Published:Updated:

``தரமான சம்பவம் நமக்குதான்!" தெளியவைத்து தெளியவைத்து அடிக்கும் மரண மாஸ் மசாலா #VinayaVidheyaRama

``தரமான சம்பவம் நமக்குதான்!" தெளியவைத்து தெளியவைத்து அடிக்கும் மரண மாஸ் மசாலா #VinayaVidheyaRama
``தரமான சம்பவம் நமக்குதான்!" தெளியவைத்து தெளியவைத்து அடிக்கும் மரண மாஸ் மசாலா #VinayaVidheyaRama

'VinayaVidheyaRama' திரை விமர்சனம்.

பிரஷாந்த், சினேகா தம்பதி மற்றும் ராம்சரண் உள்ளிட்டோர் குடும்பமாக வாழ்கிறார்கள். அண்ணிகளின் பாசப் பிணைப்பில் வாழும் கடைக்குட்டி ராம்சரணுக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருக்கும் மூத்த அண்ணன் பிரஷாந்திற்கும் எதிரியாக வருகிறார், பீகாரின் பிரதான கேங்ஸ்டர் விவேக் ஓபராய். அவரிடமிருந்து ராம்சரணின் குடும்பம் தப்புகிறதா என்பதை நான்-லீனியர் திரைக்கதை என்ற பெயரில் சுற்றலில்விட்டும், கதறக் கதற, ரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சண்டைக்காட்சிகள் வைத்தும் நம்மை டயர்டாக்கி விடை சொல்கிறது, #VinayaVidheyaRama.

சென்டிமென்ட் காட்சி என்றால் ஒரு எக்ஸ்ட்ரீம், ஆக்ஷன் பிளாக் என்றால் அதீத நடக்கவே வாய்ப்பில்லாத கற்பனை, காமெடி, ரொமான்ஸ் என்றால் அதிலும் உச்சம்... என எல்லாமே தேவைக்கு அதிகமாக ஒரு டெம்ப்ளேட் படமாக விரிகிறது, இந்த `வினய விதேயா ராமா'. இது மட்டுமன்றி, வித்தியாசமாக இருக்கட்டும் என சீக்வென்ஸாக இருக்க வேண்டிய காட்சிகளை இஷ்டத்துக்கு இடம்மாற்றி எது ப்ளாஷ்பேக், எது தற்போது நடப்பவை என்பதே தெரியாத அளவுக்குப் படு ரகசியமாக நகர்கிறது படம். அட! சஸ்பென்ஸ் வைக்கலாம் பாஸ், அதுக்காக இப்படியா? அதுவும் இந்த முன்னுக்குப்பின் முரணான திரைக்கதை அமைப்பை ஸ்கிரிப்ட்டின்போதே யோசித்ததாக எங்குமே தெரியவில்லை. படமாக எடுத்துவிட்டு காட்சிகளை வேண்டுமென்றே மாற்றி வைத்ததாகத்தான் தோன்றுகிறது.

ஃபைட்டர்ஸை இயற்பியல் விதிகளை மறந்து பறக்கவிடும் படங்கள் இந்திய சினிமாவுக்குப் புதிதல்ல. குறிப்பாக, தெலுங்கு சினிமாவில் மாதத்துக்கு நான்கைந்து வந்துவிடும். சமீபத்தில் வந்த கன்னட சினிமாவின் KGF படமும் கன்னடத் திரையுலகம் கமர்ஷியல் மசாலாக்களை நோக்கி நகர்கிறது என்று சுட்டிக்காட்டியது. ஆனால், இதில் ராம்சரண் பறந்து பறந்து அடிப்பதையெல்லாம் அவர் ஒரு சூப்பர் ஹீரோ என்று சொல்லி சமாளித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாங்க?! சரி, சண்டைக் காட்சிகள்தான் இப்படி என்றால், மற்ற காட்சி அமைப்பு, கதையின் போக்கிலும் உயர்வு நவிற்சி அணிதான். சில உதாரணங்கள்...

இன்டர்வெல் பிளாக் ஃபைட் சீன். நம் ஹீரோவை எதிரியாகக் கருதும் ஒரு கேங், போலீஸின் உதவியுடன் ஹீரோவின் குடும்பத்தைக் குற்றவாளிகளாகச் சுற்றி வளைக்கிறது. ஹீரோ வருகிறார். சண்டை செய்யாமல் தன் குடும்பத்தைக் காப்பதற்காக மன்னிப்பு கேட்கிறார். போலீஸ் அதை மதிக்காமல் குடும்பத்தினரைத் தாக்கத் தொடங்க, மண்ணுக்கு அடியிலிருந்து முளைத்து (நிஜமாகவே) ஒரு கேங்க் ஓடிவருகிறது. கறுப்புச் சட்டையில் கையில் குருவி சுடும் துப்பாக்கிகளுடன் போலீஸை முந்திக்கொண்டு ஹீரோவைத் தாக்க முயல்கிறார்கள். ஹீரோவே களத்தில் இறங்குகிறார். ரத்தம் தெறிக்கத் தெறிக்க நூறு பேரை சாய்க்கிறார். இப்போது இன்னொரு கேங்க் என்ட்ரி. கையில் மெஷின் கன்னோடு தற்போது களம் இறங்குவது, இந்திய ராணுவமாம்!. அவர்கள் ஹீரோ விட்டு வைத்திருக்கும் மீதி ஆள்களை (வெறும் பத்து பேர் என்றுதான் தோன்றுகிறது) சுட்டு வீழ்த்துகிறார்கள். மினிஸ்டருக்கே உரிய உடையில் ஒரு மனிதர் வருகிறார். யாருடா இது, நம்ம ஹீரோவுக்கு இவ்ளோ மாஸா என்று நாம் யோசிக்கும்போது, வந்திருப்பவர் பிஹார் சி.எம். என்கிறார்கள். வாயடைத்து நாம் உட்கார்ந்திருக்கையில், இடைவேளை வருகிறது.

பாப்கார்ன் வாங்கிக்கொண்டு வந்தால், சி.எம். ஃப்ளாஷ்பேக் சொல்லத் தொடங்குகிறார். அந்த ஃப்ளாஷ்பேக்கில் பிஹார் இல்லாமல் வேறு ஓர் ஊரில் இருக்கும் ஹீரோ - ஹீரோயின் டூயட் பாடுகிறார்கள் (நாங்க நோலனுக்கே டஃப் கொடுப்போம்ல!). அங்கே, பிஹாரில் தேர்தல் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ். அண்ணன் பிரஷாந்த்தை, விவேக் ஓபராய் கேங்க் கடத்துகிறது. மாட்டிக்கொண்ட பிரஷாந்த், தன் தம்பிக்கு போன் செய்து தகவல் கொடுக்க டவரைத் தேடிக்கொண்டு காட்டுக்குள் ஓடுகிறார் (இதுவரைக்கும் லாஜிக் இருந்துச்சா என்ன? இதுக்கு மட்டும் எதுக்கு லாஜிக்?). லொகேஷனை தம்பி ராம்சரணுக்கு வாட்ஸ் அப் அனுப்புகிறார். குஜராத் ஏர்போட்டில் இருக்கும் ராம்சரண் வேகமாக அண்ணனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ப்ளைட் ஏறாமல் (அட! ப்ளைட் ஸ்லோங்க!) 2000 கி.மீ., தொலைவில் இருக்கும் பிஹாரை நோக்கிச் செல்லும் டிரெயின் மீது குதிக்கிறார். பிறகு, பாதி வழியில் டிரெயினும் ஸ்லோ என்பதால், அங்கிருந்து ஒரு குதிரையின் மீது குதிக்கிறார். வழியில் சும்மாபோனால் எப்படி என்று, வில்லன் கேங்கில் ஒரு 300 பேரைக் கொல்கிறார். வில்லன் விவேக் ஓபராயின் ஆள்கள் இவரைப் பிடித்து நிறுத்த, பிரஷாந்திடம் `தான் சீக்கிரமாக கரெக்டாக வந்துவிட்டதாக' பெருமிதம் கொள்கிறார், ராம்சரண். இதில், நாம் அவார்டு கொடுக்க வேண்டியது ராம்சரண் வரும்வரை பிரஷாந்தைக் கொல்லாமல் இருக்கும் வில்லன் கேங்கிற்குதான். மிடில பாஸு! பொறுமை கொஞ்ச நேரம்தான்.

இதைவிட ஸ்பெஷல் ஐட்டமாக, வில்லன் விவேக் ஓபராய் (`தட்ஸ் மை ஃப்ரெண்ட் ஃபார் யூ' புகழ்) விஷப்பாம்பை எல்லாம் தன்னைக் கடிக்கவைத்து, விஷமே தன்னை ஒன்றும் செய்யாது என டெமான்ஸ்ட்ரேஷன் காட்டுகிறார். இடையிடையே சினேகாவும் நான் மட்டும் சும்மா இருக்கணுமா எனச் சில பன்ச் பேசுகிறார். அப்புறம் என்ன, எல்லாம் சுபமான க்ளைமாக்ஸ்தான். போதாக்குறைக்குப் பழக்க தோஷத்தில் ஏற்கெனவே சேர்ந்தே இருக்கும் ஹீரோ, ஹீரோயினின் கைகளைப் பிடித்து மீண்டும் வாலன்டியராகச் சேர்த்து வைக்கிறார்கள்.

எல்லோரும் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு ஸ்டோரிபோர்டு போட்டு யோசிப்பதுபோல, இங்கே இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு சண்டைக்காட்சிகளில் எப்படி எல்லாம் ஃபைட்டர்களைப் பறக்கவிடலாம் என உட்கார்ந்து யோசிப்பார்போல!. எட்டு மட்டுமல்ல, பதினாறு திசைகளிலும் ஆள்கள் பறக்கிறார்கள். பின்னணி இசை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், கேமரா கோணங்கள் மற்றும் எடிட்டிங் நம்மை டயர்டாக்குகிறது. ஆரம்பத்தில் இத்தனை அலம்பல்களையும் கண்டு மிரண்டுபோன தியேட்டர் ஆடியன்ஸ், பின்பு அதையே ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கைகளைத் தட்டி, வாவ் எனக் கத்தி தங்கள் கலாய்ப்புகளைத் தெரிவித்தனர்.

பர்ஃபார்மன்ஸ் என்று பார்த்தால், அமைதியான அண்ணனாக பிரஷாந்தும், தைரியமான அண்ணியாக சினேகாவும் ஸ்கோர் செய்கிறார்கள். மற்ற அண்ணன்கள் மற்றும் அண்ணிகள் எதற்கு எனத் தெரியவில்லை. ராம்சரணுக்கு ஆக்ஷன் காட்சிகள் தவிர மற்ற எதுவுமே கைகூடவில்லை. ரொமான்ஸ், கோபம், காமெடி என எல்லாக் காட்சிகளுக்கும் ஒரே முகம்தான். இது போதாதென்று ஹீரோயின் அம்மா கதாபாத்திரத்தின் மூலம் பெண்ணியத்தையும், பெண்களையும் வேறு சகட்டுமேனிக்கு ஓட்டுகிறார்கள்.

ஹீரோவும் இயக்குநரும் தெளியவைத்து தெளியவைத்து அடித்ததில், தரமான சம்பவம் என்னவோ நமக்குத்தான்!

அடுத்த கட்டுரைக்கு