Published:Updated:

தனிநபர் குற்றப் பின்னணியை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்! - இணையதள சேவை அறிமுகம்

தனிநபர் குற்றப் பின்னணியை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்! - இணையதள சேவை அறிமுகம்
தனிநபர் குற்றப் பின்னணியை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்! - இணையதள சேவை அறிமுகம்

தனிநபர் குற்றப் பின்னணியைத் தெரிந்துகொள்ள காவல் நிலையம் செல்லத் தேவையில்லை. இனி ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தனியார் நிறுவனம் மற்றும் வீட்டு வேலைக்கு ஆட்கள் சேர்க்கும்போது அவர்களைப் பற்றிய  குற்றப் பின்னணியை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் வகையில் காவல்துறை புதிய இணையவழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டு வாடகைதாரர்களின் விவரங்களையும் இந்த இணையதள சேவை மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும். `காவல் முன் நடத்தைச் சரிபார்ப்பு சேவை' என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை இந்த இணையவழி சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இணையதள சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிமுகப்படுத்தி வைத்து, அதைப் பயன்படுத்தும் விதம் குறித்தும் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக இந்த விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். இதில் தனிநபர் விவரம், வேலையாட்கள், வாடகைதாரர்கள்,  வீட்டு வேலையாட்கள் விவரங்கள் போன்றவற்றை சரி பார்த்துக்கொள்ளலாம். மேற்படி சேவையைப் பெறுவதற்காக தனிநபராக இருந்தால் ஒரு விண்ணப்பத்துக்கு 500 ரூபாயும், தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்துக்கு 1,000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இணையதளம் வழியாகவே கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறையில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். காவல்துறை சரிபார்ப்பு சேவையின் மூலம் விவரம் சரி பார்க்கப்படவேண்டிய தனிநபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக காவல்துறையின் வசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் மேற்படி நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்களை மட்டுமே இந்த சேவையின் மூலம் சரிபார்க்கலாம்.

விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் காவல் நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும். காவல்துறை சரிபார்ப்பு சேவைக்காகப் பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து, அதற்கான அறிக்கையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். காவல் சரிபார்ப்பு அறிக்கையில் உள்ள  க்யூ ஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்தும் அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள வெரிபிகேஷன் என்ற பகுதியின் மூலமும் இதன் நம்பகத் தன்மையை சரிபார்த்துக்கொள்ளலாம்.
பி.வி.ஆர் என்னைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

இந்தச் சேவை தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் அதற்கான விடைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதைப் பற்றி காவல்துறை சரிபார்ப்பு சேவையில் உள்ள பின்னூட்டம் என்ற பகுதியைப் பயன்படுத்தி இணையதளம் வழியாகப் புகார் அளிக்கலாம். மேற்படி பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர ஆணையர் மற்றும் சென்னை மாநகர உதவி ஆணையர்கள் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்குத் தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும். விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் மேற்படி விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதற்காகச் செலுத்தப்பட்ட தொகை திரும்ப  அளிக்கப்படமாட்டாது. மேலும், காவல்துறைக்கு தவறான தகவல்களைத் தருவது குற்றமாகும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.