Published:Updated:

``ஹர்திக் அப்பாவி; வேடிக்கையானவர், அன்பானவர்” - சர்ச்சை விவகாரத்தில் பாண்ட்யாவின் தந்தை

``ஹர்திக் அப்பாவி; வேடிக்கையானவர், அன்பானவர்” - சர்ச்சை விவகாரத்தில் பாண்ட்யாவின் தந்தை
``ஹர்திக் அப்பாவி; வேடிக்கையானவர், அன்பானவர்” - சர்ச்சை விவகாரத்தில் பாண்ட்யாவின் தந்தை

பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனியார் சேனல் ஒன்றில் `காஃபி வித் கரண்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். இதில், பல்வேறு துறை பிரபலங்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில், இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் மட்டுமல்லாது, பெர்சனல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். 

அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சில சர்ச்சைக்குரிய பதில்களை அளித்துள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சினா? விராட் கோலியா... என்ற கேள்விக்கு, உடனடியாக கோலி எனப் பதிலளித்துள்ளனர். அதேபோல, பெண்களைப் பற்றிப் பேசும்போது தவறான கருத்துகளை வெளிப்படுத்தினர், பாலியல் தொடர்பான கருத்துகளை வெளிப்படையாகப் பேசியதால், இது பெரிய அளவில் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இந்தப் பிரச்னை தொடர்பான விசாரணை முடியும் வரை ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல் ராகுல் ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என பி.சி.சி.ஐ நேற்று அறிவித்தது. இதன் எதிரொலியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து இருவரும் உடனடியாக நீக்கப்பட்டனர். 

இந்த நிலையில், தன் மகன் மிகவும் அப்பாவி எனத் தெரிவித்துள்ளார் ஹர்திக் பாண்ட்யாவின் தந்தை ஹிமான்ஷூ பாண்ட்யா. ``தன் கருத்து மூலம் பிறரை துன்புறுத்த வேண்டும் என்பது என் மகனின் நோக்கம் இல்லை. அந்த நிகழ்ச்சியில் கூறிய அனைத்துக் கருத்துகளும் பார்வையாளர்களை மகிழ்விக்க மட்டுமே அவர் கூறினார். அந்தக் கருத்துகளை மக்கள் இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்வார்கள் என நான் சற்றும் நினைக்கவே இல்லை. காஃபி வித் கரண் என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அதில் ஹர்திக் மிகவும் மென்மையான தொனியிலேயே பேசினார். அவரின் கருத்துகள் எதிர்மறையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் அப்பாவி, வேடிக்கையானவர், அன்பானவர்” என ஆங்கில ஊடகத்தில் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குள்ளான கருத்து தெரிவித்த இரு வீரர்களும் இன்று ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பவுள்ளனர். 

இதற்கிடையில் இவர்கள் பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ``இது போன்ற விஷங்களை நாம் நண்பர்களிடத்தில்கூட பகிர்ந்துகொள்ளத் தயங்குவோம் அப்படியிருக்க இவர்கள் தொலைக்காட்சியிலேயே ஓப்பனாக பேசிவிட்டனர். தற்போது அவர்களைப் போலத்தான் ஹர்பஜன் சிங்கும், அனில் கும்ப்ளேவும், சச்சினும் இருப்பார்கள் என மக்கள் யோசிக்கத் தொடங்கியிருப்பார்கள். இந்த விஷயத்தில் பி.சி..=சி.ஐ செய்தது மிகவும் சரி. இப்படிதான் செய்ய வேண்டும். ஹர்திக், ராகுல் இடைநீக்கம் எதிர்பார்த்த ஒன்றுதான் அதில் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை” எனக் கூறியுள்ளார்.