Published:Updated:

பெண்களைக் கூர்ந்து கவனிப்பேன்!

பெண்களைக் கூர்ந்து கவனிப்பேன்!

##~##

துரை லட்சுமிசுந்தரம் ஹால் நிரம்பி வழிந்தது. பரதநாட்டியத்தைக் காண இவ்வளவு கூட்டமா என்று வியந்தவண்ணம் நாமும் நுழைந்தோம். அனைவரின் கண்களிலும் வியப்பும் ஆவலும் ததும்பியது!

 புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஒவ்வொரு அயிட்டமும் அப்ளாஸுடன் முடிந்தது. பந்தநல்லூர் பாணியில் ஜெயதேவர் அஷ்டபதி, அன்னமாச்சாரியாருடைய கிருதிகள், திருமங்கை ஆழ்வாருடைய சிறிய திருமண்டல் என்று புதுப் புது அயிட்டங்களுக்கு அபிநயித்தார் அந்த நர்த்தகி. அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், தில்லானாவையும் விடவில்லை. கால்கள் தாளத்துக்கு ஏற்பக் கவிதை பாட, தியாகேசர் குறவஞ்சியுடன் அன்றைய நடன நிகழ்ச்சி முடிந்தது.

அழகு, நளினம், நிமிடத்தில் மாறும் முகபாவம் என சர்வ லட்சணத்துடன் ஆடிய அந்த நர்த்தகியை நேரில் காணலாம் என்ற ஆவலில் மதுரையில் உள்ள கே.கே. நகரில் இருக்கும் அவர் வீட்டுக்குச் சென்றோம். கதவைத் திறந்து வரவேற்றவரின் முகஜாடை நர்த்தகியின் அண்ணனாக இருக்க வேண்டும் என்று எண்ணவைத்தது. அவரிடம் ''நர்த்தகி நடராஜைக் காண வேண்டும்'' என்ற நமது ஆவலை வெளிப்படுத்த, அவர் சிரித்துக்கொண்டே, ''நான்தான் அந்த நர்த்தகி நடராஜ்!'' என்றார். அதிர்ச்சியில் நமக்கு நா எழவில்லை! ஒரு ஆணா, பெண் வேடத்தில் தோன்றி அவ்வளவு நளினத்துடன் ஆடினார்?!

பெண்களைக் கூர்ந்து கவனிப்பேன்!

அதிர்ச்சியில் இருந்து விடுபடச் சிறிது நேரம் ஆகியது. பிறகு, ''ஆணாக ஆடினால் கூட்டம் சேராது, பாப்புலாரிட்டி கிடைக்காது என்ற காரணத்தினால் பெண் வேடமிட்டு ஆடினீர்களா?'' என்று கேட்டோம்.

அப்படிக் கேட்டதற்கு, துளிகூடக் கோபப்படாமல் சிரித்த முகத்துடன் பேசத் தொடங்கினார்:

''நம்மாழ்வார், பெரியாழ்வார், மாணிக்கவாசகர் எல்லாம் தங்களைப் பெண்ணாக நினைத்துக் கடவுள் மேல் காதல் கொண்டதாகப் பாடியுள்ளனர். மதுரை தெப்பக்குளம் பக்கத்தில் உள்ள 'நடன கோபாலநாயகி ஸ்வாமி’கள் கோயிலுக்கு அருகில்தான் நான் சிறு வயதில் எனது நாட்களைக் கழித்தேன். நடன கோபாலநாயகி ஸ்வாமி - ஆண்டாள்போல் கொண்டை, ஆடை அலங்காரங்களுடன் காலில் சலங்கை கட்டிப் பாசுரங்கள் பாடியே தனது வாழ்நாளைக் கழித்தார் என்ற கதைகள் என்னைப் பெரிதும் பாதித்தன. பரதம் சிவனிடம் இருந்து தோன்றியது. நாயகி பாவத்தில் சிவனை வழிபட வேண்டும் என்ற ஆவலினால் நாயகி பாவத்தை நான் தேர்ந்தெடுத்தேன். இதற்காக நான்

பெண்களைக் கூர்ந்து கவனிப்பேன்!

வெட்கப்படவில்லை. இது மட்டும் அல்லாமல் சின்ன வயசிலேயே எனக்குக் கொலுசுச் சத்தம், மாட்டுச் சலங்கைச் சத்தம் கேட்கும்போது எல்லாம் மனசுக்குள் என்னவோ செய்யும். கொலுசு போட்டுக்கொண்டு நடந்தால் என்ன என்று ஆசையாகக் கூட இருக்கும்.

ஆரம்பத்தில் நான் பெண் வேடத்தில் ஆடியதைக் கண்டு எல்லோரும் கிண்டல் செய்தார்கள். எங்கள் வீட்டிலேயே பலத்த எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால், இப்போது எல்லோரும் பாராட்டுகிறார்கள். நான் பெண்ணாக வேடமிட்டு ஆடுவதைக் கேட்டு, சித்ரா விஸ்வேஸ்வரன் என்னை மிகவும் பாராட்டினார்கள்'' என்றார் பெருமையாக!

சாதாரண குடும்பத்தில் பிறந்ததால், பரதம் கற்க வேண்டும் என்ற இவருடைய ஆசைக்குப் பெற்றோர் இணங்கவில்லை. ஏதாவதொரு பாட்டைக் கேட்கும்போது எல்லாம் ஆட வேண்டும் என்ற ஆசை ஏற்படுமாம். நடன கோபாலநாயகி ஸ்வாமி கோயிலில்தான் யாருக்கும் தெரியாமல் ஆடிப் பார்ப்பாராம். தன் இஷ்டத்துக்கு ஆடிக்கொண்டு இருந்த நடராஜ், வைஜெயந்திமாலா வெளியிட்ட எல்.பி. ரிக்கார்டைக் கேட்டு, அதில் உள்ள அலாரிப்புக்குத் தன் கற்பனையால் அபிநயித்து ஆடியிருக்கிறார். யாரிடமாவது முறையாகக் கற்க வேண்டும் என்ற ஆவலினால் நாமலூர் ஜெயராமனை அணுகியிருக்கிறார். மிகவும் முடியாமல் படுத்திருந்த ஜெயராமன், நடராஜின் ஆர்வம் காரணமாக முறையாகப் பயிற்றுவிக்க ஆரம்பித்திருக்கிறார்!

பெண்களைக் கூர்ந்து கவனிப்பேன்!

''சொன்னா நீங்க நம்புவீங்களோ, இல்லையோ... ஆனால், அவர் சொல்லிக்கொடுத்த ஒவ்வோர் அடவும் எனக்குப் புதுசா தோணலை. இதெல்லாம் நான் எப்பவோ ஆடியிருப்பதுபோல் தோன்றியது. பூர்வ ஜென்மத்தில் நான் இந்தக் கலையைக் கற்றிருப்பது மாதிரி எனக்குத் தோன்றியது'' என்கிறார் நடராஜ்.

''பெண்ணுடைய நளினத்தை ஒரு ஆண், நாட்டியத்தில் காண்பிப்பது என்பது மிகவும் கஷ்டமானது. உங்களுக்கு எப்படிச் சாத்தியமானது?''

''ஒரு ஆண் பெண்ணாகக் காட்டிக்கொள்ள என்றால், பொதுவாக நாணிக் கோணுவது, நிறைய பூவைச் சுற்றிக்கொள்வது, சேலையை இஷ்டத்துக்குப் போட்டுக்கொள்வது, முடியைச் சுருட்டிவிட்டுக் கொள்வது... இப்படியெல்லாம் செய்துகாட்டினால்தான் பெண் என்று நினைக்கிறார்கள். ஆனால், எல்லாப் பெண்களும் நாணிக்கோணுவது கிடையாது. பாவம் மூலம் ஒரு பெண்ணாக ஆடிக் காட்ட வேண்டும் என்பதற்காக, எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் எப்படி முகபாவத்தை மாற்றுகிறார்கள். ஒரு விஷயத்தை எந்த விதத்தில் சொல்கிறார்கள் என்று கூர்ந்துநோக்குவேன். சின்ன வயசிலேயே எந்தப் பாடல் வரியையும் ஒரு பெண் ஆடினால் எப்படி இருக்கும் என்றுதான் என் எண்ணம் ஓடும்'' என்றார்.

சொல்லி முடிக்கும் வரை காத்திருந்த நாம், ''ஒவ்வொரு பெண்ணையும் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், அவர்கள் சண்டைக்கு வர மாட்டார்களா?'' என்றோம்.

சிரித்துவிட்டு, ''அவர்கள் அறியாதபடிதான் கவனிப்பேன்!'' என்கிறார் நடராஜ்.

திருநாகேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்தின்போது நடராஜின் நடனத்தைக் கண்ட காஞ்சிப் பெரியவர், 'நர்த்தகி’ என்று பட்டம் அளித்திருக்கிறார்! மதுரை நடன கோபாலநாயகி கோயிலில் 'நாயகிபாவ ரத்னா’ என்ற பட்டத்தைக் கொடுத்து இவரைக் கௌரவித்துள்ளனர்.

தனது வீட்டிலேயே 'நர்த்தகி நிருத்திய கலாலயா’ என்ற பள்ளியை ஆரம்பித்து உள்ளார். 25 மாணவ - மாணவிகள் தற்சமயம் பயில்கின்றனர். ஆண்களை நாட்டிய வல்லுநர்கள் ஆக்கி நந்தனார், அருணகிரிநாதர், நடனகோபாலநாயகி இவர்களின் நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்பது இவருடைய ஆசை! திருமணம் செய்துகொள்ளாமல் பரதத்துக்கே நடராஜ் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளப்போகிறாராம்!

-தேனமிர்த சியாமளா
படங்கள்: அழகுராமன்

அடுத்த கட்டுரைக்கு