Published:Updated:

நடிகர்களுக்கு வெறித்தனமான ரசிகரா நீங்கள்? `செலிபிரிட்டி வொர்ஷிப் சிண்ட்ரோம்' அலர்ட்! #CelebrityWorshipSyndrome

திரைத்துறையிலிருந்து தங்களுக்கான தலைவர்களை அரை நூற்றாண்டுகளாகத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார்கள்.

நடிகர்களுக்கு வெறித்தனமான ரசிகரா நீங்கள்? `செலிபிரிட்டி வொர்ஷிப் சிண்ட்ரோம்' அலர்ட்! #CelebrityWorshipSyndrome
நடிகர்களுக்கு வெறித்தனமான ரசிகரா நீங்கள்? `செலிபிரிட்டி வொர்ஷிப் சிண்ட்ரோம்' அலர்ட்! #CelebrityWorshipSyndrome

மிழ்ச் சமூகமும் சினிமாவும் பிரிக்க இயலாத ஒன்று என்றால் அது மிகையில்லை. சினிமாவின் வழியாக உலகத்தைப் பார்த்தவர்கள்தாம் தமிழர்கள். அதன் காரணமாகவே திரைத்துறையிலிருந்து தங்களுக்கான தலைவர்களை அரை நூற்றாண்டுகளாகத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை மக்களுக்கு சினிமாவின் மீதான மோகம் மட்டும் குறையவேயில்லை. ஒரு சிலர் தவிர அனைத்துக் கதாநாயர்களுக்கும் இங்கு ரசிகர் மன்றங்கள் உண்டு. அவர்களின் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாள், முதல் காட்சியே பார்த்துவிட வேண்டும் என்கிற பேராவலோடு இருப்பார்கள் ரசிகர்கள். தங்களின் கதாநாயகர்களுக்கு போஸ்டர் ஒட்டுவது, பிரமாண்டமாகக் கட்-அவுட் வைப்பது, அதற்குப் பாலாபிஷேகம் செய்வது, பால்குடம் எடுப்பது, அலகு குத்துவது எனத் தங்களின் பக்தியை வெளிப்படுத்துவார்கள். இதெல்லாம் காலம் காலமாக நடந்து வருபவைதான். ஆனால், அண்மையில் பொங்கலுக்குப் புதிய திரைப்படங்கள் ரிலீஸான போது நடந்த சம்பவங்கள் நம்மைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில், படம் பார்க்க பணம் தராததால் தந்தையைப் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதற்காக மகன் கைது செய்யப்பட்டார். 40 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தந்தை. இந்தச் சம்பவம் ஒருபுறமிருக்க, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அண்மையில் வெளியான திரைப்படத்தில் நடிகரின் கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்யும்போது அது சரிந்து ஒருவர் பலியாகியிருக்கிறார். ஐந்து பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். 

மேற்கண்ட இரு சம்பவங்களையும் நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. நடிகர்களின் மீதான விருப்பம் வெறியாக மாறி, பெற்ற தந்தையின் உயிரையே பறிக்க நினைத்த இளைஞன் ஒருபுறம். தங்களின் கதாநாயகனின் மீதான கண்மூடித்தனமான அன்பில் ஒரே நேரத்தில் பலர் ஏறிச் சரிந்த கட்-அவுட் மறுபுறம் என நடிகர்களின் மீதான விருப்பம், சிந்தனையை மழுங்கச் செய்ததால், விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

``இப்படிக் கண்மூடித்தனமாக நடந்துகொள்ளும் அளவுக்கு இவர்களைத் தூண்டுவது `செலிபிரிட்டி வொர்ஷிப்', அதாவது, `பிரபலங்களை

வழிபடுதல்' என்கிற மனநலம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைதான்'' என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் 

மேலும், இது குறித்து விரிவாக விளக்குகிறார் அவர்.

``பிரபலங்களை ரசிப்பது, அவர்களைப் பற்றி உரையாடுவது என்பதெல்லாம் இயல்பான ஒரு விஷயம்தான். ஆனால், சிலர் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களைப் பற்றியே எப்போதும் யோசிப்பது, அவர்களைப் போலவே உடையணிவது, நடந்துகொள்வது, அவர்களைத் தங்களின் கடவுளைப் போல் நினைப்பது என ஒரு தீவிர நிலைக்குச் சென்றுவிடுவார்கள். எண்ணச் சுழற்சிக் கோளாறுகள்தான் (Obsessive disorder) இதற்குக் காரணம். அதில் ஒரு வகைதான் இந்த 'செலிபிரிட்டி வொர்ஷிப் சிண்ட்ரோம்'. இதில், அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து மூன்று வகைப்படுத்தலாம்

முதலாவதாக, என்டர்டெயின்மென்ட் - சோஷியல் (Entertainment social)எனும் லேசான பாதிப்பு. இந்த வகையில் தங்களுக்குப் பிடித்த ஹீரோ அல்லது ஹீரோயின்கள், அடுத்து என்ன படத்தில் நடிக்கப் போகிறார்கள், எந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள், எந்தப் படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் எனத் தேட ஆரம்பிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களின் குடும்பம், எத்தனை குழந்தைகள், என்ன உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள், அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்னென்ன என்பது போன்ற பல விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்வார்கள். தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம், நண்பர்களிடம் அதைப் பற்றிப் பேசி மகிழ்ச்சியடைவார்கள். சமூக வலைதளங்களில் அவர்களைப் பற்றி எழுதுவது, உரையாடுவது எனத் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கி வைத்துக்கொள்வார்கள். இந்த அளவில் உள்ளவர்களுக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. இருந்தபோதும், தங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, தாங்களும் அவர்களைப் போலவே மாற ஆரம்பிப்பார்கள். அதன் காரணமாக அவர்களின் சுயத்தைத் தொலைக்க ஆரம்பிப்பார்கள்.

இன்டென்ஸ் - பெர்சனல் (Intense personal) எனும் மிதமான பாதிப்பு. இந்த வகையில் ஆண்கள், தங்களுக்குப் பிடித்த நடிகர்களை தங்களின் கடவுளாகவும், பிடித்த ஹீரோயின்களைத் தங்களின் காதலியாகவுமே நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதேபோல் தான் பெண்களும் தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களைத் தங்களின் காதலராகவே நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். தங்களுக்குப் பிடித்த பிரபலங்களைப் பற்றி யாராவது, ஏதாவது சொல்லிவிட்டால், அவர்களிடம் கோபப்படுவது, சண்டை போடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுவார்கள்.

இந்தநிலையில் இருப்பவர்களுக்கு, தங்கள் மீதான சுயமரியாதை குறைவாக இருக்கும். தாங்கள் நினைத்தது போல் தங்களின் நாயகர்கள் இல்லையென்றால், அவர்களைப் பற்றி ஏதாவது மதிப்புக் குறைவான செய்திகளைக் கேள்விப்பட்டால் பதற்றத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவார்கள். இது அப்படியே தொடரும் பட்சத்தில் மனநலம் சம்பந்தமான பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். இவர்களுக்கு முறையான கவுன்சலிங் அளிப்பதன் மூலம் இந்தப் பாதிப்புகளிலிருந்து மீட்க முடியும். 

அடுத்ததாக, பார்டர்லைன் -  பேத்தோலாஜிக்கல் (Borderline pathological) எனும் முற்றிய நிலை. தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்கள் கடவுளைவிட உயர்ந்தவர்கள் என்று சிந்திப்பவர்கள். அதைக் காப்பாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என யோசிப்பார்கள். அண்மையில் நடந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் இந்த வகையில் வருபவர்கள்தான். தங்களுக்குப் பிடித்தவர்களுக்காக தன்னையும், மற்றவர்களையும் என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள்.

தங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றி யாராவது தவறாகச் சொல்லிவிட்டால், அவர்களைத் தாக்குவது முதல் கொலை செய்யுமளவுக்குக் கூடச் சென்றுவிடுவார்கள். படத்தில் வரும் காட்சிகளைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் வாழ ஆரம்பிப்பார்கள். அதில் வரும் சண்டைக்காட்சிகளைக் கூட செயல்படுத்திப் பார்க்க நினைப்பார்கள். அதன் காரணமாகப் பல்வேறு பிரச்னைகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாவார்கள். இதனால், அவர்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகும். இந்த நிலையில் இருப்பவர்களை ஆரம்பத்திலேயே கண்காணித்து முறையான கவுன்சலிங் வழங்க வேண்டும்.'' என்னும் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம். 

``இந்த விஷயத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்களைவிடப் பிரபலமான நடிகர்கள் நினைத்தால் இதுபோன்ற பாதிப்புகளில் சிக்காமல் இளைஞர்களைக் காப்பாற்ற முடியும். கட்-அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்ற செயல்களைப் பிரபலங்கள் ஊக்குவிக்கக் கூடாது. கடுமையாகக் கண்டித்துப் பேச வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு ரசிகர்களாகவே இருக்கவேண்டாம் எனக் காட்டமான அறிக்கைகள் கொடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்களைப் பிரபலங்கள் வெறுப்பது போன்று காட்டிக்கொண்டால் ரசிகர்கள் நிச்சயமாக மாற வாய்ப்பிருக்கிறது. சட்டத்துக்கு விரோதமாக கட்-அவுட், பேனர் வைப்பது போன்றவற்றைத் தடுக்க அரசும் முறையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்'' என்கிறார் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.