Published:Updated:

பழங்குடி மக்களின் கைவினைப்பொருள் கண்காட்சி - டெல்லியில் தொடங்கியது!

இது பழங்குக் கலைஞர்களின் கலையைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இங்கு பழங்குடிகளுக்குக் கடைகள் அமைக்க எந்தக் கட்டணம் வாங்கப்படுவதில்லை. பழங்குடிக் கலைஞர்களை மக்களோடு மக்களாக ஒன்றுபடுத்தவும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் பயன்படும்.

பழங்குடி மக்களின் கைவினைப்பொருள் கண்காட்சி - டெல்லியில் தொடங்கியது!
பழங்குடி மக்களின் கைவினைப்பொருள் கண்காட்சி - டெல்லியில் தொடங்கியது!

ந்தியப் பழங்குடி மக்களின் கைவினைப்பொருள்கள் மற்றும் அலங்காரப் பொருள்களுக்கான ஒரு வாரக் கண்காட்சி புது தில்லியில் உள்ள மாநில வர்த்தக மைய வளாகத்தில் ஞாயிறு (13.01.2019) அன்று தொடங்கியது. கடந்த ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்றது இந்த ஆண்டு புது தில்லியில் நடைபெறுகிறது. இதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.


‘ஹுனர் காத்’ என இந்தக் கண்காட்சிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஹூனர் காத் என்றால் ‘திறமையாளர்களுக்கான சந்தை’ என்று பொருள். இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் 22 மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பழங்குடிக் கலைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கண்காட்சியில் ஒடிசாவின் பிலிக்ரி பொருள்கள், மத்திய பிரதேசத்தின் ரத்தினக் கற்களில் வரையப்பட்ட ஓவியங்கள், சட்டிஷ்கர் மாநிலத்தின் மூங்கிலில் செய்யப்பட்ட பொருள்கள், ராஜஸ்தானின் டெரகோட்டா சிற்பங்கள், காஷ்மீர் கம்பளித் துணிவகைகள்  உட்பட பல்வேறு பாரம்பர்யமிக்க பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி “இந்திய நாட்டின் மக்கள் மிகவும் திறமைவாயந்தவர்கள்.

உலகத்தரம்வாய்ந்த கைவினைப் பொருள்களைத் தயாரிக்கும் கலைஞர்கள், பழங்குடிமக்கள் நம்மிடையே மிகுதியாக இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் கைவினைப்பொருள்களின் தரம் பெரிய அளவில் பொதுமக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவர்களின் திறமைகள் எல்லோருக்கும் தெரியும் வகையில் அவர்கள் செய்யும் கலைநயமிக்க பொருள்களை விற்பனை செய்ய இந்த மாதிரியான நிகழ்ச்சிகள்மூலம் சந்தை அமைத்துக்கொடுப்பதால் அவர்களின் திறமைகளை எல்லோரும் அறிந்துகொள்ளச் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இது பெரிய அளவில் உதவியாக இருக்கும்” என்று கூறினார்.


பழங்குடி மக்களுக்கின் கைவினைப்பொருள்களைக் காட்சிப்படுத்தும் பத்தாவது கண்காட்சி இதுவாகும். இதற்கு அமைச்சர் நக்விதான் ‘ஹூனர் காத்’ என்ற பெயரை வைத்துள்ளார்.  “இந்தியாவின் பல மாநிலங்களிலிருக்கும் திறமையாளர்களுக்கு ஒரு களம் அமைத்துக்கொடுக்கும் முயற்சியின் விளைவே இந்த நிகழ்ச்சி. இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ள நெடுஞ்சாலையில் மிக முக்கியமான பங்கை இந்த ஹூனர் காத் செய்துகொண்டிருக்கிறது” என்று பேசியுள்ளார்.


இந்தக் கண்காட்சியில் பழங்குடி மக்களின் கைவினைப்பொருள்கள் மற்றும் அலங்காரப் பொருள்கள் கிடைக்கும். 

தேசியப் பழங்குடிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷாபாஸ் அலி “இது பழங்குக் கலைஞர்களின் கலையைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இங்கு பழங்குடிகளுக்குக் கடைகள் அமைக்க எந்தக் கட்டணம் வாங்கப்படுவதில்லை” என்கிறார். மேலும் “பழங்குடிக் கலைஞர்களை மக்களோடு மக்களாக ஒன்றுபடுத்தவும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் பயன்படும்” என்றும் கூறியுள்ளார்.


இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள டெரகோட்டா குடுவை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிலிட்டி மிட்டி என்ற பொருளால் செய்யப்பட்ட குடுவையில் சிவப்பு மற்றும் கறுப்பு வெள்ளை வண்ணத்தில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தின் உணவு தயாரிக்கப் பயன்படும் பாரம்பர்யமிக்க பொருளாகும்.


இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மற்றொரு முக்கியமான பொருள் ‘காஷ்மீர் நம்தா’ எனப்படும் கம்பளி துணிவகை. இது காஷ்மீர் ஆடுகளின் முடியிலிருந்து தயாரிக்கப்பட்ட  நூலிலிருந்து செய்யப்பட்டது. குளிர்காலத்திற்கான ஆடை என்றாலும் மக்கள் இதை வாங்கிச் செல்கின்றனர்.


இவை இரண்டிற்கும் அடுத்து இந்தக் கண்காட்சியில்  மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற சட்டிஷ்கர் மாநிலத்தின் மூங்கிலால் செய்யப்பட்ட கைவினைப்பொருள்கள். மூங்கிலில் செய்த புல்லாங்குழல், வில் அம்பு போன்றவை மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.


இந்தக் கண்காட்சியில் கைவினைப்பொருள்கள் மற்றும் அலங்காரப்பொருள்களோடு சேர்த்து அவத், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களின் பாரம்பர்யமிக்க உணவுகளும் கிடைக்கின்றன.