Published:Updated:

MG Hector.... டாடா ஹேரியருக்குப் போட்டியாக வரும் இந்த எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?!

இந்தோனேஷியாவில் Wuling Almaz என்ற பெயரிலும், சீனாவில் Baojun 530 என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படும் மிட்சைஸ் எஸ்யூவிதான், இந்தியாவில் Hector என்ற பெயரில் வருகிறது.

MG Hector.... டாடா ஹேரியருக்குப் போட்டியாக வரும் இந்த எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?!
MG Hector.... டாடா ஹேரியருக்குப் போட்டியாக வரும் இந்த எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?!

MG மோட்டார் இந்தியா... இந்த பிரிட்டன் நிறுவனத்தின் முதல் மாடல், இன்னும் இந்தியாவில் டயர் பதிக்கவில்லை. எனினும், அதற்கான காத்திருப்பு விரைவில் நிறைவுபெற இருக்கிறது மக்களே! ஆம், SAIC-க்குச் சொந்தமான MG மோட்டார் இந்தியா நிறுவனம், முதலில் ஒரு மிட் சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது நம் ஊர் சாலைகளில் (குஜராத், மஹாராஷ்ட்ரா) டெஸ்ட்டிங்கில் இருக்கும் நிலையில், இதன் பெயர் Hector என அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் ஏற்கெனவே இருக்கும் கார்களுடன், டாடா ஹேரியர் மற்றும் கியா Trazor (SP கான்செப்ட்) ஆகிய கார்கள் புதிதாகக் களமிறங்க உள்ளன. இதனுடன் தற்போது MG Hector-ம் சேர இருக்கிறது. இதில் என்ன ஸ்பெஷல்?

இதற்குப் போட்டியாளர்கள் யார்?

இந்தியாவில் ரொம்ப நாள்களாகவே எஸ்யூவி செக்மென்ட்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதனாலேயே கார் தயாரிப்பாளர்கள், இந்த பிரிவில் தமது புதிய மாடல்களை வரிசையாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். காம்பேக்ட் எஸ்யூவியான மஹிந்திரா XUV 3OO தொடங்கி லக்ஸூரி எஸ்யூவியான பிஎம்டபிள்யூ X7 வரை என அந்தந்த செக்மென்ட்டில் புதிய மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இதன் வெளிப்பாடாகவே, இந்தியாவில் புதிதாக நுழையும் கார் நிறுவனங்களான கியா மற்றும் MG, முதலில் எஸ்யூவியை கொண்டு வர இருக்கிறார்கள்.


மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில், ஹூண்டாய் க்ரெட்டா ஏற்கனவே கோலோச்சி வருகிறது. எனவே MG Hector, க்ரெட்டா மட்டுமல்லாது நிஸான் கிக்ஸ் - டாடா ஹேரியர் - ஜீப் காம்பஸ் - மஹிந்திரா XUV 500 ஆகிய கார்களுடன் போட்டிபோடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் Wuling Almaz என்ற பெயரிலும், சீனாவில் Baojun 530 என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படும் மிட்சைஸ் எஸ்யூவிதான், இந்தியாவில் Hector என்ற பெயரில் வருகிறது. 1930-களில் பிரிட்டனின் Royal Air Force பிரிவில் இருந்த Hawker Hector Biplane பெயரை முன்மாதிரியாகக் கொண்டே, இந்த மிட் சைஸ் எஸ்யூவிக்கு Hector எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 இந்த எஸ்யூவியின் சைஸ் எப்படி?

4655 மிமீ நீளம், 1,835மிமீ அகலம், 1,760மிமீ உயரம் என டாடா ஹேரியரைவிட அளவுகளில் பெரிதாக இருக்கிறது MG Hector. அந்த காரைப் போலவே இதுவும் 5 சீட்டர்தான் என்பதால், அதிக இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். பின்னர் தேவைக்கு ஏற்ப 7 அல்லது 8 சீட் ஆப்ஷன் வழங்கப்படலாம். லெதர் சீட்ஸ், தொடுவதற்கு மென்மையான பிளாஸ்டிக்கால் ஆன டேஷ்போர்டு, க்ரோம் & தையல் வேலைப்பாடுகள் எனக் கேபினும் டூயல் டோன் ஃப்னிஷில் பிரிமியமாக அசத்தலாம். அதிக வசதிகளும் இருக்கலாம். Bharat New Car Assessment Programme (BNCAP)-ல் இந்த எஸ்யூவி 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெறும் வகையில் தயாரிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் Rajeev Chaba கூறியுள்ளார். 

இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்?

MG Hector-ன் பானெட்டுக்கு அடியே, இரண்டு BS-6 இன்ஜின்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் பெட்ரோல் இன்ஜின், டர்போ சார்ஜர் உடனான 1.5 லிட்டர் (25kgm); CRDi டீசல் இன்ஜின் டர்போ சார்ஜர் கொண்ட  2.0 லிட்டர் (35kgm). இரண்டுமே தோராயமாக 170bhp பவரை வெளிப்படுத்துவதுடன், மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வெளிவரலாம். போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிக பவர்/டார்க் இங்கே கியாரன்ட்டி! 

காரில் என்னென்ன வசதிகள் இருக்கும்?

MG Hector-ல் என்ன வசதிகள் இருக்கும் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், காரில் அதிகப்படியான சிறப்பம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனரோமிக் சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட், TFT MID, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் கொண்ட சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், Android Auto - Apple CarPlay - MirrorLink - 360 Degree Camera உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ஆட்டோமேட்டிக் ஏசி, LED DRL & டெயில் லைட்ஸ், டைமண்ட் கட் அலாய் வீல்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆடியோ & ஃபோன் கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், முன்பக்க & பின்பக்க பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா, Auto Hold வசதி, கறுப்பு நிற பில்லர்கள் என இதன் பட்டியல் நீள்கிறது.

இதன் விலை என்ன?

சீன நிறுவனமான SAIC-க்குச் சொந்தமாக, குஜராத்தின் Halol-ல் ஒரு கார் தொழிற்சாலை இருக்கிறது. இங்கேதான் MG Hector-ன் உற்பத்தி நடைபெற இருக்கிறது. Make In India கோட்பாடுக்கு ஏற்ப, காரில் 75% உள்நாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. எனவே போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இதன் விலை கட்டுபடியாகக் கூடிய அளவில் (சுமார் 15- 20 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம். MG Hector-ன் விலை குறைவான வேரியன்ட்கள் க்ரெட்டாவுடன் போட்டியிட்டால், விலை அதிகமான வேரியன்ட்கள் காம்பஸ் - XUV 500 - ஹேரியர் உடன் போட்டிபோடலாம். வருகின்ற மே 2019-க்குள்ளாக, 100 டீலர்ஷிப்களை இந்தியா முழுக்க நிறுவும் முடிவில் இருக்கிறது MG மோட்டார் இந்தியா. இதில் முதற்கட்டமாக 45 டீலர்கள் தமது செயல்பாட்டினை விரைவில் தொடங்க உள்ளனர். பின்னாளில் இந்த எண்ணிக்கை 300 ஆக (Sales & Service சேர்த்து) அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.