Published:Updated:

``காசு வாங்குறதெல்லாம் குத்தமாச் சொல்லாதீங்க!" - அமைச்சர் துரைக்கண்ணுவின் `அடடே' பதில்!

``காசு வாங்குறதுலாம் ஒரு குத்தமா"... கொந்தளித்த அமைச்சர், திகைத்த விவசாயிகள்!

``காசு வாங்குறதெல்லாம் குத்தமாச் சொல்லாதீங்க!" - அமைச்சர் துரைக்கண்ணுவின் `அடடே' பதில்!
``காசு வாங்குறதெல்லாம் குத்தமாச் சொல்லாதீங்க!" - அமைச்சர் துரைக்கண்ணுவின் `அடடே' பதில்!

`விவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி!' என்ற தலைப்பில் 09.01.2019-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், `திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளின் பெயர்களில் 300 கோடி ரூபாயை முறைகேடாக வங்கியில் கடன் வாங்கியது. அதற்காக விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது' என்ற செய்தியைப் பதிவிட்டிருந்தோம். அதைக்கேட்டு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும், வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடியும் தஞ்சை மாவட்ட விவசாயிகளை நேரில் அழைத்து குறைகளைக் கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் விவசாயிகளை அழைத்து அமைச்சரும், விவசாயிகளும் அப்படி என்னதான் பேசிக் கொள்கிறார்கள் எனத் தெரிந்துகொள்வதற்காக விவசாயிகளுடன் ஒருவராகச் சென்று அமைச்சரைச் சந்தித்தோம். இன்முகத்துடன் வரவேற்ற வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு விவசாயிகளிடம் பேசினார். 

``அந்தச் சர்க்கரை ஆலையில் என்ன பிரச்னை?" என்றார், அமைச்சர் துரைக்கண்ணு. மொத்தமாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்தனர். 

விவசாயிகள் சார்பில் பேசிய தஞ்சை மாவட்ட காவிரிப் பாதுகாப்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்குக் கல்லணை அருகே நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருஆரூரான், ஶ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடமிருந்து பெற்று அரைத்த கரும்புக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 30 கோடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் அறியாமையைப் பயன்படுத்தி விவசாயிகள் பெயரில் எஸ்.பி.ஐ மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளில் முறையே 342 கோடி ரூபாய் கடனைப் பெற்றுள்ளனர். ஆலை நிர்வாகம் கடனைச் செலுத்தாததால், விவசாயிகளின் விலாசத்துக்குச் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வாங்காத கடனுக்குப் பணம் கட்ட சொல்லியிருப்பதால் நாங்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறோம். வாங்காத கடனுக்கு விவசாயிகள் கடனாளியாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆலை நிர்வாகத்துடன், வங்கி அதிகாரிகளும் கைகோத்திருப்பதால் இந்த மோசடிக்கு சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும். 

இதற்குக் காரணமான திருஆரூரான் சர்க்கரை ஆலை மீதும், வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் சர்க்கரை ஆலைகளைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் 2004-2009-ம் ஆண்டு வரையில் அரைத்த கரும்புக்கு பாக்கி வைத்துள்ளது. பணம் தருவதற்கு அந்த ஆலைகள் பெற்றிருக்கின்ற நிலுவைத் தொகையையும் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வரிசையாகக் கோரிக்கைகளை முன் வைத்தார். 

விரிவாகக் கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர், நம்மாழ்வாருக்கு மணி மண்டபத்தை அமைப்பது பற்றிய விவரங்களை முழுமையாகக் கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டார். அதன் பின்னர், நிச்சயமாக அமைத்துவிடலாம் என்று உறுதிமொழி கொடுத்தவர், தனது உதவியாளரிடம் குறிப்புகளை கொடுத்து முதல்வருக்குக் கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்யச் சொன்னவர், `தனியார் ஆலைகள் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதே வேலையாகப் போயிற்று (ஆலை மட்டும்தான் போல). தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகளிடம் ஆலைகள் ஏன் இப்படி நடந்துகொள்கின்றன. 

உடனே வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியை அழைத்தார். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டுப் பேச ஆரம்பித்தார், ககன் தீப் சிங் பேடி. 

``இந்த தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு இதே வேலையாகப் போய்விட்டன. இந்த நிறுவனங்கள் மட்டுமல்ல. இன்னும் நான்கு நிறுவனங்கள் நான்கு ஆண்டுகளாக நிலுவைத் தொகையை வைத்துக்கொண்டு விவசாயிகளிடம் முறைகேடாகவும் நடந்துகொள்கின்றன" என இவர்களுக்கே தெரியாமல் புதிதாக சில நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிட்டார். `என்னடா நாம தீர்வு கேட்டா... இவர் நம்மகிட்டயே திரும்பக் கேட்கிறாரே' என்றபடி விவசாயிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மேலும் தொடர்ந்தார், ககன்தீப் சிங் பேடி.

``கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவைத்தொகை இருப்பதைக்கொடுக்க வேண்டும் என ஆலைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். இதனால், பொங்கலுக்குள் விரைவாக விவசாயிகளுக்கு வந்து சேரும். முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதற்குப் பதில் சொல்ல இயலாது. முறைகேடுகள் பற்றி நானும் கேள்விப்பட்டேன். இது சம்பந்தமாக சர்க்கரை ஆலைகள் முன்வந்து விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், இதுவரை நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை. இதனால் சர்க்கரை ஆலை இயக்குநரிடம் பேசியிருக்கிறேன். அவரும் சர்க்கரை ஆலைகளுக்குக் கெடு கொடுத்திருக்கிறார். இதன்படி அவகாசம் முடிந்தவுடன் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப் போகிறோம். எதற்கும் நீங்கள் (விவசாயிகள்) ஒருமுறை சர்க்கரை ஆலை இயக்குநரிடம் பேசிவிடுங்கள்" என்றார், ககன்தீப் சிங் பேடி.

விவசாயிகள் தங்கள் இறுதிக்கோரிக்கையாக ``கஜா புயலில் மின் மோட்டார்களைச் சரி செய்ய வந்த மின்சார ஊழியர்கள் 5,000 முதல் 10,000 வரை வாங்குகிறார்கள்" என்றனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், ``அதெல்லாம் பேசாதீங்க. இதுவரைக்கும் மின்சார ஊழியர்களில் சிலர் இறந்திருக்கின்றனர். காசு வாங்குகிறதெல்லாம் ஒரு குத்தமாச் சொல்லாதீங்க" என்றார். விவசாயிகள் திகைத்தபடி வெளியேறினர்.

மின்சார ஊழியர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்காமல் வேலைக்கு அமர்த்திய அரசின் தவறுதானே அந்த உயிரிழப்புகளுக்குக் காரணம்? இப்படித் தவறு அரசின் பக்கம் இருக்க, ஏற்கெனவே கஜாவால் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளிடம் பணம் கேட்பது நியாயமா எனத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. இது முதல் கூட்டமும் இல்லை. பிரச்னை இதோடு இது நிற்கப் போவது இல்லை. அத்துடன், இதுபோன்ற அலட்சியமான அரசுகளால் விவசாயிகளின் கஷ்டங்களும் எப்போதுமே தீரப்போவதும் இல்லை.