Published:Updated:

`அப்பா வழிகாட்டலில் கற்ற தற்காப்புக் கலை, சென்னையில் வசிக்க உதவுது!' தன்னம்பிக்கை மாணவி கல்பனா

`அப்பா வழிகாட்டலில் கற்ற தற்காப்புக் கலை, சென்னையில் வசிக்க உதவுது!' தன்னம்பிக்கை மாணவி கல்பனா
`அப்பா வழிகாட்டலில் கற்ற தற்காப்புக் கலை, சென்னையில் வசிக்க உதவுது!' தன்னம்பிக்கை மாணவி கல்பனா

`அப்பா வழிகாட்டலில் கற்ற தற்காப்புக் கலை, சென்னையில் வசிக்க உதவுது!' தன்னம்பிக்கை மாணவி கல்பனா

கிராமங்களில் வாழும் பெண்களுக்கும் கல்வி சென்றடைந்துவருவது, சுமார் கடந்த 20 ஆண்டுகளாகத்தான். அதிலும் மேல் படிப்புக்காக வெளியூரில் தங்கிப் படிக்க வேண்டும் என்றால், ஆண் பிள்ளைகளை உடனே அனுமதி விடுவார்கள் வீடுகளில். பெண் பிள்ளைகள் என்றால், இப்போது வரை பெரும் போராட்டம்தான். ஆனாலும், பெண்கள் வீட்டுக்குள்ளும் சமூகத்திலும் தொடர்ந்து தங்கள் கல்விக்காகப் போராடி வருவதை எந்நாளும் கைவிடுவதில்லை. இந்த நிலை மாறி, ஆண்களுக்கு அளிக்கப்படும் உடனடி அனுமதி போல, பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். சில பெண்கள் வெளியூரில் அதிலும் குறிப்பாகப் பெரு நகரங்களில் தனியே தங்கிப் படிக்க அச்சப்படுவதையும் பார்க்க முடியும். அவர்களுக்கு அருமையான யோசனையைக் கூறுகிறார் கல்பனா. இவரும் கல்லூரியில் இளங்கலை படிப்பவர்தான். தமிழகத்தின் சிறிய ஊரிலிருந்து வந்து, சென்னையில் தங்கிப் படிக்கிறார். அவர் கூறும் யோசனையைத் தெரிந்துகொள்ளும் முன் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சோமசுந்தரம், சிலம்பக் கலையினை மாணவ மாணவிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறார். 40 மாணவர்களும் 10 மாணவிகளும் ஆர்வத்துடன் சிலம்பம் பயின்று வருகின்றனர். இந்தப் பயிற்சியினை, கடந்த பத்து வருடங்களாக நடத்தி வருகிறார். இதற்கான நிதிவசதி போதிய அளவு இல்லாத நிலையில், சில பிரச்னைகளையும் சந்தித்துவருகிறார். ஆனாலும் எந்தச் சூழ்நிலையிலும் கலை பயிற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் சோமசுந்தரம். இந்தப் பயிற்சியில், சிலம்பம் கற்றவர்தான் கல்பனா. தற்போது 18 வயதாகும் கல்பனா, கடந்த 7 வருடங்களாகச் சிலம்பம் சுற்றிவருகிறார். ஆமாம். தனது பத்து வயதிலிருந்தே சிலம்பம் இவரின் கை வசமாகிவிட்டது. அதுகுறித்து மேலும் அவரிடம் கேட்டேன். 

``என்னுடைய அப்பா (பாண்டியன்) கொடுத்த ஊக்கம்தான், சோமசுந்தரம் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அப்பா, நான் எப்பவும் தைரியமான பெண்ணாக இருக்க வேண்டும் நினைப்பார். அதுதான் எல்லாவற்றுக்கும் அடித்தளம். நான் சேர்ந்தபோது, பெண் நான் மட்டும்தான். கற்றுக்கொள்ள ஆரம்பித்த புதிதில் நிறைய தயக்கம் இருந்தது. அப்போதெல்லாம், `உன்னால் முடியாவிட்டால் யாராலும் முடியாது' என நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி, கற்றுத்தருவார் மாஸ்டர். ஒரு கட்டத்தில் என்னையுமறியாமல், இந்தச் சிலம்பக் கலையோடு இணைந்துவிட்டேன். மிக இயல்பாகச் சிலம்பம் சுற்றினேன். பல மேடைகளில் என் திறமையைக் காட்டி, பாராட்டுகளும் பரிசுகளும் வாங்கினேன். 2016 - ம் வருஷம், தமிழக மாநில அளவில் நடந்த சிலம்புப் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றேன். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அவர்களிடமிருந்து காமராஜர் விருதும் கிடைத்தது. சிலம்பம் ஆடும்போது உடலில் அடிபடும், ஆனால், அந்த நேரத்தில் அதை நினைத்துக்கொண்டிருக்காது, வலியைப் பொறுத்துக்கொண்டு விளையாட்டில்தான் கவனமாக இருக்க வேண்டும். வெற்றிதான் முக்கியம் என்று நினைப்பேன். அதற்காக, காலை, மாலை இரண்டு வேளைகளிலும் சிலம்பப் பயிற்சியில் ஈடுபடுகிறேன்." என்று உறுதியோடு சொல்லும் கல்பனா, தற்போது சென்னையில், விடுதியில் தங்கி, பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். 

``சென்னையில் தனியாக இருக்கிறேன் என்றாலும் பயத்தோடு இல்லை. வெளியே சென்று வருவதாகட்டும், யாரோடும் பேசுவதாக இருக்கட்டும் எந்தத் தயக்கமும் இல்லை. இதற்கு அடிப்படையான காரணம், நான் பழகிய சிலம்புதான் என்பது என் எண்ணம். அது எனக்குள் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, தற்காப்புத் திறனையும் அளித்திருக்கிறது. நாளை நான் என்ன வேலைக்குச் சென்றாலும், இந்த அடிப்படை விஷயங்கள் உதவும் என நம்புகிறேன். எனவே, பெண்கள் அவசியம் ஏதேனும் ஓர் தற்காப்புக் கலையைப் பழகுவது அவசியம்" என்கிறார் துணிவான குரலில்.

தற்காப்புக் கலையை வேறு கோணத்தில் பார்க்க வைக்கிற கல்பனாவின் பார்வை நிச்சயம் பாராட்ட வேண்டிய ஒன்றுதான்.  

அடுத்த கட்டுரைக்கு