Published:Updated:

நம்மள்க்கி இது ஊர் இல்லை... துனியா!

நம்மள்க்கி இது ஊர் இல்லை... துனியா!

நம்மள்க்கி இது ஊர் இல்லை... துனியா!

''வாங்கோ சாப், நந்தம்பாக்கம் நம்மள்க்கி ஊர்லாம் இல்லை, அது நம்மள்க்கி துனியா... ஆமா சாப். அப்படித்தான் இந்த படவா கோபி சொல்றான். வாங்கோ வாங்கோ! துனியா மேலே டிராவல் பண்ணலாம்.!'' - சேட்டு கோபியாக மிமிக்ரி குரலில் உற்சாக உருமி அடிக்கும் படவா கோபி, குழந்தையின் குதூகலத்துடன் நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல். காலனியின் கதை சொல்கிறார்.

நம்மள்க்கி இது ஊர் இல்லை... துனியா!
##~##

''கம்பி மாதிரி நீண்டுகிடக்கிற தார் ரோடு. ரெண்டு பக்கமும் பசுமையா நிற்கிற மரங்கள். சாக்கடை கலக்காம சுழிச்சு ஓடுற அடையாறு. சிலுசிலுனு அடிக்கிற காத்து. அழகான தேவதைப் பெண்கள். அவங்களை ஜொள்ளுவிடும் பல ஜோடிக் கண்கள்னு அழகுப் பிரதேசம். 'இந்தியன் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட்’ங்கிற மருந்துப் பொருள், சிகிச்சைக் கருவிகள் தயாரிப்பு நிறுவன பணியாளர்களுக்கான குடியிருப்பில்தான் என் வீடு. என் அப்பா ஐ.டி.பி.எல்லில் டெக்னீஷியனா இருந்தார். இந்த ஏரியா பெருசுங்க என்னை இப்பப் பார்த்தாலும், 'பேட்மிட்டன் பிளேயர் துரைவேலு மகன்தானே’னு கட்டிப்பிடிச்சு கொஞ்சு வாங்க. ஒரு காலத்துல 500 குடும்பங்கள் இருந்த இடம். கொஞ்சம் கொஞ்சமா கறையான் அரிச்சது மாதிரி குறைஞ்சு இன்னைக்கு வெறும் 23 குடும்பங்களாச் சுருங்கிடுச்சு. காலனியில ஒரு பாதி நந்தம்பாக்கம் வர்த்தக மையமா மாறிடுச்சு. சொர்க்கம் மாதிரி இருந்த இந்த இடம், இன்னைக்குச் சிதிலம் அடைஞ்ச தஞ்சாவூர் சுவர் ஓவியம் மாதிரி இருக்கு!

நம்மள்க்கி இது ஊர் இல்லை... துனியா!

இந்தக் காலனியோட கேட்தான் எங்க சொர்க்க வாசல். அப்ப 5:1 என்ற விகிதத்துல இங்க பொண்ணுங்க இருப்பாங்க. அதாவது அஞ்சு பொண்ணுங்க... ஒரு பையன்னு கணக்கு. எங்க பார்த்தாலும் தாவணி, சுடிதார், மிடி, சல்வார்தான். கிரிக்கெட், ஃபுட்பால்னு விளையாடின நேரம் தவிர, கேட்கிட்ட இருக்கிற பச்சம்மா கடையில பப்பாளி வாங்கிச் சாப்பிட்டுட்டே சைட் அடிக்க உட்கார்ந்துடுவோம். நாள்பூரா நான்ஸ்டாப் ரொமான்ஸ்தான். ஒன் சைடு, டூ சைடு தாண்டி செவன் சைடு லவ். முக்கோணம், சதுரத்தைத் தாண்டி பென்டகன், ஹெக்ஸகன்னு ஓடும் காதல். கோபாலகிருஷ்ணன்ங்கிற பேரைச் சுருக்கி கோபால்னு கூப்பிட்டதும் அப்புறம் மிமிக்ரி கோபினு கூப்பிட்டதும் என் காலனி நண்பர்கள்தான். 'சென்னை 28’-ல பண்ணின கிரிக்கெட் கமென்ட்ரி எல்லாம், காலனியில் டவுசர் போட்ட காலத்துல பண்ணினது. என் முதல் மேடைக் கச்சேரி இங்க இருக்கிற கலை அரங்கத்தில்தான் நடந்துச்சு.

இந்தக் காலனியை வடிவமைச்சது ரஷ்யர்கள். பக்கா டிரெயினேஜ் சிஸ்டத்தோட கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் நாங்க இருந்த வீடு, 'சி’ டைப், மிடில் கிளாஸுக்கானது. 'ஏ ஃபார் ஆர்டினரி’, 'பி ஃபார் போனாப்போதும்’, 'சி ஃபார் மிடில் க்ளாஸ்’, 'டி ஃபார் டூ ஸ்மார்ட்’, 'இ ஃபார் எலைட்’. இது எங்க காலனி பற்றிய என் அரிச்சுவடி. இ குவாட்டர்ஸில் ஆபீஸர் ரேஞ்ச் ஆட்கள் இருப்பாங்க. அங்கே இருந்த பணிக்கரோட பையன் சங்கர், ரொம்ப அழகா இருப்பார். அவர்தான் 'ஒருதலை ராகம்’ பட ஹீரோ. நான் பிறந்து வளர்ந்தது சி-55ல். பிறகு சி-57க்கு மாறினோம். இந்த 55-வது வீடுதான் 'அஞ்சாதே’ படத்தில் நரேன் வீடா வந்துச்சு.

எங்க பக்கத்து வீட்டு நசீர் பாய்க்கு ரெண்டு மனைவிங்க, 17 பசங்க. அவங்க வீட்டுல எப்பவும் பிரியாணி வாசம் அடிச்சுக்கிட்டே இருக்கும். எங்களுக்கு எதிர்ல இருந்த ஜெயஸ்ரீ மாமி வீட்டுல பல நாட்கள் சாப்பிட்டு இருக்கேன். ஆங்கிலோ இந்தியன் பென்னட்டும் அவர் மனைவியும் எப்போதும் சண்டை போட்டுட்டே இருப்பாங்க. அதைத்தான் 'போராளி’ படத்துல ஸீனா பண்ணினேன். அன்னைக்குப் பார்த்த மலையாளக் குடும்பங்கள்ல ஒண்ணு ரெண்டு பேரு இன்னைக்கும் இங்க இருக்காங்க.

இங்க இருக்கிற கிரவுண்ட் ரொம்பப் பெருசு. சென்னை சிட்டியில் பெரிய கிரவுண்ட் இல்லாததால பசங்க கார்ல வந்து இங்கே விளையாடிட்டுப் போவாங்க.

80-கள்ல நான் நட்ட செடிகள், இப்போ மரமா வளர்ந்து நிக்குது. நானும் வளர்ந்திருக்கேன். ஆனால், நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல். மட்டும்  வளராமல் அப்படியே இருக்கிறது வருத்தம்தான்!''

  • நந்தனம் கலைக்கல்லூரியில் பி.காம். படிக்கும்போது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கிய 'படவாஸ்’ மிமிக்ரி டீம்தான் இவருடைய பெயருக்கு முன்னால் உள்ள 'படவா’வுக்குக் காரணம்!
     
  • மிமிக்ரி, மைமிங், ஸ்கிட், டான்ஸ் என வெரைட்டியாக என்டெர்டெயின்மென்ட் பண்ணுவது இவர் ஸ்பெஷல். அப்துல் கலாமும், மணிரத்னமும் ஷோ பார்த்துவிட்டு பாராட்டியதை நெகிழ்ச்சியோடு சொல்கிறார்!
     
  • மறைந்த தன் மகள் நினைவாக 'ஆத்யாஸ் ஹக்’ என்ற அமைப்பை தொடங்கி 200 ஆதரவற்ற சிறார்களை தத்தெடுத்து வளர்க்கிறார்!
     
  • சச்சின், அசாருதீன் குரல்களை முதன்முதலாக மிமிக்ரி செய்தவர் இவரே. தனது விளம்பரப் படங்களுக்கு தமிழ் டப்பிங் தந்த படவாவின் குரலைக் கேட்டு, சச்சினே அசந்துபோய் இருக்கிறார்!

- ஆர்.சரண்
படங்கள்: உசேன் 

அடுத்த கட்டுரைக்கு