Published:Updated:

"பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக 70 வகையான பொருள்கள்!" அருள்பிரியா

"பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக 70 வகையான பொருள்கள்!" அருள்பிரியா
"பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக 70 வகையான பொருள்கள்!" அருள்பிரியா

ப்போது கடைகளுக்குத் துணிப்பை எடுத்துச்செல்வோரைப் பார்ப்பது சகஜமாகி விட்டது. இதற்குக் காரணம் தமிழக அரசு ஜனவரி 1-ம் தேதி முதல், பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்ததுதான். இப்படி ஒரு தடையை அரசு விதிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் நம் சுற்றுப்புறம் சீரழிந்துவிட்டது. அதுவும் கடந்த பத்தாண்டுகளில். பிளாஸ்டிக் பொருள்கள் தடை என்றானதுமே பலரும் அதற்கு மாற்றாக என்ன செய்வது எனக் குழம்பி வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக சென்னையைச் சேர்ந்த அருள்பிரியா மற்றும் கீதா ஆகிய இரு பெண்கள் தயாராகவுள்ளனர். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகப் பருத்தியிலான பொருள்களை உருவாக்கி வரும் அருள்பிரியாவிடம் பேசினோம்.

``நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்தான் வேலை செய்துகொண்டிருந்தேன். இரண்டாவது குழந்தைக்காக வேலையை விட வேண்டியதானது. அதனால வீட்டு வேலைகள் முடிந்து, நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. வீட்டுக்கு வாங்கிவந்த பழங்கள், ஒருநாள் அல்லது இரண்டு நாளில் கனிந்து, வீணாகி, அதைத் தூக்கிப் போடும் நிலைக்கு வந்துவிடுகின்றன. அவையும் அடுத்த ஓரிரு நாள்களில் மக்கியும் விடுகின்றன. வீணாகும் பழங்களை வேறு வகைகளை எப்படிப் பயன்படுத்தலாம் என யோசித்தேன். அதற்கான தேடலில்தான் கம்போஸ்ட்டிங் பற்றித் தெரிந்துகொண்டேன். மக்கும் தன்மையுள்ள எங்கள் வீட்டுக் காய்கறி, பழங்களின் கழிவுகளை உரமாக்கத் திட்டமிட்டோம். அதற்காக கம்பா என்ற உரமாக்கும் மண்பானையைத் தேடி வாங்கி, உரமாக்கும் பணியைத் தொடங்கிவிட்டோம். இதை எங்களின் அக்கம் பக்கம் வீடுகளில் செயல்படுத்த கேட்டோம். 

பொதுவாக, மக்கும் கழிவு, மக்காத கழிவு, மனிதக் கழிவு எனக் கழிவுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இதில் மக்காத பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்று தேடியபோது கீதாவின் அறிமுகம் கிடைத்தது. கீதா, பாக்கு மரத்தால் தட்டுகளைத் தயாரிக்கும் பணியைச் செய்துகொண்டிருந்தார். மண்ணின் வளத்தைப் பாதிக்கும் பிளாஸ்டிக் தட்டுகளுக்குப் பதில் பாக்குத் தட்டுகளைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். என் உறவினர்கள், நண்பர்களிடமும் கூறினேன். கூடவே, கீதாவின் நட்பும் நெருக்கமானது. அதனால், இரண்டு பேரும் சேர்ந்து, பாக்குத் தட்டு, டம்பளர், நாப்கின், பை என 70 வகையான பொருள்களைத் தயாரித்து விற்பனையும் செய்துவருகிறோம். இதற்காகவே நம்ம பூமி பவுண்டேசனைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திவருகிறேன். இதற்கு எங்களின் குடும்பத்தினர்கள் உட்பட, பலரும் தங்கள் உதவிகளைச் செய்துவருகின்றனர். அவர்கள் இல்லையென்றால் எங்களின் பயணமும் இல்லை. 

இப்போது அரசே பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்துவிட்டதால், 2000 க்கும் அதிகமான பேர் எங்களின் பொருள்களைத் தொடர்ச்சியாக வாங்கிவருகிறார்கள். பிளாஸ்டிக் நாப்கின் பயன்படுத்துவதால், பெண்களுக்குப் பிரச்னைகள் வருவதாக அறிந்ததும், பருத்தித் துணியால் நாப்கின்கள் தயாரித்தோம். இது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால், அவர்கள் நண்பர்களாக மாறிவிடுகின்றனர். 

நாங்கள் செய்வது பிசினஸ்தான் என்றாலும், நாம் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மையைச் செய்யும் என்பதில் மன திருப்தி கொள்கிறோம். நமக்குச் சுத்தமான, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை நமக்கு முன் வாழ்ந்தவர்கள் தந்துவிட்டுச் சென்றனர். நாமும் அடுத்த தலைமுறைக்கு அவ்வாறு விட்டுச் செல்வதுதான் சரி. அதனால், இயற்கையை அழிக்கும் எந்தவொரு செயலையும் செய்யாதிருக்க வேண்டியது வெறும் கடமை மட்டுமல்ல. அவசியமான, அவரசக் கடமையும்கூட" என்கிறார் அருள்பிரியா.