Published:Updated:

``பார்வையிழந்த நல்ல பாம்புக்குப் பார்வை வரச் செய்த கோவை இளைஞர்!” - ஒரு நெகிழ்ச்சிக் கதை

யார் வேண்டுமானாலும் பாம்பை பிடித்துவிடலாம். ஆனால் பிடிபட்ட பாம்பிற்கு என்ன பிரச்சனை  இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஈடுபாடு இருந்தால்  மட்டுமே சாத்தியம். அதிலும் பாம்பிற்கு கண் தெரியாது என்பதைக் கண்டுபிடிப்பது என்பது சவாலான விஷயம். 

``பார்வையிழந்த நல்ல பாம்புக்குப் பார்வை வரச் செய்த கோவை இளைஞர்!” - ஒரு நெகிழ்ச்சிக் கதை
``பார்வையிழந்த நல்ல பாம்புக்குப் பார்வை வரச் செய்த கோவை இளைஞர்!” - ஒரு நெகிழ்ச்சிக் கதை

மனிதனைப் புரிந்து கொள்வதை விட மனிதன் புரிந்து கொள்கிற விஷயங்கள் சுவாரஸ்யமானவை. சக உயிர்களிடத்தில் அவன் காட்டுகிற அன்பு சில நேரங்களில் மெய் சிலிர்க்கவைத்துவிடுகிறது. பாம்பு  பிடிப்பதெல்லாம் இப்போதைக்கு சாதாரண விஷயம்தான். கொஞ்சமேனும் தைரியமிருந்தால் யார் வேண்டுமானாலும் பாம்பைப் பிடித்துவிடலாம். ஆனால் பிடிபட்ட பாம்பிற்கு என்ன பிரச்னை  என்று கண்டுபிடிப்பது, அதில் அதீத ஈடுபாடு இருந்தால் மட்டுமே சாத்தியம். அதிலும் பாம்பிற்கு கண் தெரியாது என்பதைக் கண்டுபிடிப்பது என்பது சவாலான விஷயம். 

கோவையைச் சார்ந்த சுரேந்திரன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாகப் பாம்புகளைப் பாதுகாக்கும் பணியில் இருந்து வருகிறார். எங்கேனும் பாம்பு இருக்கிற தகவல் கிடைத்தால் உடனடியாக அங்குச் சென்று பாம்பை மீட்டு காட்டில் விடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்.  கடந்த மாதம் 20 தேதி கோவை மலுமிச்சைப்பட்டிக்கு அருகே  நல்ல பாம்பு இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைக்கிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற சுரேந்தர் பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். சிறிய போராட்டத்திற்கு பிறகு பாம்பைப்  பிடித்துவிடுகிறார். பாம்பைப் பிடித்தவருக்கு அதன் எடையும் நடவடிக்கைகளும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. பாம்பை வீட்டிற்குக்  கொண்டு வந்தவர் அதன் நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பிக்கிறார். நல்ல  பாம்பு சாதாரணமாகவே மனிதர்களைக் கண்டால் சீறும் பழக்கம் கொண்டது. ஆனால் பிடிபட்ட பாம்பு அதனைத் தொட்டால் மட்டுமே சீறுவதை கண்டறிந்தார். பாம்பு அதன் உடல் பாகங்களை உற்றுக் கவனித்தவருக்கு பாம்பின் கண்களில் அதன் தோல் உரிக்கப்படாமல் இருப்பதைக் கவனிக்கிறார். பாம்பின் கண்களில்தான் பிரச்னை என்பதை உணர்ந்தவர் பாம்பை உடனடியாக பவானிசாகரில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில்  கொண்டு செல்கிறார். 

பவானிசாகர்  கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக இருப்பவர்  அசோகன். இவர் கடந்த வருடம் மே மாதம் மதுரை அருகே அடிபட்டுக் காயமடைந்த கட்டுவிரியன் பாம்பிற்கு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து பாம்பைக் காப்பாற்றியவர்.  அசோகன் நல்ல பாம்பைப் பரிசோதனை செய்ததில் பாம்பின் கண்களில் காயம் இருப்பதை உறுதி செய்கிறார். சத்தியமங்கலத்தில் செயல்படும் தனியார் கண் மருத்துவமனை மருத்துவர்களுடன் பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்வது குறித்து ஆலோசிக்கிற அசோகன்,  பாம்பிற்குக் கண்களில் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பார்வை திரும்பும் எனக் கூறுகிறார். பாம்பின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு முதலில் அதற்கு உணவு கொடுத்து ஓய்வளிக்கப்படுகிறது.  இந்நிலையில் டிசம்பர்  24 தேதி பாம்பிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடக்கிறது. அறுவை சிகிச்சை நடைபெற்ற பிறகு பாம்பு வெளிச்சத்தைப் பார்க்க கூடாது என்பதால் வெளிச்சம் பரவாத இடத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டது. பாம்பின் நடவடிக்கைகளைக் கவனித்த மருத்துவர் பாம்பு சில நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவிக்கிறார். தொடர்ந்து நான்கு நாட்கள் மருத்துவமனையில் வைத்து பாம்பு பராமரிக்கப்படுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுரேந்தர் மருத்துவமனைக்கு வந்து பாம்பை பார்த்து விட்டுச் செல்கிறார். 28 தேதி மருத்துவமனையில் பாம்பின் பார்வை திறனை மருத்துவர் அசோகன் பரிசோதனை செய்கிறார். பாம்பிற்குப் பார்வை தெரிகிறது என்பதை உறுதி செய்ததும் பாம்பு மீண்டும் சுரேந்தர் வசம் ஒப்படைக்கப்படுகிறது. பாம்பை பெற்றுக் கொண்ட சுரேந்தர் அன்னூருக்கு அருகில் இருக்கிற காட்டு பகுதியில் பாம்பை விட்டு விட்டு கோவைக்கு வந்துவிடுகிறார். 


சுரேந்திரன் கோவையில் தனியார் நிறுவனத்தில் இரவு நேர மேற்பார்வையாளராகப் பணிபுரிகிறார். பணி  நேரம் போக மீதி நேரங்களில் பாம்புகளை மீட்டுப் பாதுகாப்பதைக் கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். கோவை, நீலகிரி, மதுரை எனப் பல இடங்களில் நண்பர்களாக இணைந்து இந்தப் பணியை மேற்கொள்கிறார்கள்.  இது வரை இவர்களது குழுவினர்  4000 பாம்புகளுக்கு மேல் பிடித்து பாதுகாப்பாகக் காடுகளுக்குள் விட்டிருக்கிறார்கள். பாம்புகள் குறித்து அவரிடம் பேசியதில் “விவசாயம்தான் நம்முடைய முதுகெலும்பு எனச் சொல்லுகிறார்கள். அப்படியான உணவு உற்பத்தியில் மனிதனுக்கு உதவியாக இருப்பதில் பாம்புகள் முக்கியமானவை. விவசாயிகளுக்குத் தொல்லையாக இருக்கிற எலிகளைக் கட்டுப்படுத்துவதில் பாம்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. அப்படியான பாம்புகளைக் கொல்வதும் அவற்றைக் காயப்படுத்துவதும் இயற்கைக்கும் விவசாயத்திற்கும் எதிரான செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். பெரும்பாலும் மக்கள் பாம்பைப் பார்த்ததும் பயந்துவிடுகிறார்கள், விஷமுடைய பாம்பு எது, விஷமற்ற பாம்பு எது என்கிற விஷயமே மக்களுக்குத் தெரிவதில்லை. அதனால்தான் பாம்பை பார்த்தவுடன் அதை அடித்துக் காயப்படுத்தி கொலை செய்துவிடுகிறார்கள். பாம்புகள் குறித்த விழிப்புஉணர்வு இப்போது வரை மக்களிடம் சென்று சேரவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. எங்கேனும் பாம்பைப் பார்க்க நேர்ந்தால், மக்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் தீயணைப்பு துறைக்கோ, அல்லது பாம்பு பிடிக்கும் தன்னார்வ தொண்டர்களிடம் தெரிவிக்க வேண்டும். பாம்புகளைக் கொல்வது என்பது இயற்கைக்கு எதிரான செயல் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார்.