Published:Updated:

மாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்! - சாக்ஸபோன் லாவண்யா

மாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்! - சாக்ஸபோன் லாவண்யா
பிரீமியம் ஸ்டோரி
மாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்! - சாக்ஸபோன் லாவண்யா

இசை ராணிகள்

மாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்! - சாக்ஸபோன் லாவண்யா

இசை ராணிகள்

Published:Updated:
மாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்! - சாக்ஸபோன் லாவண்யா
பிரீமியம் ஸ்டோரி
மாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்! - சாக்ஸபோன் லாவண்யா

மும்பையைச் சேர்ந்த ‘குயின்ஸ்’ மேடையேறினால் அதிராத அரங்கமே இல்லை. இவர்கள் இசைக்கருவிகளை இசைக்கிற அரசிகள். பிரபல மான வாய்ப்பாட்டுக் கச்சேரிக்கு இணையான கூட்டம் இவர்களுடைய நிகழ்ச்சிகளுக்கும் கூடுகிறது.  குயின்ஸ் என்பது முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் ‘ஃபியூஷன்’ மியூசிக் பேண்டு.

ஹை பிட்ச்சில் ஹார்ட் பீட்டை எகிறவும் செய்கிறார் கள். மயிலிறகால் வருடுகிற மாதிரி மெல்லிசையும் தருகிறார்கள். வித்தியாசமான இந்த முயற்சிக்கு வித்திட்டவர் பிரபல சாக்ஸபோன் கலைஞர் லாவண்யா.
‘` `ஒரு பொண்ணு சாக்ஸபோன் வாசிக்கிறதா, இதெல்லாம் இவங்களுக்குத் தேவையா' என்கிற கமென்ட்டை நான் வாசிக்க ஆரம்பிச்ச காலத்துலேருந்து இப்போ வரைக்கும் கேட்டுக்கிட்டேதான் இருக்கேன். கலைஞர்கள் விமர்சனங்களுக்கு பயப்படக் கூடாது. சாக்ஸபோன் அப்படி ஆண்களுக்கான இசைக்கருவியாதான் காலம்காலமா பார்க்கப்பட்டது. எந்த வாத்தியமும் தன்னை இயக்குவது ஆணா, பெண்ணான்னு பார்த்து இசையைக் கொடுக்கிறதில்லையே!” - ‘போல்டு அண்டு பியூட்டிஃபுல்’ அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறார் லாவண்யா.

மாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்! - சாக்ஸபோன் லாவண்யா

ஆண்களால் ஆளப்படும் தாள வாத்தியத் துறையில் பெண்ணால் முடியும் எனச் சாதித்துக் காட்டிய லாவண்யா, தன்னைப் போல நிறைய பெண் கலைஞர்களை  உருவாக்கவே  ‘குயின்ஸ்’ ஆரம்பித்திருக்கிறார். ‘`தாத்தா எம்.ஆர்.ராஜப்பா மைசூர் அரண்மனையில் ஆஸ்தான மிருதங்க வித்வானா இருந்தவர். அப்பா எம்.ஆர்.சாய்நாத், பிரபல மிருதங்க வித்வான். சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத்துக்குப் பக்க வாத்தியம் வாசிச்சவர். சின்ன வயசுல அப்பாகூட கச்சேரிகளுக்குப் போவேன். கத்ரி கோபால்நாத் சார் சாக்ஸபோன் வாசிக்கிறதைப் பார்த்துட்டு எனக்கும் அதைக் கத்துக்கணும்னு ஆர்வம் வந்தது. கத்ரி கோபால்நாத் சாரே எனக்கு குருவா இருந்து சொல்லித் தந்தார்.

‘பொண்ணுங்க சாக்ஸபோன் கத்துக்கிறதெல்லாம் தப்பான முடிவு’னு சொன்னவங்களுக்கு என் திறமையாலும் வளர்ச்சியாலும் பதில் சொல்லியிருக்கேன். இன்னிக்கு சென்டர் ஸ்டேஜ்ல நின்னு முழுநேர சாக்ஸபோன் கச்சேரி பண்ற அளவுக்கும்  சீனியர் கலைஞர்களுக்கு வாசிக்கிற அளவுக்கும் வளர்ந்திருக்கேன். இது எல்லா பெண்களுக்கும் சாத்தியமாகிறதில்லையே... இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாசிக்கிற பெண்கள் என்னதான் திறமையானவங்களா இருந்தாலும் அவங்களை மேடையில பின் வரிசையிலதான் நிறுத்துவாங்க. பிரபலமாகிற வரைக்கும் நானும் அந்த அனுபவங்களை சந்திச்சிருக்கேன்.  இப்படிப்பட்ட பாரபட்ச அணுகுமுறையை மாத்தணும்னு ஆரம்பிச்சதுதான் ‘குயின்ஸ்’ பேண்டு. இது ஃபியூஷன் பேண்டு. அதாவது கிளாசிக்கல் மியூசிக், வேர்ல்டு மியூசிக், வெஸ்டர்ன் பாப், கிராமிய இசைனு எல்லாம் வாசிப்போம்’’ என்கிறவரின் குழுவில் மலையாளப் பின்னணிப் பாடகியும் பலவிதமான தாள வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்தவருமான சௌமியா சனாதனன், கீபோர்டு கலைஞர் ராகேஷ்ஸ்ரீ, டிரம்ஸ் கலைஞர் சித்தி ஷா, ‘கிடாரிஸ்ட்’ ஷாலினி மோகன் உட்பட பலர் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்! - சாக்ஸபோன் லாவண்யா

‘`சௌமியா செண்ட மேளம், பஞ்சாபி டோல் உட்பட பல வாத்தியங்களை வாசிப்பாங்க.  எல்லா பெண்களுமே அவங்கவங்க துறைகளில் திறமையானவங்க. பெண்கள் என்பதால பிரபலமாகாம இருந்தாங்க. எங்க பேண்டுல வாசிக்க ஆரம்பிச்சதும் எல்லாருமே பிரபலமாயிட்டாங்க.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நாங்க கடுமையா உழைக்கிறோம். எல்லாரும் வேற வேற இடங்களில் இருக்கிறதால முதல்ல இ-மெயிலில் மியூசிக்கைப் பரிமாறிப்போம். மூணு முதல் நாலு மாசங்கள் பிராக்டிஸ் நடக்கும். நிகழ்ச்சிக்கு முன்னாடி சேர்ந்து ஒத்திகைகள் பார்ப்போம். எங்களுக்காக மேக்கப் ஆர்ட்டிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர்ஸ்கூட இருக்காங்க. அவங்களும் பெண்கள். `பொண்ணுங்க நடத்தற பேண்டில்லையா, அதான் இப்படி'னு யாரும் எங்களைக் குறைச்சு சொல்லிடக்கூடாதுனு ஆண்களைவிட அதிக உழைப்பைக் கொடுத்துப் பண்ணிட்டிருக்கோம்...’’ லாவண்யாவின் வார்த்தைகளில் உழைப்பும் நம்பிக்கையும் நிறைந் திருந்தது. இத்தனை மெனக் கெடல்களுக்குப் பிறகும் இவர்களை நோக்கிப்பாயும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை என்கிறார்.

‘`சீனியர் கலைஞர்களுக்கு அவ்வளவு சீக்கிரமா எங்க மேல நம்பிக்கை வராது. ஆனா, ஒரே ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தாங்கன்னா அந்த அபிப்ராயத்தை மாத்திப்பாங்க. அப்படி நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. பெண்கள் என்ற காரணத்தினாலேயே எங்களை மட்டம் தட்டற ஆண்களும் இருக்காங்க. அந்த வார்த்தைகளை நாங்க பெருசா எடுத்துக்க மாட்டோம். அப்படிப் பேசறவங்களே எங்க நிகழ்ச்சியைப் பார்த்ததும் வாயடைச்சுப் போறதையும் பார்த்திருக்கோம். இசையை மதிக்கிறவங்களுக்கு எங்க திறமை புரியும்'’ - காலத்தால் பக்குவப்பட்டிருப்பவர், இசைக்கருவிகளை வாசிக்கிற பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் பின்னணியும் சொல்கிறார்.

மாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்! - சாக்ஸபோன் லாவண்யா

‘`இன்ஸ்ட்ருமென்ட்ஸ் கத்துக்கிற பெண்கள் பலரும் அதைப் பொழுதுபோக்கா எடுத்துக்கிறாங்க. கொஞ்ச நாள்ல விட்டுடறாங்க. எந்த இன்ஸ்ட்ருமென்ட்டை வாசிக்கவும் கடுமையான பயிற்சிகளும் உடல் உறுதியும் வேணும். என் விஷயத்தையே உதாரணமா சொல்லலாம். சாக்ஸபோன் கத்துக்கணும்னு முடிவெடுத்துட்டேன். ஆனா, சாக்ஸபோன் பயங்கர வெயிட்டா இருக்கும். அதைப் பிடிச்சுக்கிட்டு, பல மணி நேரம் நின்னுக்கிட்டே வாசிக்கிறது சாதாரண விஷயமில்லைனு அப்புறம்தான் புரிஞ்சது. கால் வலிக்கும். வாயில் வெச்சு வாசிக்கும்போது உதடுகள் வெடிச்சு ரத்தம் வழியும். இதையெல்லாம் சமாளிச்சுதான் நான் இன்னிக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கேன். எல்லா இன்ஸ்ட்ருமென்ட்டுமே இப்படித்தான். இதுக்கெல்லாம் எத்தனை பெண்கள் தயாரா இருப்பாங்க? அப்படியே எல்லா கஷ்டங்களையும் தாண்டி வந்தாலும், அங்கீகாரம் கிடைக்கிறதுல சிக்கல். போராட முடியாம பாதியோடு நிறுத்திடறாங்க. மாற்றம் மெள்ள மெள்ளதான் வரணும், வரும்’’ - நம்பிக்கையோடு இருப்பவரின் அடுத்த மெகா பிளான், தனது குழுவினருடன் வேர்ல்டு டூர்!

சிறப்பு!

- ஆர்.வைதேகி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism