Published:Updated:

பயிற்சி... நெகிழ்ச்சி... ‘மீண்டு எழுவோம்!’ - தெம்பாகும் தென்னை விவசாயிகள்

பயிற்சி... நெகிழ்ச்சி... ‘மீண்டு எழுவோம்!’ - தெம்பாகும் தென்னை விவசாயிகள்
பயிற்சி... நெகிழ்ச்சி... ‘மீண்டு எழுவோம்!’ - தெம்பாகும் தென்னை விவசாயிகள்

ஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், முதற்கட்டமாக  2,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் விகடன் வாசகர்களின் சார்பாக வழங்கப்பட்டன. அடுத்ததாக, புயலுக்குத் தென்னை மரங்களைப் பறிகொடுத்துவிட்டு, துயரத்தில் தவிக்கும் தென்னை விவசாயிகளுக்கு  நம்பிக்கையூட்டவும் மீட்டெடுக்கவும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

கடந்த டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் பட்டுக்கோட்டை அருகே ஆத்திக்கோட்டை கிராமத்தில் பவானி என்பரின் தோப்பிலும், பேராவூரணி அருகே உள்ள தென்னங்குடியில் சோம.சிவக்குமார் என்பவரது தோப்பிலும் இரண்டு நாள்கள், இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும் பேராசிரியருமான செந்தூர்குமரன் இதில் கலந்துகொண்டு, பாதித்த தென்னை மரங்களைக் காப்பாற்றும் வழிமுறைகள் குறித்துப் பயிற்சி அளித்தார். குறிப்பாக, சாய்ந்த குருத்துகளை மீட்டெடுக்கும் தொழில்நுட்பங்கள், வீழ்ந்து கிடக்கும் மட்டைகளை உரமாக்கும் முறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் பல்வேறு கிராமங்களிலிருந்து பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

பயிற்சி... நெகிழ்ச்சி... ‘மீண்டு எழுவோம்!’ - தெம்பாகும் தென்னை விவசாயிகள்

பயிற்சி குறித்துப் பேசிய கீழவிக்ரமத்தைச் சேர்ந்த கலா, “எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். நான்கு ஏக்கரில் இருந்த தென்னம்பிள்ளைகளை நம்பித்தான் என் குடும்பம் இருந்தது. ஆனால், ஒரே இரவில் 160 தென்னை மரங்கள் வேரோடு முறிந்து விழுந்துவிட்டன. அதில் இருந்து மீள முடியாமல் தவித்துவந்தோம். இந்த நிலையில்தான் விகடன் சார்பில் தென்னை விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி நடப்பது அறிந்து வந்தேன். இங்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளைப் பெற்ற பின்பு மீதமுள்ள  மரங்களை எப்படியும் காப்பாற்றிவிடுவேன் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார் புன்னகையுடன்.

மதுக்கூரைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம், “பெரியக்கோட்டையில் எனக்குப் பெரிய தென்னந்தோப்பு இருந்தது. புயலில் 710 மரங்களும் முறிந்து விழுந்துவிட்டன. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட அரசு அதிகாரி ஒருவர்கூட வரவில்லை. இது மரம் விழுந்ததைவிட பெரும் துயரத்தைக் கொடுத்தது. ஆனால், எங்களுக்காக தன் வாசகர்களுடன் கோத்துக்கொண்டு விகடன் களம் இறங்கியிருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. எதனால் மரங்கள் வீழ்ந்தன. இனி எப்படியான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மரங்களை வளர்க்க வேண்டும் இங்கே என்பதைத் தெரிந்து கொண்டேன்’’ என்றார்.

பயிற்சி... நெகிழ்ச்சி... ‘மீண்டு எழுவோம்!’ - தெம்பாகும் தென்னை விவசாயிகள்

பேராவூரணியில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு, நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு என்ற ஊரில் இருந்து கண்ணன் என்ற தென்னை விவசாயி வந்திருந்தார். “எனக்கு 1,000 தென்னை மரங்கள் உள்ளன. புயலால் எங்கள் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், சக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்த்தபோது கண்ணீர் வந்துவிட்டது. இப்போது அந்த விவசாயிகளை மீட்கும் முயற்சியில் விகடன் களம் இறங்கியிருக்கும் தகவல்களைத் தெரிந்து, இங்கே வந்திருக்கிறேன். இந்தப் பயிற்சி வகுப்பு, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமின்றி, அனைத்து தென்னை விவசாயிகளுக்கே பயனுள்ளதாக அமைந்தது” என்றார்.

பயிற்சி... நெகிழ்ச்சி... ‘மீண்டு எழுவோம்!’ - தெம்பாகும் தென்னை விவசாயிகள்

பேராவூரணி அருகே எட்டிவயலைச் சேர்ந்த மணிவண்ணன், “புயலில் வீழ்ந்தது தென்னைகள் அல்ல; எங்கள் பிள்ளைகள். ஆனால், எங்களுக்கு மாடி வீடு என்பதால், அரசு அறிவித்த நிவாரணம்கூட கிடைக்கவில்லை. எங்கள் நிலையை யாரிடம் சொல்வது என்று விம்மிக்கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் ஆக்கப்பூர்வமான பயிற்சியைக் கொடுத்துள்ளது விகடன். எனக்குப் பத்து மரத்துக்கு மேல் பாலைவிட்ட நிலையில் குருத்து முறிந்துவிட்டது. பலருக்கும் இதே நிலைதான். அதனால் பலரும் குருத்தை வெட்டத் தொடங்கினர். ஆனால், ‘அப்படிச் செய்யக்கூடாது, கத்திரிக்கோல் கொண்டு தேவையற்றதை மட்டும் எடுத்துவிட வேண்டும்’ என்று செந்தில்குமரன் கூறினார். இதன் மூலம் என்னுடைய பத்து மரங்களைக் காப்பாற்றி விடுவேன். மட்டைகளை எரிக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன். இதுபோன்ற பயிற்சியை அரசுதான் நடத்தியிருக்க வேண்டும். அரசு செய்ய வேண்டி யதை அக்கறையுடன் விகடன் செய்திருக்கிறது’’ என்று நெகிழ்ந்தார்.

- விகடன் டீம்

“பயிரை மட்டுமல்ல... உயிரையும் காப்பாத்தீட்டீங்க..!’’ 

ஜா புயல் கடந்து 40 நாள்களுக்கு மேலாகியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாகச் சீரடையவில்லை. விவசாய நிலங்களுக்கு மின்சாரம் கிடைக்காததால், தண்ணீர் பாய்ச்ச இயலாமல் நெற்பயிர்கள் கருகிவந்தன. இதுகுறித்து ஆட்சியர் கணேஷ் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். அவர், “சீரமைப்புப் பணிகளைத் தீவிரமாகச் செய்துவருகிறோம். ஆனாலும், பல இடங்களில் மின் கம்பங்கள் உடைந்துகிடப்பதால், அங்கு புதுக் கம்பங்கள் கொண்டுசென்று, சீரமைப்பதில் சற்று சிரமம் உள்ளது. விகடன் தரப்பிலிருந்து ஜெனரேட்டர் மூலம் கருகும் பயிர்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தர முடியுமா?” என்று கேட்டார். உடனே களம் இறங்கியது விகடன் டீம்.

பயிற்சி... நெகிழ்ச்சி... ‘மீண்டு எழுவோம்!’ - தெம்பாகும் தென்னை விவசாயிகள்

ஆலங்குடி சுற்று வட்டாரங்களான செட்டிகாடு, கரிசக்காடு, காயக்காடு, கறம்பக்காடு, புளிச்சங்காடு பகுதிகளில் உடனடியாகத் தண்ணீர் தேவைப்படும் குறு விவசாயிகளின் நிலங்களைத் தேர்வுசெய்து, கருகும் நிலையில் இருந்த15 ஏக்கர் பயிர்களுக்கு ஆறு ஜெனரேட்டர்கள் மூலம் தண்ணீர் இறைத்துக்கொடுத்தோம். தொடர்ந்து, நெடுவாசல் கிழக்குப் பகுதியில் 43 ஏக்கர் நெற்பயிர்களுக்கும், நெடுவாசல் மேற்குப் பகுதியில் 34 ஏக்கர் நெற்பயிர்களுக்கும் தண்ணீர் இறைத்துக்கொடுத்தோம். பணிகள் தொடர்கின்றன. பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்கப்பெற்ற விவசாயிகள், “வீட்டுல இருக்கிற எல்லாத்தையும் அடகு வெச்சுதான் நெல் விதைச்சோம். இந்தமுறை அறுவடைக்கு வரலைன்னா, மொத்த வாழ்வாதாரமும் போயிருக்கும். தண்ணீர் இறைச்சுக் கொடுத்து எங்க பயிரை மட்டுமல்ல... உயிரையும் காப்பாத்திட்டீங்க” என நெஞ்சுருகி விகடனுக்கும் வாசகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள் விவசாயிகள்.

வணக்கம்

பு
யல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது. துயர் துடைக்கும் பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறது விகடன். உதவும் உள்ளம் கொண்ட வாசகர்கள் ‘Vasan Charitable Trust’ என்ற எங்கள் அறக்கட்டளையின் பெயருக்கு, செக் அல்லது டி.டி எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052  (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோடு: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

பயிற்சி... நெகிழ்ச்சி... ‘மீண்டு எழுவோம்!’ - தெம்பாகும் தென்னை விவசாயிகள்

வெளிநாட்டு வாசகர்கள் எங்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண்: 443380918 (ஐ.எஃப்.எஸ்.சி கோடு: IDIB000C032, ஸ்விஃப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்:  DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும். 

வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘கஜா துயர் துடைப்போம்,’ அல்லது #RestoreDelta என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை ‘ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம். மெயிலில் ரசீது பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் help@vikatan.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வங்கியில் பணம் செலுத்திய (Transaction No: / Reference No:) பரிவர்த்தனை எண்ணைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

வாருங்கள்... நம் சகோதரர்களின் துயர் துடைப்போம்!

குறிப்பு: விகடன் வாசகர்களிடம் இருந்து கடந்த 21.12.2018 வரை ரூ. 1,25,01,749.28 நிதியுதவி வந்துள்ளது. மின்னஞ்சல் மூலம் ரசீது கேட்ட வாசகர்களுக்கு 20.12.2018 வரை ரசீது அனுப்பியிருக்கிறோம். செக் மற்றும் டி.டி. மூலம் நிதி அனுப்பியவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்திலிருந்து ரசீது அனுப்பப்படும்.