் பிராக்ட்டீஸ் பண்ணினேன். ஆரம்பத்தில் பேசும்போது தயக்கமா இருந்தது; ஆனா, இப்போ எக்கச்சக்க பாராட்டு. அப்படி என்னடா பண்ணிட்டோம்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு. இந்த அணுகுமுறையால் வேலை ரொம்ப ஈஸியா இன்னும் அழகா ஆகிடுச்சி. நான் பேசுறதைப் பார்த்துட்டு பலர் எழுந்து நின்னு டிக்கெட் வாங்குறாங்க. இறங்கியதும் இளைஞர்கள் என்கூட செல்ஃபி எடுத்துக்கறாங்க. ரொம்பவும் மரியாதையா நடத்துறாங்க. நாம இன்னொருத்தவங்களுக்கு நேர்மையோடு கொடுக்கிற மரியாதையும் அன்பும் பல மடங்கா திரும்பக் கிடைக்கும்’னு எனக்குப் புரிஞ்சிடுச்சு" என்றவர்,

``ஒருமுறை, குடிபோதையில் இருந்த ரெண்டு பசங்க பஸ்ல ஏர்றதுக்கு முன்னாடியே கீழே நின்னு என்கிட்ட வம்பிழுத்துட்டு இருந்தாங்க. நான் எவ்வளவோ சமாதானமா பேசியும் அவங்க அமைதியாகலை. ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே இருந்தாங்க. நான் அப்படியே எதுவும் சொல்லாமல் ஒதுங்கிட்டேன். பஸ்ல ஏறினாங்க. பஸ் புறப்பட்டுச்சு, நான் என்னுடைய உரையைப் பேசி முடிச்சதும்... அவங்க இரண்டுபேரும் குற்ற உணர்வோடு எழுந்து என்கிட்ட வந்து, `சார்... எங்களை அடுத்த ஸ்டாப்ல இறக்கிவிட்ருங்க'னு சொன்னாங்க. 'ஏம்பா என்னாச்சு’னு கேட்டேன். 'இல்ல... சார் நாங்க என்னமோனு நினைச்சோம். தப்பு பண்ணிட்டோம். இந்த பஸ்ல வர்றதுக்கு எங்களுக்குத் தகுதி இல்ல சார். ப்ளீஸ் எங்களை இறக்கிவிட்ருங்க'னு சொன்னாங்க. அவங்க தங்களுடைய தவற்றை உணர்ந்துட்டாங்க. தண்டனைத் தேவை இல்லைதான். ஆனா, அந்த உணர்விலேயே அவங்களைப் பயணிக்க வைக்கிறதில் எனக்கு விருப்பமில்லை. அதனால, அடுத்த பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுவிட்டேன்" என்றார்.

தன்னுடைய அணுகுமுறையால், தான் சந்தித்த பிரச்னைகளை விரட்டியது மட்டுமல்ல... தனக்கென ஓர் அடையாளத்தையும் பதித்திருக்கிறார் சிவசண்முகம். 

ரைட்... ரைட்...!