பிரீமியம் ஸ்டோரி

‘`எங்கே சென்றாலும் யாரைப் பார்த்தாலும், ஹோட்டல் வெய்ட்டரிலிருந்து ஏர்போர்ட் போலீஸ் வரை எல்லோரும் எப்போது 100-வது சதம் அடிப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள்’’ என `சதத்தில் சதம்’ அடித்தபின் பெருமூச்சு விட்டபடி சொன்னார் சச்சின் டெண்டுல்கர். 

இனிமே தங்கம்தான்!

2006, 2007 விம்பிள்டன் ஃபைனலில் தோற்றபின், 2008-ல் மீண்டும் ஃபைனலில் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளத் தயாராக இருந்த நடாலிடம் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது...  நடால் மட்டுமல்ல, 2006, 2007, 2008 ஃபிரெஞ்ச் ஓபன் ஃபைனலில் தோல்வியடைந்து, 2009-ல் ஃபைனலுக்குச் சென்ற ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரிடமும் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. ‘`ஏன்... உங்களால் இறுதிப்போட்டியில் வெற்றிபெற முடியவில்லை?’’

மகா லெஜென்ட்களுக்கே அந்த நிலை  என்றால், பி.வி.சிந்துவை விட்டுவைப்பார்களா?  சிந்துவுக்கு 23 வயதுதான் ஆகிறது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றபின், பேட்மின்டனில் சிந்து பங்கேற்கும் ஒவ்வொரு போட்டிக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த், ஏசியன் கேம்ஸ் உள்ளிட்ட ஏழு பெரிய தொடர்களில் ஃபைனல் வரை முன்னேறி, வெள்ளிப் பதக்கத்துடன் திரும்புவார் சிந்து. ``ஏன், உங்களால் இறுதிப்போட்டியில் வெற்றிபெறமுடியவில்லை?’’ என்கிற கேள்வி துரத்த ஆரம்பித்தது. ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் இது கேட்கப்படும். இப்போது ஒருவழியாக `சில்வர் சிந்து’ அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். வேர்ல்டு டூர் போட்டியில் தங்கம் வென்றுவிட்டார்! 

சீனாவில் சமீபத்தில் நடந்த, வேர்ல்டு டூர் ஃபைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டியில், ஜப்பானின் நஸோமி ஒகுஹராவை வீழ்த்தி, முதன்முறையாக அந்தப் பட்டத்தை வென்ற இந்தியர் என்ற பெருமைபெற்றிருக்கிறார் பி.வி.சிந்து. வேர்ல்டு டூர் ஃபைனல்ஸ் என்பது ஆண்டின் இறுதியில் நடக்கும் தொடர். இது, ஆண்டு முழுவதும் நடந்த சூப்பர் சீரிஸ் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற முன்னணி வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் தொடர் என்பதால், சிந்துவின் வெற்றி பேட்மின்டன் உலகம் தாண்டி கவனம் ஈர்த்துள்ளது. 

இனிமே தங்கம்தான்!

``இதோ தங்கம் ஜெயித்துவிட்டேன். இனி `மீண்டும் சிந்துவுக்கு வெள்ளி’ என்ற தலைப்புக்கு இடமில்லை’’ என்று நிம்மதியாகப் பேட்டிகொடுத்திருக்கிறார் சாம்பியன் சிந்து.

ஆரம்பத்திலிருந்தே இந்தமுறையும் வெள்ளியுடன் திரும்பக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் சிந்து. குரூப் சுற்றில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தைவான் வீராங்கனை தாய் சூ யிங்கை வீழ்த்தியபோதே, சிந்துவின் சாம்பியன் வாய்ப்பு பிரகாசமாகி விட்டது. அரையிறுதியில் தாய்லாந்தின் ரசனாக் இன்டனனைத் தோற்கடித்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக வேர்ல்டு டூர் ஃபைனல்ஸின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதும், `இந்தமுறை சிந்து தங்கம் வெல்வார்’ என பேட்மின்டன் உலகம் நம்பியது. ஆனால், சிந்து அப்படி நினைக்கவில்லை. இறுதிப்போட்டியில் எதிர்த்து விளையாடப் போகும் நஸோமி ஒகுஹரா அவ்வளவு எளிதில் அடிபணிய மாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.

சிந்து நினைத்ததுபோலவே இறுதிப்போட்டி அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒகுஹரா `லாங் ரேலி’களால் திணறடித்தார். மிடில் கோர்ட்டில் நின்று சிந்துவை அலைக்கழித்தார். ஒவ்வொரு ரேலியும் 30, 40 ஸ்ட்ரோக் வரை நீண்டது. ஒவ்வொரு பாயின்ட் எடுப்பதற்குள் மூச்சு முட்டியது. 2017 உலக சாம்பியன்ஷிப் ஃபைனல் போல இதுவும் ஒரு மராத்தான் போட்டியாக இருக்கும் என சிந்து எதிர்பார்த்தார். `மற்ற ஃபைனல்களில் ஏன் தோற்றோம்’ என, போட்டிக்கு முன்பே நன்றாக யோசித்திருந்தார். அதற்கேற்ப வியூகம் வகுத்திருந்தார்.

``ஒகுஹரா நீண்ட ரேலிகள் மூலம் டார்கெட் செய்வார் எனக் கணித்திருந்தேன். முன்னணியில் இருக்கும்போது அதை நழுவவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனெனில், அவர் கம்பேக் கொடுப்பதில் கெட்டிக்காரர். இன்னொரு விஷயம், பாயின்ட்டை மிஸ் செய்ததும் பதற்றமடையக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தேன். இதற்கு முன், எதிரி ஒரு பாயின்ட் எடுத்துவிட்டால், எங்கே தவறு நடந்தது, ஏன் பின்தங்கினோம் என யோசித்துக் கொண்டே இருப்பேன். அப்படி யோசித்து யோசித்து அடுத்து மூன்று புள்ளிகளை இழந்துவிடுவேன். பின் மீண்டுவருவதற்குள் ஆட்டம் என் கையை விட்டுப் போயிருக்கும். இந்தமுறை அப்படியில்லை. `ஓகே... இது அவரது நல்ல மூவ். செம ஷாட்’ என அவரது ஆட்டத்தை அங்கீகரித்து, என் ஆட்டத்தில் ஃபோகஸ் செய்தேன். ஆக்ரோஷப்படாமல், பதற்றமடையாமல் களத்தில் பொறுமையாக இருக்கக் கற்றுக்கொண்டேன்’’ என சக்சஸ் சீக்ரெட் பகிர்ந்தார் சிந்து.

சிறப்பு சிந்து! 

தா.ரமேஷ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு