Published:Updated:

சிக்னல் கிடைக்காத பயோமெட்ரிக் கருவிகள்... சிக்கலில் ஆசிரியர்கள்!

சிக்னல் கிடைக்காத பயோமெட்ரிக் கருவிகள்... சிக்கலில் ஆசிரியர்கள்!
சிக்னல் கிடைக்காத பயோமெட்ரிக் கருவிகள்... சிக்கலில் ஆசிரியர்கள்!

மிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர்களின் விவரங்கள் EMIS (Educational Management Information System) எனப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன், அதற்கென்று சிறப்புப் பதிவு எண்ணும் வழங்கப்படுகிறது. மாணவர்களின் விவரங்கள் ஏற்கெனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மாணவர்களின் வருகைப்பதிவையும் ஆண்ட்ராய்டு செயலி மற்றும் பயோமெட்ரிக் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், ``ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வருகைப்பதிவேடு ஆண்ட்ராய்டு செயலிகள் சரியாகச் செயல்படவில்லை. இந்தச் செயலிகள் இயங்குவதற்கான சிக்னலும் கிடைப்பதில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் உள்ளோம்" என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சில அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் அவர்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்தி அதன்மூலம் அரசு, சலுகைகளைப் பெற்றுவருகிறது என்று எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, அவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், சத்துணவுப் பொருள்கள் போன்ற வெளிச்சந்தையில் விற்கப்படுவது தடுக்கப்படும். அதுமட்டுமல்லாது, மாணவர்களின் வருகைப் பதிவேடு உட்பட அனைத்து விவரங்களையும் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாநிலக் கல்வி அதிகாரிகளின் அலுவலகத்திலிருந்தே நேரடியாகக் கண்காணிக்க முடியும். இந்தத் திட்டத்தை இந்தாண்டு தொடக்கத்திலிருந்து செயல்படுத்த அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை, பயோமெட்ரிக் முறையில் பதிவுசெய்யும் விதமாகக் கடந்த மே மாதம் 30-ம் தேதி நடந்த பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதனடிப்படையில், வெளியான அரசாணையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 3,688 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 4,040 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 7,728 பள்ளிகளில், ஒரு பள்ளிக்கு இரண்டு வீதம் மொத்தம் 15,000-க்கு மேற்பட்ட பயோ மெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டு ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் ஒருவர் சமூக வலைதளத்தில் மாணவர்களின் ஆன்லைன்  அட்டன்டென்ஸ் ஆப் குறித்து பதிவுசெய்த புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தலைமை ஆசிரியர் ஒருவர், ``விடுமுறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி பள்ளி தொடங்கியது. எங்களுக்கு ஜனவரி 3 முதல் இந்த ஆண்ட்ராய்டு ஆப் மூலம் வருகைப்பதிவேடு பதிவேற்றம் செய்யச் சொன்னார்கள். சென்ற வாரம் முழுவதும் எங்களது பள்ளியில் செல்போன் செயலி வேலை செய்யவே இல்லை. இதுவரை ஒரே ஒருமுறைதான் மிகவும் முயற்சிசெய்து பதிவேற்றம் செய்துள்ளோம். இந்த ஆண்ட்ராய்டு ஆப் மூலம் வருகைப்பதிவேடு பதிவேற்றம் செய்வதினால், அதிகமாக நேர விரயம்தான் ஆகிறது. எனக்கு மட்டுமல்ல... எங்கள் மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளிலும் விசாரித்ததில், அவர்களுக்கும் இதே நிலைமைதான்" என்றவரிடம், ``ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு தங்கள் பள்ளிக்குக் கிடைத்துவிட்டதா" என்று கேட்டோம். அதற்கு அவர், ``எனக்குத் தெரிந்து எங்கள் மாவட்டத்தில் இன்னும் எந்தப் பள்ளிக்கும் பயோமெட்ரிக் கருவிகள் வந்து சேரவில்லை" என்றார். 

சென்னையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவரிடம் விசாரித்ததில் ``எங்கள் பள்ளியில் நிறைய மாணவர்கள் படிக்கின்றனர். அதனால், இந்த EMIS செயலியில் வருகைப்பதிவு செய்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இருந்தாலும், பள்ளியில் உள்ள அந்தந்த வகுப்பாசிரியர்களிடமே இந்தச் செயலியைக் கொடுத்துச் செயல்படுத்தி வருகிறோம். மேலும், இந்தச் செயலியில் வருகைப் பதிவேடு தவிர்த்து, மாணவர்களின் விவரம் அனைத்துமே பதிவேற்றப்பட்டுள்ளதால், அவர்களின் விவரங்களைச் சரிபார்ப்பது மிகவும் எளிதாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் நிறைந்துள்ள சென்னையிலேயே சிக்னல் கிடைக்காததால் இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். ஆகவே, அரசு இந்தச் செயலியை விரைவாகச் சரி செய்யுமாயின், அது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று" என்றார், மிகத் தெளிவாக.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறையில் விளக்கம் கேட்பதற்காக அத்துறையின் இயக்குநர் ராமேஸ்வர முருகனைத் தொடர்புகொண்டோம். அவர், தொடர்ந்து கூட்டத்தில் இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர் அவரது அலுவலகத்தில் உள்ளவர்கள். இங்குள்ளவர்களிடம் விசாரித்ததில், ``தற்போது அந்தச் செயலி, சோதனையோட்ட முறையில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் செயலியில் உள்ள குறைபாடுகள் இரண்டு மாதங்களுக்குள் சரிசெய்யப்படும்" என்று தெரிவித்தனர்.

முதலில், இந்தப் பிரச்னைகளைச் சரி செய்ய வேண்டும். அதன்பின்பே செயலியை சீரியஸாக நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இங்கு எல்லாமே தலைகீழாக நடக்கிறது.