Published:Updated:

கனம் கோர்ட்டார் அவர்களே...

கனம் கோர்ட்டார் அவர்களே...

நீங்கள் நடத்திய வழக்குகளிலேயே வித்தியாசமான வழக்கைப் பற்றிச் சொல்லுங்கள் என்று சில வழக்கறிஞர்களிடம் கேட்டோம்... 

கனம் கோர்ட்டார் அவர்களே...
##~##

அமலராணி, சேலம்: ''ராஜானு ஒருத்தர், என் மூலமா விவாகரத்து வழக்குத் தொடர்ந்தார். கணவன் விட்டா மனைவி, மனைவி விட்டா கணவன்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் முரண்டுபிடிச்சதுல, ஒரு வருஷத்துக்கும் மேல வழக்கு இழுத்துக்கிட்டே போச்சு. தீர்ப்பு நாளில் நீதிபதி, 'ரெண்டு பேரும் நிரந்தரமாப் பிரிஞ்சிட சம்மதமா?’னு கேட்டார். ரெண்டு பேரும் என்ன நினைச்சாங்களோ தெரியலை, சினிமா மாதிரியே கட்டிப் பிடிச்சிக் கதறி அழுது ஒண்ணாச் சேர்ந்துட்டாங்க!''

சீனிவாசன், அஸ்தம்பட்டி: ''ஒரு காதல் ஜோடி. ரெண்டு பேரும் கால் சென்டரில் வேலை பார்க்கிறவங்க. ஒருநாள், மாலையும் கையுமா என் ஆபீஸுக்கு வந்து 'உடனே விவாகரத்து வேணும்’னு கேட்டாங்க. அவங்க பெற்றோருக்குத் தெரியாமல் அன்னைக்கு காலையிலதான் பதிவுத் திருமணம் பண்ணி இருக்காங்க. மதியம் நண்பர்களுடன் லஞ்ச் சாப்பிடுவதில் சைவமா... அசைவமாங்கிறதுல கருத்து வேறுபாடு வந்து, சண்டை போட்டு இருக்காங்க. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம ரெண்டு பேரும் மியூச்சுவல் டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிட்டாங்க!''

சசிகுமார், சேலம்: ''தன்னைக் கற்பழிச்சுட்டதா ஒருத்தர் மேல புகார் கொடுத்து இருக்காங்க ஒரு பெண். அந்தப் பெண் சார்பா நான் வழக்கு நடத்தினேன். குற்றம்சாட்டப்பட்ட நபர் தலைமறைவு ஆகிட்டார். நாலு வருஷம் கழிச்சு போலீஸ் அவரைப் பிடிச்சு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினாங்க. அந்த வழக்கில் 'பெண்ணின் சம்மதத்துடன்தான் இருவரும் உறவுகொண்டுள்ளனர்’னு தீர்ப்பு வந்தது. கடைசியில் விசாரித்தால், அந்தப் பெண்ணே போலீஸாரிடம் அவளுடைய சம்மதத்துடன்தான் உறவுகொண்டதை வாக்குமூலமாச் சொல்லி இருக்கிறார்!''

கனம் கோர்ட்டார் அவர்களே...

ரேவதி, சேலம்: ''கணவன் என்ன சொன்னாலும் நம்பக் கூடிய ஒரு அப்பாவிப் பெண். 'நாம் வசதியாக வாழ வேண்டும் என்றால், நியூமராலஜிப்படி ரெண்டு பேரும் விவாகரத்து வாங்கிட்டு, திரும்பவும் தாலி கட்டித் திருமணம் செய்யணும்’னு சொல்லி இருக்கார் கணவர். அவங்களும் நம்பி விவாகரத்து பண்ண ஒப்புக்கிட்டாங்க. கடைசியில், அவருடைய கணவன் வேறு ஒரு பெண்ணுடன் எஸ்கேப். அந்த வெகுளிப் பெண்ணுக்கு சுமார் ஒரு வருஷம் வாதாடி, ஜீவனாம்சம் வாங்கிக்கொடுத்தேன்!''

விவேகானந்தன், சேலம்: '' 'தன்னுடைய மகனை இரண்டு ரௌடிகள் அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டார்கள்’ என்று ஒரு தாய் போலீஸில் புகார் கொடுத்தார். அவர் சார்பாக நீதிமன்றத்தில் நான் வாதாடினேன். தீர்ப்பு வழங்கும் நாளில் அவர் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காட்டி, 'இவங்களை யாருனு எனக்குத் தெரியாது. என் பையன் மாரியம்மன் கோயில் வாசலில் இறந்துகிடந்தான்’னு பிறழ் சாட்சி சொல்லிட்டாங்க. அதிர்ந்துபோன நான், வெளியே வந்ததும் 'ஏன் இப்படிச் சொன்னீங்க?’னு கேட்டேன். அதுக்கு அந்த அம்மா, 'எனக்கு வயசுப் பொண்ணு ஒண்ணு இருக்குது தம்பி’னு சொல்லிக் கதறி அழுதுச்சி. கண் முன்னாடியே குற்றவாளிகள் தப்பிச்சதைப் பார்த்து மனசு நொந்துட்டேன். ஆனா, என்ன ஆச்சர்யம், அடுத்த மூணாவது நாளே அந்த ரெண்டு பேரும் ஒரு விபத்தில் இறந்துட்டாங்க!''

- வீ.கே.ரமேஷ்,
படங்கள்: எம்.விஜயகுமார்

அடுத்த கட்டுரைக்கு