Published:Updated:

62 வயதில் யூடியூப் பார்த்து தன் கனவுகளை மீட்ட சாந்தியம்மா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
62 வயதில் யூடியூப் பார்த்து தன் கனவுகளை மீட்ட சாந்தியம்மா!
62 வயதில் யூடியூப் பார்த்து தன் கனவுகளை மீட்ட சாந்தியம்மா!

62 வயதில் யூடியூப் பார்த்து தன் கனவுகளை மீட்ட சாந்தியம்மா!

டிப்பு, படிப்பு முடித்ததும் திருமணம், அதன் பிறகு ஒன்றிரண்டு குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கையில் மூழ்கிவிட்ட பெண்களில் சிலர், பிள்ளைகள் வளர்ந்த பிறகு மேற்படிப்பு, பிசினஸ் என்று தங்கள் இளவயதுக் கனவுகளை மீட்டெடுப்பார்கள். இன்னும் சில பெண்கள், பேரப் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள். பேரன், பேத்திகள் வளர்ந்த பிறகு தங்கள் கனவுகளை மீட்டெடுக்கிற பெண்கள் இங்கே மிக மிகக் குறைவு. அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் சாந்தி ராமலிங்கம் நமக்குத் தோன்றினார்.

தற்போது 62 வயதாகிற இவர், இளவயதில் தான் விருப்பமுடன் செய்துவந்த கைவினைப் பொருள்களையே சிறிய அளவில் பிசினஸாக்கி இருக்கிறார். சாந்தி ராமலிங்கத்தைப் பொறுத்தவரை, அவர் சம்பாதிப்பதைவிட இந்த வயதில் தன்னுடைய இளவயது ஆசைக்கு மறுபடியும் புத்துயிர் கொடுத்திருப்பதுதான் இந்தக் கட்டுரையின் கரு. இனி, அவருடன் பேசுவோம்.  

''திருமணம் முடிந்து ரெண்டு பெண் குழந்தைகள் பிறந்ததும், எனக்கு அவர்களை வளர்க்க, படிக்க வைக்க, திருமணம் முடித்து வைக்க அப்படின்னு காலம் றெக்கைக் கட்டிக்கிட்டு ஓடிடுச்சு. அடுத்து என் பேத்திகள் பிறந்தாங்க. பெண்கள் வேலைப் பார்க்கிறதால், அவர்களையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு என்னிடம் வந்தது. சந்தோஷமா அந்தக் கடமையை செய்தேன். ஆனா, அந்த நேரங்களிலும் எனக்குப் பிடித்த தலையலங்காரத்தை என் பொன்ணுங்களுக்கு, பேத்திகளுக்கு அடிக்கடி செய்துகிட்டே இருப்பேன்'' என்று பேச ஆரம்பித்தார் சாந்தி ராமலிங்கம்.

''என் பேத்திகள் அவங்களே அவங்க வேலையை பார்த்துக்கிற அளவுக்கு வளர்ந்துட்டப் பிறகு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் என் சின்னப் பொண்ணு சொப்னா, கம்ப்யூட்டரில் யூ டியூப்னு ஒரு விஷயம் இருக்கு. அதுல, உனக்குப் பிடிச்ச ஹேர்ஸ்டைல்ஸ் எல்லாம் செய்யக் கத்துக்கலாம் அம்மா'ன்னு சொல்ல, இதற்குத்தானே இத்தனை நாளா காத்திருந்தேன் என்று யூ டியூபுக்குள் குதித்தேன்'' என்கிறவரின் விரல்களுக்கு இன்று எக்கச்சக்க ஹேர் ஸ்டைல்கள் அத்துப்படி. 

''எனக்கு  ஆர்ட்டிஃபிஷியல் தோடுகள் செய்வது ரொம்பப் பிடிக்கும். அதையும் யூ டியூபில் பார்த்து கத்துக்க ஆரம்பித்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க. ஒரே நாளில் பலவிதமான தோடுகள் செய்ய கத்துக்கிட்டேன். எனக்கு ஜிமிக்கி ரொம்ப பிடிக்கும். அதனால, விதவிதமான ஜிமிக்கிகள்தான் ஆரம்பத்தில் செய்ய ஆரம்பிச்சேன். அப்புறம், செயின், சில்க் த்ரெட் நகைகள்னு வெரைட்டியா கத்துக்கிட்டேன். செய்த நகைகளை என் பேத்திகளுக்குப் போட்டு அழகுப் பார்ப்பேன். எங்க அப்பார்ட்மென்ட்டில் கர்னாடிக் மியூசிக் சொல்லித் தர்ற கிளாஸ் ஒண்ணு இருக்கு. அங்கே பாட்டுக் கத்துக்க வர்ற பொண்ணுங்க, அவங்க அம்மாங்க எல்லோரும் என் பேத்திகள் போட்டிருக்கிற நகைகளைப் பார்த்துட்டு அழகா இருக்கே எங்கே வாங்கினேன்னு கேட்டிருக்காங்க. என் பேத்திகள் என்னைக் கைகாட்ட, இப்ப அவங்க எல்லாரும் என்னோட ஜிமிக்கி, கம்மல்களோட கஸ்டமர்கள் ஆகிட்டாங்க. சிலர் நகைகளோட போட்டோஸ் கொண்டு வந்துகொடுத்து, அதே மாதிரி பண்ணி தரச் சொல்லுவாங்க. அப்படியும் பண்ணி தருவேன்'' என்கிறார். 

''என் பொண்ணுங்க, பேத்திகள் விருந்து, விசேஷம்னு வெளியே போகும்போது, நான்தான் அவங்களுடைய ஹேர்ஸ்டைலிஸ்ட்.  அவங்களைப் பார்த்துட்டு இப்ப என்கிட்ட ஹேர்ஸ்டைல் செய்துக்கிட்டு போறதுக்கும் நிறையப் பெண்கள் வர்றாங்க. இப்ப நானும் ஒரு பிசினஸ் உமன் தான்'' என்று உற்சாகமாகச் சிரிக்கிறார் சாந்தி ராமலிங்கம். 

ஆர்வத்துக்கும் ரசனைக்கும் கற்றலுக்கும் வயது ஒரு தடையே இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு