Published:Updated:

"என் மகன் எட்டு பேரோட உயிர்ல வாழுறான்!"- நெகிழ வைத்த தாய்

அவர் மூளைச்சாவு அடைஞ்சுட்டார்னு டாக்டர்கள் சொன்னதும், அவங்கம்மா துணிச்சலா முடிவெடுத்தாங்க. `எம்புள்ளைய குடிகாரங்க கொன்னுட்டாங்க. எம்மகனுக்குச் சாவுற வயசுல்ல. அதனால் அவனோட உடல் உறுப்புகளை எடுத்து தேவைப்படுறவங்களுக்குக் குடுத்துருங்க’னு டாக்டர்கள்கிட்ட கதறிட்டாங்க. 

"என் மகன் எட்டு பேரோட உயிர்ல வாழுறான்!"-  நெகிழ வைத்த தாய்
"என் மகன் எட்டு பேரோட உயிர்ல வாழுறான்!"- நெகிழ வைத்த தாய்

துப்பழக்கமே இல்லாத இளைஞர் ஒருவரின் உயிரை மதுவே பறித்த துயரச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர், கணபதி. இவர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றியதால் அங்கேயே தனது மனைவி சாரதா மகன் பழனிக்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கணபதி மரணமடைந்து விட்டார். அவரது மகன் பழனிக்குமார் எம்.காம் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்குத் திருமணமாகவில்லை.

இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி தனது நண்பருடன் பழனிக்குமார் மோட்டார் சைக்களில் சென்றபோது, எதிரே 3 நபர்களுடன் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. அந்த மோட்டார் சைக்களில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர். வாகனத்தை ஓட்டியவர் செல்போனில் பேசியபடியே வந்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பழனிக்குமார் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பழனிக்குமார் படுகாயமடைந்தார். உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனளிக்காமல் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

மருத்துவர்களின் இந்தத் தகவலால் கதறித் துடித்த பழனிக்குமாரின் தாய், அந்தத் துயரத்திலும் தனக்கு ஆதவாக இருந்த ஒரே மகனின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க சம்மதித்தார். பழனிக்குமாரின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண், தோல் உள்ளிட்டவை தானம் பெறப்பட்டன. தானம் பெறப்பட்ட உடலுறுப்புகள் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. பழனிக்குமாரின் உடல் உறுப்புகளால் 8 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர். 

கணவரையும் இழந்து தனக்கு ஆதரவாக இருந்த ஒரே மகனையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் 65 வயதான தாயார் சாரதாவைச் சந்தித்தோம். அப்பாவியான தனது மகனின் உயிரை குடிகாரர்கள் பறித்துவிட்டதாகவே கொந்தளித்தார் அந்தத் தாய்.

``என் கணவர் இறந்த பிறகு எனக்கு ஆறுதலாக இருந்தது என் ஒரே மகன் பழனிக்குமார்தான். `நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கம்மா. எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்’னு தான் அடிக்கடி சொல்லுவான். வேலைக்குப் போற நேரம் தவிர, மற்ற நேரம் எல்லாம் என் கூடவேதான் இருப்பான். 

தைப் பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளையடிக்க சுண்ணாம்பு வாங்கப்போறதாச் சொல்லிட்டுப் போனான். அவன் வண்டி பின்னாலதான் உட்கார்ந்து போயிருக்கான். அப்போ குடிச்சிட்டு வேகமாக வந்தவங்க இவன் போன பைக்கில் மோதியிருக்காங்க. வாழ வேண்டிய என் மகனின் வாழ்க்கையைப் பாதியிலேயே முடிச்சு வச்சிட்டாங்க. 

எம்புள்ளைக்குக் குடி, சிகரெட்னு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. அடுத்தவங்க குடிச்சதனால என்புள்ள உயிர் போயிடுச்சே. நான்

இப்போ அநாதையா நிற்குறேனே’’என்று சொல்லிக் கதறினார். ``வாழ வேண்டிய வயசில என் புள்ள இறந்துட்டான். அவன் உடலுறுப்புகளாவது வாழட்டும்னு, உறுப்புதானம் கொடுக்க சம்மதிச்சேன். இன்னைக்கு என் மகன் 8 பேரோட உடலில் வாழுறான்" என்று நெகிழ்ந்தார்.

பழனிக்குமாரின் உறவினரான சுப்புராஜிடம் பேசினோம். ``பழனிக்குமார் எந்த வம்புக்கும் போகாத பையன். எல்லாரிடமும் ரொம்ப மரியாதையாப் பழகுவார். அவருக்கு விபத்துன்னு கேள்விப்பட்டதுமே அவங்கம்மா துடிச்சுப் போயிட்டாங்க. ஆனாலும், அவன் குணமடைந்து வந்துடுவான்னு நம்பிக்கையோடு இருந்தாங்க. கோமா நிலையில் இருந்த பழனிக்குமார் கடைசி வரையிலும் கண் திறக்காமலே போய்ட்டதுதான் வேதனையாயிருக்கு. 

அவர் மூளைச்சாவு அடைஞ்சுட்டார்னு டாக்டர்கள் சொன்னதும், அவங்கம்மா துணிச்சலா முடிவெடுத்தாங்க. `எம்புள்ளைய குடிகாரங்க கொன்னுட்டாங்க. எம்மகனுக்குச் சாவுற வயசுல்ல. அதனால் அவனோட உடல் உறுப்புகளை எடுத்து தேவைப்படுறவங்களுக்குக் குடுத்துருங்க’னு டாக்டர்கள்கிட்ட கதறிட்டாங்க. 

இப்போ சாரதா அம்மாவுக்கு இருந்த ஒரே ஆறுதலும் போயிடுச்சு. அவங்க வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. அதனால அவருக்கு முதியோர் உதவித்தொகையாவது கிடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் ஷில்பா பிரபாகரிடம் மனு கொடுத்தோம். மனுவைப் பரிசீலித்த ஆட்சியர் மறுநாளே வீடு தேடி வந்து சாரதா அம்மாவுக்கு ஆறுதல் சொன்னதோடு, முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவையும் கொடுத்தார். என்ன இருந்தாலும் அந்தம்மா நிர்கதியா நிக்குறாங்க. கடைசி வரைக்கும் அவரை யார் காப்பாத்துவாங்க" என்றார்.

மகனைப் பறிகொடுத்த அந்த ஏழைத்தாயின் துயரத்தைக் காலம்தான் போக்க வேண்டும். மதுப்பழக்கம் தன்னை மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆபத்து என்பதற்கு பழனிக்குமாரின் சம்பவம் உதாரணம்.