Published:Updated:

வளர்த்த காளைக்கு வீட்டிலேயே பிரமாண்ட சிலை - பாசம் காட்டும் குடும்பம்!

வளர்த்த காளைக்கு வீட்டிலேயே பிரமாண்ட சிலை - பாசம் காட்டும் குடும்பம் !

வளர்த்த காளைக்கு வீட்டிலேயே பிரமாண்ட சிலை - பாசம் காட்டும் குடும்பம்!
வளர்த்த காளைக்கு வீட்டிலேயே பிரமாண்ட சிலை - பாசம் காட்டும் குடும்பம்!

``எங்கள் காளையின் வாலைத் தொட வந்தா முட்டிய பேத்துப்புடும்; `காரி வருதுடான்னு' சொல்லிப் படுத்துருவாங்க. யாரையும் கிட்ட நெருங்கவிடாது., விசில் சத்தம் கேட்டா மண்ண வாரி எடுத்துரும். கோபம் உச்சத்தில நிக்கும்போது, எவனாச்சும் தொடவந்தா அவ்வளவுதான். ஆனா, கட்டுத்தரையில் அப்படி இல்ல; அம்புட்டுப் பாசமா எங்ககிட்ட இருப்பான். `காரினு' அடி வயித்துல இருந்து கூப்பிட்டாப் போதும். அப்படியே எங்க, சொன்னபடி கேக்கும். அதுக்குத்தான் சிலை எழுப்பி, நாங்க அதைச் சாமியா இப்போ கும்பிடுறோம்" என்று சிலைக்குச் சாம்பிராணி புகை காட்டியபடியே வணங்கினார் செந்தில்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மில்கேட் கிராமத்தில் சொக்கம்பட்டி `காரியை' வளர்த்த குடும்பத்தினர், அதன் நினைவாக சிலைவைத்து வணங்கி வருகின்றனர். அந்தச் சிலைக்கு மாடுபிடி வீரர்களும், பொதுமக்களும் நேரில் வந்து பூஜை செய்து வணங்கி வருகின்றனர். மேலும் அந்தக் கிராம இளைஞர்கள், நினைவு தினத்தில் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.

சிலைக்கு பூஜை செய்த பின் நம்மிடம் பேசத் தொடங்கினார் காளையை வளர்த்த செந்தில், ``இந்தச் சிலை எங்கக் காரியின் நினைவா வெச்சிருக்கோம். அதோட உண்மையான பேரு, `செந்தில் வேல்' எங்க பெரியப்பாவோட பெயர், அவர் மிகப்பெரும் மாடுபிடி வீரர். அவர் இறந்துட்டார். அதனால எங்க பெரியப்பா பெயரை எங்களின் காளைக்கு வைத்தோம். ஆனா, ஜல்லிக்கட்டுல எல்லாரும் சொக்கம்பட்டி காரினுதான் கூப்புடுவாங்க. மதுரை மட்டும் இல்லாம, சுத்துப்பட்டு எல்லா ஊர்லயும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு எங்க  காரியைத் தெரியும். பரிசைத் தட்டிவருவதோடு, கறுத்த நிறமா இருப்பதாலும் மாடு பிடிவீரர்கள் எல்லாம் பயப்படுவாங்க.

எப்பயாச்சும்தான் எங்க காளை பிடிபட்டு வரும். மத்தபடி எல்லா இடத்திலும் வெற்றிதான். கட்டில், பீரோ, தங்கக் காசு என்று எக்கச்சக்க பரிசுகளை அள்ளிக் குவிச்சிருக்கு. 20 வருஷத்திற்கும் மேல எங்கக்கிட்டதான் இருந்துச்சு. ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறாமப் போகவும் கொஞ்சம் உடம்பு தளர்ந்து, 2016-ம் ஆண்டில் இறந்து போச்சு. அதனால எங்க வீட்டுக் கட்டாந் தரையிலையே அந்தக் காளையப் புதச்சுட்டோம். அப்போ நானும், என் தம்பியும் மொட்டை அடிச்சோம். நான் அந்த  வருசம் சிங்கப்பூர்ல இருந்தேன். அங்க இருந்தபடியே மொட்டையடிச்சு சடங்கு செஞ்சேன். என் தம்பி இங்க இருந்து காளைக்குச் சடங்கு செஞ்சான் . ஒரு தந்தைய எப்படிப் பிரிந்தா, என்ன சடங்கு செய்வோமோ அதே சடங்கைத்தான், நாங்க எங்க காளைக்கும் செய்தோம். அந்தக் காளை எங்களுக்குப் பெரியப்பா போல. முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்குச் சிலை அமைத்து அஞ்சலி செலுத்தினோம். இந்தாண்டு பிப்ரவரியில் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செய்யப்போகிறோம். இந்தச் சிலை மிகவும் தத்துரூபமா இருக்கும். சிலை செய்ய மூன்று மாசத்துக்கு மேல ஆச்சு.  கொஞ்சம், கொஞ்சமாப் பார்த்துப் பார்த்து செஞ்சாரு சிற்பி. அதன் பலன் சிலை நிறைவாகக் கிடைச்சிருக்கு" என்றார்.

செந்திலின் தாயார் சாந்தியிடம் பேசினோம், ``எங்க காளை, எல்லார்கிட்டயும் ரொம்பப் பாசமா இருக்கும். நல்லா அறிவா நடந்துக்கும். என்ன சொன்னாலும் கேக்கும். நிறைய பரிசு வாங்கி பெருமை சேர்த்துருக்கு. வாடில நடக்குற ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் கொண்டு போவோம். அப்பதான் மாடு ஒலட்டாம இருக்கும். ஜல்லிக்கட்டுல யாரும் பிடிக்க வந்தா, அவங்கள குத்திக் கிழிச்சுபுடும். ஆனா கட்டுத்தரையில மற்ற காளைகள மாதிரி அடம் பிடிக்காது. ரெம்ப சாது. வெள்ளி, செவ்வாய்க்கு சாம்பிராணி போட்டு நல்லபடியா கட்டுத்தரைய வச்சுக்கிட்டாதான் அதுக்குப் பிடிக்கும். இப்போ அது இல்லா ரொம்ப வேதனையா இருக்கு. அதனால இப்ப ஒரு புது காளைய வாங்கிட்டு வந்துருக்கான் என் பையன். அந்தக் காளைக்கும் செந்தில்னுதான் பெயர் வெச்சுருக்கோம். எங்களுக்குக் காளை என்றால் உயிர். எங்களோட காளைக்குச் சிலை அமைச்சு, குலசாமி மாதிரி வழிபடுறோம். சுத்துவட்டாரத்துல உள்ள இளவட்டங்க பூராவும் எங்க வீட்டில உள்ள காளை சிலைய வணங்கி, விபூதி வாங்கிக்கிட்டுதான் போறாங்க" என்றார்.

வளர்த்த காளையை, தாங்கள் பெற்ற பிள்ளைகளாகவும், முன்னோர்களாகவும் வழிபட்டு வரும் அந்தக் குடும்பத்தினருடன், கிராமத்தினரும் மரியாதை செய்கின்றனர். அவர்களின் இந்தச் செய்கையை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.