Published:Updated:

மூச்சிருக்கிறவரை இசையில் இருக்கணும்! - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்

மூச்சிருக்கிறவரை இசையில் இருக்கணும்! - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்
பிரீமியம் ஸ்டோரி
மூச்சிருக்கிறவரை இசையில் இருக்கணும்! - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்

தன்னம்பிக்கை

மூச்சிருக்கிறவரை இசையில் இருக்கணும்! - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்

தன்னம்பிக்கை

Published:Updated:
மூச்சிருக்கிறவரை இசையில் இருக்கணும்! - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்
பிரீமியம் ஸ்டோரி
மூச்சிருக்கிறவரை இசையில் இருக்கணும்! - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்

ன்னிசையைக் கேட்பதைப் போன்றே இனிமையானது அருணா சாய்ராமுடனான உரையாடல். வார்த்தைகளில் வாஞ்சைக்கும் பரிவுக்கும் குறையே இருக்காது. அவரிடம் எதைப் பற்றியும் பேசலாம். எல்லாவற்றுக்கும் சிரித்த முகத்துடன் சிறப்பான பதில்கள் கிடைக்கும். சாதனைப் பெண்களை கெளரவிக்கும் அவள் விருதுகள் 2018-ல் `கலை நாயகி' என்கிற சிறப்பைப் பெற்றிருக்கிறார். அதோடு, இசைக்கலைஞர்களின் பெருமைகளுள் ஒன்றான ‘சங்கீத கலாநிதி’ விருதும் இந்த வருடம் அருணா சாய்ராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது செய்தியால் அருணா சாய்ராமின் முகத்தில் கூடுதல் பொலிவு!

‘` ‘சங்கீத கலாநிதி’ விருது ரொம்பவே ஸ்பெஷல். சங்கீதத்துறையில் இருக்கிற ரசிகர்கள், விமர்சகர்கள், கருத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்னு பலதரப்பட்டவர்களாலும் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்படுகிற விருது இது. மிக மூத்த வித்வான்களால் கொடுக்கப்படும் அங்கீகாரம். `அவள் விருது' உட்பட ஒவ்வொரு விருதுமே மனசை உற்சாகப்படுத்துகிற, ஊக்கப்படுத்துகிற விஷயம்தான். மனிதப் பிறவி எடுத்த எல்லாருக்குமே அது தேவையா இருக்கு. தினமும் காலையில் எழுந்ததும் யாராவது நம்ம முதுகில் ரெண்டு தட்டு தட்டிக்கொடுத்து, ‘நீ நல்லா பண்றே... இன்னும் சூப்பரா பண்ண முடியும்’னு சொன்னா சந்தோஷமா இருக்கும் இல்லையா... அதுபோலத்தான். ஒவ்வொரு விருது வரும்போதும் அது கொடுக்குற உற்சாகத்துல இன்னும் ஆர்வமா ஓடறேன்’’ - மனம்திறந்து பேசுகிறார் அருணா.

‘`கர்னாடக சங்கீதத்துல, ‘கச்சேரி சங்கீதம்’னு ஒண்ணு இருக்கு. `பஜனை சம்பிரதாயம்'னு ஒண்ணு இருக்கு. அதை ‘Congregational singing’னு ஆங்கிலத்தில் சொல்றாங்க. இந்த இரண்டுக்குமான தொடர்பு என்ன, இதனால அதுவும் அதனால இதுவும் எப்படி பாதிக்கப்பட்டது, இரண்டும் தனித்தனியா வளர்ந்தாலும் இரண்டுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்குங்கிறதை என்னுடைய தொடர் ஆராய்ச்சிக்குப் பிறகு பேசி, பாடுற ஒரு நிகழ்ச்சி பண்ணப்போறேன்’’ என்கிறவரின் டைரியில் சக கலைஞர்களின் கச்சேரிகளுக்குச் செல்கிற நாள்களும் குறித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

மூச்சிருக்கிறவரை இசையில் இருக்கணும்! - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்

‘`எல்லா பாடகர்களோடும் எனக்கு நல்ல நட்பு உண்டு. அடிக்கடி சந்திக்க முடியலைன்னாலும், சக பாடகர்களின் கச்சேரிகளுக்குப் போவேன். அப்படிப் போனா, முதல் வரிசையில்தான் உட்காருவேன். பாடறவங்களுக்கு சக பாடகர் வந்தால் உற்சாகம் அதிகமாகும். அவங்களுக்குத் தெரியாம எங்கேயோ உட்கார்ந்து கச்சேரியைக் கேட்டுட்டுப் போறதுல எனக்கு இஷ்டமில்லை. என் கச்சேரிக்கு சக பாடகர்கள் வரும்போது முதல் வரிசையில உட்கார்ந்து ‘ஆஹா’னு  ரசிக்கணும்னு எதிர்பார்ப்பேன். அதே மாதிரி அவங்களும் நினைப்பாங்கனு நம்புறேன். அதனாலதான் முதல் வரிசை.  கச்சேரி முடிஞ்சதும் அவங்களைப் பார்த்து என் அபிப்ராயங்களைச் சொல்லிட்டுத்தான் கிளம்புவேன்’’ - நட்பிலக்கணம் தெரிந்தவரின் கச்சேரிகளை மிஸ் பண்ணாமல் கேட்கிற வி.ஐ.பி-க்கள் பலர்.

‘`எழுத்தாளர் சிவசங்கரி அடிக்கடி என் கச்சேரிகளுக்கு வருவாங்க. இசையைத் தாண்டியும் நாங்க நிறைய பேசுவோம். ரஜினி சார் குடும்பத்தோடு நல்ல நட்பு உண்டு. ரஜினி சார் என் கச்சேரிகளுக்கு வருவார். இந்திரா நூயி என் கணவருக்கு நெருங்கிய உறவினர். என் கச்சேரிகளுக்கு வருவாங்க. அவங்களுடைய கமென்ட்ஸ் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும்.’’

பிரபலங்கள் வியக்கும் இடத்தில் இருக்கும் இந்தப் பிரபலம், இந்த இடத்தை நினைத்துக்கூடப் பார்த்ததில்லை என்பது ஆச்சர்யம்.

‘`பாட ஆரம்பிச்ச நாள்களில் என் கச்சேரிக்கு 50 பேர் வந்தாலே பெருசு. அந்த எண்ணிக்கை 60 ஆனா சந்தோஷப்படுவேன். அது 70 ஆனா ரொம்பப் பெரிய விஷயம்னு நினைச்ச காலம் அது. என் வளர்ச்சியும் வெற்றியும் இப்படிப் படிப்படியா வந்ததுதான். ஒரே ராத்திரியில மேஜிக் எதுவும் நடக்கலை. பாட ஆரம்பிச்ச அடுத்த நாளே என் கச்சேரிக்கு ஆயிரக்கணக்குல கிளம்பி வரணும்னு லட்சியம் வெச்சிருந்தா அன்னிக்கே நான் சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பேன். `நேற்றை விட இன்னிக்கு பரவாயில்லையா சரி... இன்னியை விட நாளைக்கு பெட்டரா... சந்தோஷம்'னு நினைச்சுப்பேன். ஒரு கச்சேரியில வெற்றி பெறணும்னா முதல்ல என்ன பண்ணணும், என்ன பாடணும், ஆடியன்ஸை எப்படி வரவழைக்கணும், அதுக்காக ஏதாவது சிறப்புப் பயிற்சிகள் எடுக்கணுமா, மத்தவங்களுக்குத் தெரியற விஷயங்கள் எனக்குத் தெரியாம இருக்கே, அதை எங்கே, யார்கிட்ட போய் கேட்கறதுனு புரியலை.

வாழ்க்கையில நம்மை அறியாம ஒரு சோர்வு வருமில்லையா? எனக்கும் அப்படி வந்திருக்கு. எல்லாத்தையும் விட்டுடலாமானு யோசிச்ச நாள்களும் உண்டு. என் தன்னம்பிக்கை சோதிக்கப்பட்டிருக்கு.  அப்பல்லாம் அந்தத் தன்னம்பிக்கையைத் தூக்கி நிறுத்த யாரோ ஒருத்தர் வருவாங்க. ஏதோ அட்வைஸ் கொடுப்பாங்க. உடனே எழுந்து இன்னும் பத்தடி நடப்பேன். இது எல்லாருக்கும் நடக்கறதுதான். இவை எல்லாவற்றையும் தாண்டி என் கச்சேரிக்கு நான் எதிர்பார்க்காத கூட்டம் வந்த அந்த நாளை மறக்கவே முடியாது. ராத்திரியெல்லாம் தூங்கலை. கனவா, நனவானு இருந்தது.  இன்னிக்குக் கூட்டம் வந்தது. நாளைக்கு வருமானுதான் தோணினது. அப்படித்தான் பழகியிருந்தேன்.  ஆனா, காலம் எல்லாத்தையும் மாத்திடுச்சு. கூட்டம் வர்றது நிரந்தரமானது. ரசிகர்களுக்கும் எனக்கும் இடையில் ஓர் அழகான உறவு ஏற்பட்டது. எந்த மாதிரியான ரசிகர்கள் வராங்க, அவங்க என்கிட்ட என்ன எதிர்பார்க்கறாங்கனு எல்லாத்தையும் புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்...’’ அனுபவங்களின் மூலம் அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கை தருகிறார் அருணா சாய்ராம்.

இசைப் பின்னணியே இல்லாதவர்களால்கூட ரியாலிட்டி ஷோக்களில் சாம்பியனாக முடிகிறது. ஆனாலும் கர்னாடக சங்கீதத்தில் உச்சம் தொடுவதென்பது இன்னமும் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே சாத்தியம் என்கிற நிலையே நீடிக்கிறது. இது பற்றி அருணா சாய்ராமின் கருத்து என்ன?

‘`கர்னாடக சங்கீத ரசிகர்களும் திரையிசைப் பாடல்களின் ரசிகர்களும் முழுக்க முழுக்க வித்தியாசமானவங்க. திரையிசைப் பாடல்களின் பாப்புலாரிட்டி வேற லெவல். ஒரு சினிமா பாடலுக்கு சர்வ சாதாரணமா பத்து லட்சம், இருபது லட்சம் வியூஸ் கிடைக்கிறதைப் பார்க்கிறோம். எங்களுக்கு ஐம்பதாயிரம் வியூஸ் கிடைச்சாலே பெரிய விஷயம். கர்னாடக சங்கீதம் என்பது அப்படியொரு முக்கியமான கலை. அதனுடைய வார்ப்பு அப்படி.

இலக்கியத்தையே இதற்கு உதாரணமா சொல்லலாம். ஜனரஞ்சகமா எழுதப்பட்ட ஒரு நாவலுக்கும், சீரியஸா எழுதப்பட்ட ஒரு நாவலுக்கும் ஒரே மாதிரியான ரீடர்ஷிப் இருக்காதில்லையா? அந்த மாதிரிதான் திரையிசையும் கர்னாடக சங்கீதமும் வேறு வேறு கலை வடிவங்கள். இரண்டின் நோக்கமும் இரண்டின் வீச்சும் வேறு வேறு. இதையெல்லாம் தாண்டி, சங்கீதப் பின்னணியே இல்லாத ஒரு குழந்தை கர்னாடக சங்கீதம் கத்துக்கணும்னு ஆர்வமா வந்தா, அந்தக் குழந்தைக்கு அதுல ரசிப்புத்தன்மை இருந்தா தாராளமா கத்துக்கலாம். சொல்லிக்கொடுக்கவும் தயார்படுத்தவும் நிறைய பேர் இருக்காங்க.

நான் மும்பையில் இருந்து வந்தவள். எங்கம்மா கச்சேரிப் பாடகியில்லை. என்னுடைய முந்தைய தலைமுறையிலும் யாருமில்லை. சங்கீத வித்வான்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அப்படியொரு நிலைமையிலதான் நான் இந்தத் துறைக்கு வந்தேன். முதல்ல கண்ணைக் கட்டி காட்டுக் குள்ள விட்டபடிதான் இருந்தது. எனக்கான வழியை எப்படி வகுத்துக்கப் போறேன் என்பது மலைப்பாதான் இருந்தது. ரசிகர்களுக்கு நல்லது கெட்டது தெரியும். அவங்களுடைய  ஆதரவு இருந்தா தைரியமா முன்னுக்கு வந்துடலாம். இது எனக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும் பொருந்தும்.  கர்னாடக சங்கீதத்துல ஓர் ஆர்வம் வரணும், ரசனை வரணும், அதுக்கான உழைப்பைப் போடணும். அதுக்கெல்லாம் தயாரா இருக்கிறவங்களுக்கு நல்ல குருவும் கிடைப்பாங்க.’’

கச்சேரி, டிராவல் என பிசி ஷெட்யூலுக் கிடையிலும் தனது ‘நாதயோகம்’ டிரஸ்ட் மூலம் சமூகநலப் பணிகளையும் மேற்கொள்கிறார் அருணா. வயதான வித்வான்களுக்கும் இளம் வித்வான்களுக்கும் இடையில் ஒரு பாலமாக  திறமைப் பரிமாற்றத்தை ஏற்படுத்துகிற அமைப்புதான் நாதயோகம். தவிர,  இசைக்கருவிகள் வாங்க வசதியில்லாத மாணவர்களுக்கு உதவுவது, புற்றுநோயாளி களுக்கான உதவிகள் என நிறைய விஷயங்களை இந்த அமைப்பு செய்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூச்சிருக்கிறவரை இசையில் இருக்கணும்! - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்

பட்டுப் புடவைகளும் பளபளக்கும் நகைகளும் கர்னாடக இசைக் கலைஞர்களின் அடையாளமாகிப் போனது ஏன்? கர்னாடக சங்கீதம் மேட்டுக்குடி மக்களுக் கானது என்கிற கருத்தை இவை உண்மையாக்குவது போலில்லையா?

‘`நான் இதை வேற மாதிரி பார்க்கறேன். சின்ன இடங்களில், குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே பார்க்கிற கச்சேரிகளில் கிராண்டா டிரஸ் பண்ணிட்டுப் போக மாட்டோம். நாகேஸ்வர ராவ் பூங்காவில் கச்சேரி பண்றபோது அதுக்கேத்த மாதிரி டிரஸ் பண்ணிப்பேன். கோயில் கச்சேரிகளில் பாடும்போது அதுக்கேத்தபடி டிரஸ் பண்ணிட்டுப் போகணும்.  இடம், பொருள், ஏவலைப் பொறுத்து முடிவு பண்றதுதான்.  அந்த இடத்துக்கும் அங்கே வரும் மக்களுக்கும் கொடுக்கிற மரியாதை அது.  பெரிய அரங்கத்தில் பாடும்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருப்பாங்க. கடைசி வரிசையில உட்கார்ந்திருக்கிறவங்களுக்கும் நாங்க தெரியணும்னா அப்படித்தான் பிரைட்டா டிரஸ் பண்ணிக்க வேண்டியிருக்கும்.’’

படங்கள் பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டை, ஷாப்பிங், புத்தகங்கள் வாசிப்பது என பாடாத நாள்களில் இன்னும் பிசி இவர்.

‘`நிறைய கச்சேரிகள் பண்றதுல எனக்கு உடன்பாடில்லை. சீசன்ல அதிகபட்சமா ஆறு கச்சேரிகள்தாம். வெளியூர் அல்லது வெளிநாடு போகும்போதும் ஒரு நாளோ, ரெண்டு நாளோ முன்னாடி போயிடுவேன். கச்சேரி முடிஞ்சதும் அன்னிக்கே மறுபடி ஊருக்குத் திரும்ப மாட்டேன். டிராவல் பண்றதால ஹெல்த் பாதிப்பு ஏதும் வந்துடக் கூடாது, அதனால கச்சேரி பாதிக்கப்படக் கூடாதுங்கிறதுல கவனமா இருப்பேன்.

சாய்ராம் சாரும் நானும் நிறைய படங்கள் பார்ப்போம். சமீபத்துல ‘கோல்டு’னு ஒரு படம் பார்த்தோம். சுதந்திர இந்தியாவுக்கு முன்னாடி நடந்த கதை. ஒலிம்பிக் மெடல் பத்தினது. அடுத்து ‘2.0’. நான் தீவிர ரஜினி சார் ரசிகை. அவர் படங்கள் ஒண்ணுகூட மிஸ் பண்ண மாட்டேன். விஜய் சேதுபதி படங்களும் பிடிக்கும்.’’ எளிமையாகச் சொல்கிறவருக்கு எதிர்காலம் எந்த பயத்தையும் தரவில்லையாம்.

‘`இந்த அந்தஸ்தெல்லாம் இன்னிக்கு இருக்கு. சந்தோஷம். இல்லைனாலும் சந்தோஷமா இருப்பேன். இந்த வெற்றியோ, வளர்ச்சியோ ஒரே ராத்திரியில வந்திருந்தா வந்த வேகத்துல போயிடுமோங்கிற பயம் இருக்கலாம். ஓர் அங்கீகாரம் வேணும்னு மட்டும்தான் நான் ஆசைப்பட்டேனே தவிர, வேற எதுக்குமே நான் ஆசைப்படலை. எல்லாமே எனக்கு போனஸ்தான். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு  இந்த மூணும் இருந்தாலே எனக்குப் போதும். உயிர் இருக்கிறவரை மூச்சிருக்கிற வரை இசையில் இருக்கணும். அது போதும்.’’

நல்ல கச்சேரியை நெஞ்சார ரசித்த நிறைவு!

- ஆர்.வைதேகி, படங்கள் : தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism