Published:Updated:

"சுருளும் டிவி முதல் ஹார்லி டேவிட்சன் எலக்ட்ரிக் பைக் வரை!" - CES 2019-ல் அதிக கவனம் ஈர்த்தவை

டெக் உலகின் திருவிழாவான CES 2019 நிகழ்ச்சியில் அறிமுகமான புதிய தயாரிப்புகள் எவை?

"சுருளும் டிவி முதல் ஹார்லி டேவிட்சன் எலக்ட்ரிக் பைக் வரை!" - CES 2019-ல் அதிக கவனம் ஈர்த்தவை
"சுருளும் டிவி முதல் ஹார்லி டேவிட்சன் எலக்ட்ரிக் பைக் வரை!" - CES 2019-ல் அதிக கவனம் ஈர்த்தவை

CES என்பது மிகவும் புகழ்பெற்ற வருடாந்திர தொழில்நுட்ப வர்த்தக நிகழ்ச்சி. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில்நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல டெக் நிறுவனங்கள் பங்குபெற்று தங்களது புதிய தொழில்நுட்பங்கள் மற்றும்  கேட்ஜெட்களை காட்சிக்கு வைப்பது வழக்கம். பொதுவாக இதில் வைக்கப்படும் அனைத்தும் முடிவுற்று விற்பனைக்கு வருவதில்லை என்றாலும், தங்கள் நிறுவனத்தால் என்னவெல்லாம் செய்யமுடியும், வருங்காலத்தில் தொழில்நுட்பங்களின் சாத்தியக்கூறுகள் என்னவாக இருக்கும் என்பதை இதில் காட்சிப்படுத்த போட்டி போட்டுக்கொள்வர் டெக் நிறுவனங்கள். அப்படிதான் கடந்த வாரம் இந்த வருட CES நிகழ்வும் சிறப்பாக நடந்துமுடிந்தது. பல தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் இதில் சில தான் மக்கள் மற்றும் டெக் உலகினர் என அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அவை என்னவென்று பார்ப்போம். 

LG Signature OLED டிவி

CES நிகழ்ச்சியில் எப்போதும் முக்கிய கவனம் ஈர்பவை டிவிகள்தான். இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கில்லை. LG நிறுவனம் தனது Signature OLED டிவியை காட்சிக்கு வைத்திருந்தது. இதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த டிவி ஒரு ரோலபிள் (மடங்கும்) டிவி. தேவையில்லாத நேரம் தானாக விண்டோ ஸ்கிரீன் போலச் சுருண்டு கொள்ளும் இது. மேலும் முழுதாக சுருண்டு கொள்ளாமல் சிறிய பகுதி மட்டும் வெளியே தெரியும்வண்ணம் வைத்து இதில் பாடல், கடிகாரம், ஸ்மார்ட் ஹோம் வசதிகள் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த மார்ச் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இதன் விலை தெரியவில்லையென்றாலும் மிகவும் அதிகமாகவே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung MicroLED டிவி 

சாம்சங் இந்த MicroLED டிவியின் இரண்டு வேரியன்ட்களை காட்சிக்கு வைத்திருந்தது. ஒன்று கடந்த வருடமே காட்சிக்கு வைக்கப்பட்ட 75 இன்ச் மாடல் மற்றொன்று 219 இன்ச் மாடல். இவற்றை  'The Wall' என்றும் அழைக்கும் சாம்சங் OLED, QLED விட சிறந்த துல்லியத்தை இந்த MicroLED தரும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறது. அதுமட்டும் இதன் சிறப்பு அல்ல, இந்த டிவிகள் 'modular' டிசைன் கொண்டவை. அதாவது இது பல சிறிய டிஸ்பிளே பாகங்களாகத்தான் வரும். இதை உங்கள் தேவைக்கேற்ப மாற்றி வைத்துக் கொள்ளலாம். இதனால் ரேஷியோ பிரச்னைகள் இருக்காது. உங்களுக்கு வேண்டியது போல் டிவியின் வடிவத்தை மாற்றிக்கொள்ளலாம். இது எப்போது வெளிவரும் என்ற தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் Signature OLED-யை போல இதுவும் டிவி சந்தையையே மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இப்படி இருக்கச் சோனி சும்மா இருக்குமா? 8K டிவிகளையும், சாதாரண வீடியோக்களையும் 8K-க்கு மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியது அந்த நிறுவனம்.

Alienware Area-51 m

உலகின் மிக சக்தி வாய்ந்த லேப்டாப் என இதை அறிமுகப்படுத்தியது டெல் நிறுவனம். இதற்குக் காரணம் 144 hz Full HD  டிஸ்ப்ளே, RTX 2080 GPU (கிராபிக்ஸ் யுனிட்) என இருப்பது மட்டுமல்ல இதன் உள்ளமைப்பு  'modular'-ஆக இருக்கிறது. இதனால் உள்ளே எந்த பாகத்தை வேண்டுமானாலும் அதைவிட அதிக திறன் கொண்ட ஒன்றுக்குத் தேவைக்கேற்ப மாற்ற முடியும். இதனால் கேம் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸை அள்ளியுள்ளது இந்த லேப்டாப். மேலும் Asus நிறுவனத்தின் ROG Mothership (GZ700) கேம்மிங் லேப்டாப்பும் கேம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.இது தவிர மைக்ரோசாஃப்ட்டின் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் புராஸசர்களின் திறனை பிரித்து தரும் Gigabyte Aero 15 லேப்டாப்பும் பலரையும் ஈர்த்தது.

Samsung Space Monitor 

பி.சி.களில் அதிகம் இடத்தைப் பிடிக்கும் முக்கிய பாகங்களில் ஒன்றாக இருப்பது மானிட்டர்தான். இந்த இடப்பிரச்னையைத் தீர்க்க இந்த Space Monitor மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங். இது டேபிளில் மிகவும் குறைவான இடத்தைப் பிடிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். இது இந்த மாதம் அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் வெளியாகும்போது இதன் விலை 40,000 ரூபாயை நெருங்கும் என எதிர்பார்க்கலாம். அலுவலகங்கள் போன்ற இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இவை.

Radeon Seven

Nvidia நிறுவனத்தின் கிராபிக்ஸ் கிங்கான RTX 2080-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டிருக்கும் இதுதான் உலகின் முதல் 7 நானோமீட்டர் GPU. இதில் மொத்தம் 60 'compute' யூனிட்கள் இருக்கின்றன. 1 TB மெமரி வரை ஒரு விநாடியில் புராசஸ் செய்யும் இது. சக்திவாய்ந்தது மட்டுமல்லாமல் 7 nm என்பதால் சக்தியையும் அதிகமாக உறிஞ்சாது இது. இது பிப்ரவரியில் வெளியாகும் என தெரிகிறது. Nvidia நிறுவனமும் தன் பங்கிற்கு RTX 2060 என்னும் பட்ஜெட் GPU ஒன்றையும் அறிமுகப்படுத்தியது.

Royale Flexpai 

போன்களில் 5G, ஸ்னாப்டிராகன் 855 என பல பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தாலும் சைலன்ட்டாக அனைவரையும் கவர்ந்தது Royale Flexpai  என்னும் ஃபோல்டபிள் போன்தான். ஏற்கெனவே சாம்சங் ஃபோல்டபிள் போனை அறிவித்திருக்க இந்த போன் விரைவில் விற்பனைக்கே வரவுள்ளது. டேப்லெட் போலவும் போன் போலவும் ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ளக்கூடிய இதன் வடிவமைப்பு CES பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

மேலும் ஹார்லி டேவிட்சன் 'Livewire' என்னும் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை காட்சிப்படுத்தியது. ஒரு சார்ஜில் சுமார் 177 கிலோமீட்டர் வரை செல்லும் இது. மேலும் மணிக்கு 0-விலிருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 விநாடிகளில் தொட்டுவிடும் இது. இது இந்த ஆண்டு அமெரிக்காவில் சுமார் 30,000  டாலர்களுக்கு (இந்திய ரூபாயில் சுமார் 21 லட்சம்) விற்பனைக்கு வரும்.

கூகுள் தனது அசிஸ்டன்ட்டில் வரப்போகும் புதிய வசதிகளை அறிவித்தது. அதில் உடனுக்குடன் மொழிபெயர்ப்பும் ஒன்று. இது போக பறக்கும் கார் ஒன்றின் மாதிரி, பாட்டில் ஹோல்டர்களுடன் வரும் பார்ட்டி ஸ்பீக்கர்ஸ் என பல தயாரிப்புகள் இந்த நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆப்பிள் நிறுவனம் எப்போதையும் போல இந்த வருடமும் CES-ல் பங்குகொள்ளவில்லை. இருப்பினும் தனது தடத்தை விடாமலும் செல்லவில்லை அந்த நிறுவனம். விழா நடந்த அரங்கத்திற்கு வெளியே பெரிய பேனர் மூலம் "தங்கள் போன்களில் நடப்பவை,தங்கள் போன்களில் மட்டுமே இருக்கும்" என்று ப்ரைவசிக்கு ஆப்பிள் தரும் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு முன்னணி நிறுவனங்களைக் கலாய்த்தது. இப்படி மோதல்கள் ஒருபுறம் இருக்க நிறுவனங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவும் ஒரு விஷயமும் நடந்தேறியது. முன்னணி டிவி நிறுவனங்கள் பலவற்றுக்கும் தனது Airplay 2 மற்றும் itunes சப்போர்ட்டை வழங்கியது ஆப்பிள். ஆனால் இப்படி எளிதாக யாருக்கும் தங்களது சப்போர்ட்டை வழங்காது ஆப்பிள். எனவே ஆராய்ந்து பார்க்கும்போது இதற்கு காரணம் ஆப்பிள் தொடங்கவிருக்கும் ஸ்ட்ரீமிங் தளம்தான் என்றும் இந்த நிறுவனங்களுடனான நட்புறவின் மூலம்தான் பலரிடம் டிவிகள் மூலம் சென்றடையமுடியும் என்பதாலேயே இதைச் செய்கிறது ஆப்பிள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மற்ற நிறுவனங்களுக்கு சப்போர்ட் கொடுக்கப்பட்டிருந்தாலும் பிரைவசி மற்றும் தகவல் பாதுகாப்பில் எந்த ஒரு இழப்பும் இல்லாதவாறு பார்த்துக்கொள்கிறது ஆப்பிள். 

இப்படியாகப் பல நிறுவனங்களின் பங்களிப்புகளுடன் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது CES 2019. இதில் எவையெல்லாம் சந்தைக்கு வருகிறது, எப்போது வருகிறது என்பதுதான் கேள்வி!