Published:Updated:

கடவுளாக வழிபட்ட முதலை மறைவு! - சோகத்தில் மூழ்கிய கிராமம்

துக்கம் அனுசரிக்கும் விதமாக அன்றைய தினம் முழுவதும் கிராமத்து மக்கள் யாரும் வீடுகளில் சமையல் செய்யவில்லை. சாப்பிடவும் இல்லை.

கடவுளாக வழிபட்ட முதலை மறைவு! - சோகத்தில் மூழ்கிய கிராமம்
கடவுளாக வழிபட்ட முதலை மறைவு! - சோகத்தில் மூழ்கிய கிராமம்

முதலை ஒரு கொடிய உயிரினம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். முதலைகள் மனிதர்களைத் தாக்கிய சம்பவங்கள் பலவற்றையும் கேட்டிருப்போம். ஆனால், தங்கள் அருகில் வசித்து வந்த முதலையைக் கடவுளாக வழிபட்டதோடு மட்டுமன்றி, அது இறந்ததற்கு ஒருநாள் முழுவதும் துக்கம் அனுசரித்துள்ளனர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள். 

சத்தீஸ்கர் மாநிலம் பவா மோஹ்தரா என்ற கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை ஒன்று பல ஆண்டுகளாக வசித்து வந்தது. கிராமத்து மக்கள் அதற்கு `கங்காராம்’ என்று பெயரிட்டு, கடவுளாக வழிபட்டு வந்தனர். கங்காராம் தங்களைப் பாதுகாத்து வந்ததாகவும் அந்த மக்கள் நம்பினர்.

சமீபத்தில் அந்த முதலை கிராமத்துக் குளத்தில் இறந்து மிதந்தது. வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குளத்தில் கிடந்த அதன் உடல் மீட்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் அதன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அப்போதுதான் முதலையின் வயது 130 என்றும், அதன் எடை 250 கிலோ என்றும் தெரியவந்தது. வயதான காரணத்தினாலேயே அது இறந்தது என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடவுளாக வழிபட்ட முதலையின் இறப்பு கிராமத்து மக்களை வெகுவாகப் பாதித்தது. இத்தனை ஆண்டுகளாகத் தங்களைப் பாதுகாத்து வந்த முதலைக்கு இறுதிச்சடங்கு செய்ய முடிவு செய்தனர். கிராமத்தினர் சுமார் 500 பேர் திரண்டு ஈமக்கிரியைகளைச் செய்து, முதலையைத் தொட்டு வணங்கினர். அதன் பிறகு அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. துக்கம் அனுசரிக்கும் விதமாக அன்றைய தினம் முழுவதும் கிராமத்து மக்கள் யாரும் வீடுகளில் சமையல் செய்யவில்லை. சாப்பிடவும் இல்லை. சம்பவம் குறித்து கிராமத்தினர் கூறுகையில், "குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்தக் குளத்தில்தான் தினமும் குளிப்போம். ஆனால், கங்காராம் ஒருநாள்கூட யாரையும் தாக்கியதில்லை" என்றனர். கங்காராமின் நினைவாக, குளக்கரையில் அது புதைக்கப்பட்ட இடத்தில் நினைவிடம் ஒன்றைக் கட்டவும் கிராமத்தினர் தீர்மானித்துள்ளனர்.