Published:Updated:

2019-ல், வாகனங்களில் இருக்கப்போகும் பாதுகாப்பு வசதிகள் என்னென்ன?!

2019-ல், வாகனங்களில் இருக்கப்போகும் பாதுகாப்பு வசதிகள் என்னென்ன?!
2019-ல், வாகனங்களில் இருக்கப்போகும் பாதுகாப்பு வசதிகள் என்னென்ன?!

குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்ட ஓர் அம்சம், பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்தது முரண்.

ந்தியா... உலகளவில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் நாடு இதுதான்! கடந்த 2017-ம் ஆண்டு புள்ளிவிவரங்கள்படி, சாலை விபத்துகளினால் 1,47,913 பேர் மரணம் அடைந்துள்ளனர்; 4,70,975 பேர் காயமடைந்துள்ளனர். இதைக் கேட்கும்போது ஒருபுறம் அவமானமாக இருந்தாலும், மறுபுறம் இந்த 2019-ம் ஆண்டில் புதிதாகச் சாலையில் இறங்கப்போகும் வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக இடம்பெறும் என்பது ஆறுதல் அளிக்கிறது. ஏபிஎஸ், Speed Alert சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் செய்வதற்கு ஏற்றபடியான காரின் கட்டுமானம் ஆகியவை அதில் அடக்கம். 

ஏப்ரல் 2019 - டூவீலர்/கார்களில் ஏபிஎஸ் கட்டாயம்

Anti-Lock Braking System எனப்படும் ஏபிஎஸ்-ன் பங்கு அளப்பரியது. பைக்கில் அதிக வேகத்தில் செல்லும்போது திடீரென ரைடர் பிரேக் பிடித்தாலும், வீல்களை லாக் செய்யவிடாமல் தடுக்கும் பணியைச் செய்யும் இவை, விபத்தின் போது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்த்திவிடுகின்றன. டூ-வீலர்களுக்கான புதிய கோட்பாடுகளின்படி, ஏப்ரல் 1, 2019 முதலாக, 125சிசிக்கும் குறைவான வாகனங்களில் CBS கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது; இதுவே 125சிசிக்கும் அதிகமான வாகனங்களில் ஏபிஎஸ் இருந்தே ஆகவேண்டும். இந்த விதிமுறை கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திலேயே அமலுக்கு வந்திருந்தாலும், தற்போது விற்பனையாகும் அனைத்து டூ-வீலர்களிலும் தேவைக்கு ஏற்ப CBS/ஏபிஎஸ் இருக்கவேண்டியது அத்தியாவசியம் ஆக்கப்பட்டுவிட்டது. இதனால் பல டூ-வீலர் தயாரிப்பாளர்கள், மாடல்களுக்கு ஏற்ப அதில் சிங்கிள் சேனல் அல்லது டூயல் சேனல் ஏபிஎஸ்-ஸை சேர்த்துவருவதைப் பார்க்கமுடிகிறது. கார்களுக்கும் ஏப்ரல் 2018 முதலே ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், வருகின்ற ஏப்ரல் 2019 முதலாக அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் ஸ்டாண்டர்ட் அம்சமாகி விட்டது.

ஜூலை 2019 - கார்களில் பாதுகாப்பு வசதிகள் கட்டாயம்

ஜூலை 2019 முதலாகத் தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும், ஓட்டுனர் காற்றுப்பை - ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் - சீட் பெல்ட் Reminder - பின்பக்க பார்க்கிங் சென்சார் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றிய விளக்கம் பின்வருமாறு...

Speed Alert System: ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் என அழைக்கப்படும் இது, கார் 80 கிமீக்கும் அதிகமான வேகத்தில் செல்லும்போது, ஒவ்வொரு நிமிடத்துக்கும் பீப் சத்தத்தை உமிழும்; இதுவே காரின் வேகம் 120 கிமீயைத் தாண்டும்போது, தொடர்ச்சியாக பீப் சத்தத்தை எழுப்பி டிரைவரை காரின் வேகத்தைக் கட்டுப்படுத்தச் செய்யும். இதை ஆஃப் செய்யவோ, Over-Ride செய்யவோ முடியாது என்பது பெரிய ப்ளஸ். இதனால் விபத்துகளின் எண்ணிக்கை குறையலாம்.

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்: பெயருக்கு ஏற்றபடியே, காரை ரிவர்ஸ் எடுக்கும்போது உதவுவதுதான் இது. ரிவர்ஸ் கியர் போடும்போது, கார் எதன் மீதாவது மோதப்போகிறது என்றால் பீப் சத்தம் அல்லது விசுவலாக எச்சரிக்கை (MonoChrome Display இருந்தால்) செய்யும்; ரிவர்ஸ் கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்தால், உயரம் குறைவான பொருள்கள் அல்லது ரியர் வியூ மிரரில் தெரியாத விஷயம் இருந்தால், அதனைத் தெளிவாக உணர்த்திவிடும். பெரும்பாலான ப்ரீமியம் கார்களில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்/ரிவர்ஸ் கேமரா ஆகியவை ஸ்டாண்டர்டாக இருந்தாலும், பட்ஜெட் கார்களில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சாரை மட்டுமே பார்க்கமுடியும்.

சீட்பெல்ட் Reminder: முன்பக்கப் பயணிகளுக்கு (ஓட்டுநர் மற்றும் அவரின் அருகே இருப்பவர்) எனப் பிரத்யேகமாக இயங்கும் அமைப்புதான் இது. எனவே இருவரில் யாராவது ஒருவர் சீட் பெல்ட் அணிந்திருக்காவிட்டாலும், இது பீப் சத்தத்தைத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். Passive Safety அம்சங்களில் பிரதானமான சீட்பெல்ட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் இந்த Reminder, சிலர் Over-Ride செய்வதைப் பார்க்கமுடிகிறது.

ஓட்டுநருக்குக் காற்றுப்பை: காரில் குறைந்தபட்சம் ஓட்டுநருக்கான காற்றுப்பை கட்டாயமாக்கப்பட இருக்கிறது. உலகளவில் கார் விபத்துக்குள்ளாகும்போது, காருக்குள்ளே இருப்போரைக் காயம்படாமல் காப்பதில் இதன் பங்கு பெரியது. இதனுடன் சேர்ந்து காரின் கட்டுமானமும் மேம்படும்போது, விபத்தினால் காருக்குள்ளே இருப்பவர்களுக்கு ஏற்படும் காயத்தின் தன்மை குறைவாகவே இருக்கும். ஆனால், காற்றுப்பை விஷயத்தில் காரை ஓட்டுபவரை மதிக்கும் விதிகள், ஓட்டுநருக்கு அருகே இருப்பவரை மறந்தது ஏனோ? அதாவது, முன்பக்க இரட்டை காற்றுப்பைகளை ஸ்டாண்டர்ட் அம்சம் ஆக்கியிருக்கலாமே!

Manual Override For Central Locking System: மோட்டார் வாகன விதிகளின்படி, காரின் சென்ட்ரல் லாக்கிங் அமைப்புக்கு Manual OverRide வசதி வழங்கப்பட இருக்கிறது. அதேவேளையில் Child Lock-ன் பயன்பாடு முடிவுக்கு வந்திருக்கிறது. அந்நியர்களின் வாகனத்தில் பெண்கள் பயணிக்கும்போது, அவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும்போது, Child Lock இருப்பது அந்த நபர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது என்ற பேச்சு எழுந்தது. எனவே, குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்ட ஒரு அம்சம், பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்தது முரண். இதுவே சோகமுடிவுக்குக் காரணம். 

அக்டோபர் 2019 - க்ராஷ் டெஸ்ட் விதிகள் அமல்

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அறிமுகமான கார்களுக்கு, Full Frontal Impact, Offset Frontal Impact, Lateral/Side Impact ஆகிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப காரின் கட்டுமானம் அமைந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தற்போது அக்டோபர் 2019 முதலாக, விற்பனை செய்யப்படும் அனைத்து காருமே முன்னே சொன்ன அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டியது அத்தியாவசியம் ஆகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அமலுக்கு வந்த Pedestrian Safety விதிகள், 2020-ல் அனைத்து மாடல்களிலும் பின்பற்றப்பட உள்ளது.

புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளின்படி, Full-Frontal Impact at 48கிமீ, Offset Frontal Impact with Fixed Deformable Barrier at 56கிமீ, Side Impact with Mobile Deformable Barrier at 50கிமீ ஆகிய பரிசோதனைகளைக் கார் கடந்தாக வேண்டும். எனவே, நீண்ட நாள்களாகப் பெரிதும் மாற்றமின்றி இருக்கும் வாகனங்களை, அதன் உற்பத்தியாளர்கள் முழுமையாக மாற்றி வடிவமைக்க வேண்டும் அல்லது அதன் உற்பத்தியை நிறுத்தவேண்டும்; ஆக ஆம்னி, சுமோ, பொலேரோ போன்ற பழைய வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு