Published:Updated:

''தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் நாள் முழுவதும் உற்சாகம் ஊற்றெடுக்கும்!''- காளி வெங்கட்

''தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் நாள் முழுவதும் உற்சாகம் ஊற்றெடுக்கும்!''- காளி வெங்கட்

இயல்பான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கட்டிப்போட்ட காளி வெங்கட் இயற்கை உணவு முறைக்கு மாறியது பற்றி இங்கே விவரிக்கிறார்

''தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் நாள் முழுவதும் உற்சாகம் ஊற்றெடுக்கும்!''- காளி வெங்கட்

இயல்பான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கட்டிப்போட்ட காளி வெங்கட் இயற்கை உணவு முறைக்கு மாறியது பற்றி இங்கே விவரிக்கிறார்

Published:Updated:
''தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் நாள் முழுவதும் உற்சாகம் ஊற்றெடுக்கும்!''- காளி வெங்கட்

யற்கை உணவுகள், சிறுதானிய உணவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக்கொண்டிருக்கும் நேரமிது. இன்று உடல்நலம் பற்றிய விழிப்புஉணர்வும் பலரிடம் ஏற்பட்டுள்ளது. பல வி.ஐ.பிக்களும் இயற்கை மற்றும் சிறுதானிய உணவுகளுக்கு மாறிவருகின்றனர். 'முண்டாசுப்பட்டி', 'தெகிடி', 'மெர்சல்', 'மாரி' உள்ளிட்டப் பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கட்டிப்போட்ட காளி வெங்கட் இயற்கை உணவு முறைக்கு மாறியது பற்றி இங்கே விவரிக்கிறார்.

''நான்  தூத்துக்குடி மாவட்டம் கத்தாழம்பட்டிங்கிற சின்ன கிராமத்தைச் சேர்ந்தவன். வானம் பார்த்த பூமி. மானாவாரி நிலம்தான் அங்கே அதிகம். வருஷத்துக்கு ஒரு போகம்... தப்பித் தவறி ரெண்டு போகம் விவசாயம் நடந்தா உண்டு. கம்பு, சோளம், தினை இதுமாதிரி எதாச்சும் சிறுதானியப் பயறுகளைத் தெளிச்சி விட்டுடுவாங்க. மழை பெஞ்சதுனா தானா பயறுங்க முளைக்கும். தண்ணி பாய்ச்சணும்கிற வேலையெல்லாம் கிடையாது. அப்படியே தானா வளர்ந்து நிக்கும். களையெல்லாம்கூட எடுக்கமாட்டாங்க. உரம், பூச்சிமருந்துன்னு எதுவும் தெளிக்கமாட்டாங்க. நாட்டு விதைங்களை வாங்கித் தெளிச்சி விட்டுட்டா அப்புறம் நேரா அறுவடைதான். நான் படிச்சதெல்லாம் அரசுப் பள்ளிக்கூடம்தான். சின்னவயசுல பெரும்பாலும் எங்க வீட்டுல கேழ்வரகுக் களி, சோள தோசை, குதிரைவாலி தயிர்சாதம், கம்பஞ்சாதம்தான் இருக்கும். ராத்திரியிலதான் அரிசி உணவு சாப்பிடுவோம். 

குதிரைவாலி தயிர்சாதம் பள்ளி நாள்கள்லேயே எனக்கு ரொம்பப் பிடிக்கும். காலப்போக்கில எல்லாரும் அரிசி உணவுக்கு மாற நாங்களும் மாறிட்டோம். இட்லி, தோசை, சாதம் சாப்பிடுறதுதான் நாகரிகம்கிற கருத்தும் உருவாயிடுச்சு. ஆனா முப்பது நாற்பது வருஷத்துக்குப் பிறகு, மீண்டும் சிறுதானிய உணவுகளுக்கு மவுசு வர ஆரம்பிச்சிடுச்சி. இப்போ மீடியாக்கள்லயும், வாட்ஸ்-அப் தகவல்கள்லேயும் இயற்கை உணவு வகைகள் பற்றிப் படிக்கும்போது 'நாமும், இதுக்கு மாறினா என்னா?'னு தோணுச்சு. என் அம்மாக்கிட்டேயும் மனைவிக்கிட்டேயும் இதை எடுத்துச் சொன்னேன். ஆனா, அவங்க 'இதெல்லாம் இப்போ நடக்கிற கதையா?'னு கேட்டாங்க. 'மாற்றம் என்பதை நம்மக்கிட்டயிருந்தே ஆரம்பிப்போம்'னு வீட்டிலேயே முதல் ஆளா சிறுதானிய உணவுகளுக்கு நான் மாறினேன். இப்போ அவங்களும் கொஞ்சம்கொஞ்சமா மாறிட்டு வர்றாங்க.    

பரபரப்பாக இயங்கிக்கிட்டு இருக்கிற உலகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம். உடல், மனம் இரண்டும் சரியா இருந்தால்தான் எதையும் நம்மால சாதிக்க முடியும்கிற நம்பிக்கை, இன்னிக்கு எல்லோருடைய மனசிலும் வேரூன்றத் தொடங்கிடுச்சி. அதனாலதான் பலரும் தங்களோட உணவுமுறையில மாற்றத்தைக் கொண்டுவந்துட்டாங்க'' என்றவரிடம்,''உங்களுடைய ஒரு நாள் மெனு என்ன? எதையெல்லாம் விரும்பி சாப்பிடுவீங்க?'' எனக்கேட்டோம். 

''காலையில எழுந்ததும் நாட்டுச்சர்க்கரை கலந்த டீ இல்லைனா கருப்பட்டி காபி. காலை டிபனுக்கு சாமை அல்லது வரகு தோசை, அல்லது வேறு பலகாரங்கள். மதியம் குதிரைவாலி சாம்பார் சாதம், அல்லது புதினா துவையலுடன் தயிர் சாதம் சாப்பிடுவேன். இரவு டிபன் உப்புமா, இட்லி, தோசை இதுல ஏதாவது ஒன்றை எடுத்துக்குவேன். இடையில் பிளாக் டீ சாப்பிடுவேன். ஆனா, வெள்ளைச் சர்க்கரை சுத்தமா சாப்பிட மாட்டேன். பாக்கெட் பால் தவிர்த்திடுவேன். கறந்த பால் இரவில் ஒரு டம்ளர் எடுத்துக்குவேன்.இயற்கைக்கு மாறின பிறகு உடம்பு பத்தின அக்கறை அதிகமாயிருக்கு. பள்ளிக்கூட நாள்கள் சாப்பிட்ட உணவுகங்கிறதால மனசும் உடம்பு இளமையாவும் தெம்பாகவும் இருக்கு. காலையில ரெகுலரா 5 கிலோ மீட்டர் தூரம் வாக்கிங் போயிடுவேன். இந்தப் பழக்கம் நாள் முழுவதும் நான் உற்சாகமா இருக்க உதவுது'' என்கிறார் காளிவெங்கட்.