Published:Updated:

கரிசல் மண் எல்லாம் வெள்ளைப் பூக்கள்!

கரிசல் மண் எல்லாம் வெள்ளைப் பூக்கள்!

கரிசல் மண் எல்லாம் வெள்ளைப் பூக்கள்!

மேடைப் பேச்சாளர், கவிஞர் என்று நாடறிந்தவர் ஈரோடு தமிழன்பன். 'வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவர் தன்னுடைய சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலை பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

கரிசல் மண் எல்லாம் வெள்ளைப் பூக்கள்!

''இந்தியாவிலேயே கைத்தறி நெசவுப் பொருட்களின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஊர் சென்னிமலை. ஆரம்பத்தில் சென்னிமலை சிறு கிராமம்தான். பழங்காலத்தில் இருந்தே இங்கு தறி நெசவுதான் பூர்வீகத் தொழில். சென்னிமலையின் மேல் உள்ள முருகன் கோயில் உலகப் பிரசித்திப் பெற்றது. உலகெங்கும் வாழும் முருகன் பக்தர்கள் விரதம் இருந்து இங்கு வருவார்கள். நோன்பு இருந்து முருகனை மனதார வாழ்த்திப் பாடிய கந்தசஷ்டிப் பாடல்கள் எழுதப்பட்ட தலம் இது.

சென்னிமலையில் ஆற்றுப் பாசனமோ வாய்க்கால் பாசனமோ இல்லை. வானத்தையும் கிணற்றுப் பாசனத்தையும் நம்பித்தான் இந்த ஊரின் விவசாயம் இருக்கிறது. ஒருகாலத்தில் மழை செழிப்பாகப் பெய்ததால் எங்கள் கரிசல் மண் எங்கும் வெள்ளைப் பூக்கள் பூத்துக் குலுங்கின. வெளியூர்களில் இருந்து எல்லாம் வியாபாரிகள் இங்கு வந்து பருத்தி வாங்கிச் செல்வார்கள். சிலர் பருத்தி விவசாயத்துடன் நெசவும் செய்தார்கள். தாங்களே பயிரிட்டு, நூலாக்கி... அதை ஆடையாக்கி அணிந்து மகிழ்ந்தார்கள் மக்கள் எம் மக்கள்! காலப் போக்கில் மழை பொய்த்துப்போனது. பூர்வீக விவசாயம் பட்டுப்போனது. தொழிலும் கெட்டுப்போனது. இந்த இடைவெளியை ஆக்கிரமித்துக்கொண்டது விசைத்தறி.

கரிசல் மண் எல்லாம் வெள்ளைப் பூக்கள்!

ஆனாலும், முழுமையாக மூழ்கிவிட வில்லை எங்கள் கைத்தறி. அதற்குக் காரணம், கைத்தறிக் காவலர் மு.ப.நாச்சிமுத்து அய்யா. அவர்தான் கைத்தறித் தொழிலைச் சீர்படுத்தி, நெசவாளர்களை ஒருங்கிணைத்து சென்-டெக்ஸ் நிறுவ னத்தை இங்கு நிறுவினார். இன்றைக்கு எங்கள் கைத்தறித் தயாரிப்புகள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று கண்டம் விட்டுக் கண்டம் செல்லக் காரணம், அந்தக் கைத்தறிக் காவலர்தான்.

சென்னிமலையின் வைரக் கிரீடம் கொடி காத்த குமரன். சென்னிமலையின் கிழக்கு வளவில் ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, வறுமை காரணமாக ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி, திருப்பூர் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதுதான் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, போராட்டத்தில் கொடி காக்க உயிரைத் துறந்தார்!

சென்னிமலையில் மாரியம்மன் பண்டிகை பிரசித்திப் பெற்றது. ஐந்து நாட்கள் பண்டிகை கொண்டாடுவார்கள். எல்லா ஊர்களிலும் திருவிழா என்றால், தின்பண்டக் கடைகள், சட்டிப் பானைக் கடைகள் நிறைந்து இருக்கும். ஆனால், இங்கோ திருவிழாவில் புத்தகக் கடைகளைப் போடுவார்கள். மக்களும் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். சித்ரா பௌர்ணமி வந்தால் ஊர் மக்களுக்கு இரவு முழுவதும் கொண்டாட்டம்தான். அந்தி சாயும்போதே வீட்டில் விதவிதமாகச் சமைத்துச் சாப்பாடு கட்டிக்கொண்டு சென்னிமலையின் உச்சிக்குப் போவோம். அங்கு நிலாச் சோறு சாப்பிட்டு... விடிய விடியப் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்போம்.

இடதுசாரி இயக்கத்தின் முன்னணித் தலைவரான அசோக் மேத்தா, காந்தியவாதி ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர்  இங்கே வந்து சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார்கள். இந்த ஊரைச் சேர்ந்த ராஜா அண்ணன் என்பவர் எம்.ஜி.ஆரின் பால்யகால நண்பர். எம்.ஜி.ஆர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சேலத்தில் நாடக நடிகராக இருந்தபோது அவர்களுக்குள் நட்பு. ஒருமுறை ராஜா அண்ணன் எம்.ஜி.ஆரைச் சென்னிமலைக்கு அழைத்து வந்து நாடக நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்க வைத்தார். அந்த நிகழ்ச்சியில் நான் எம்.ஜி.ஆருக்கு வரவேற்புரை ஆற்றினேன். இப்போது உடலால் நான் சென்னையில் வசித்தாலும் என் உள்ளம் இருப்பது எல்லாம் சென்னி மலையில்தான்!''

கரிசல் மண் எல்லாம் வெள்ளைப் பூக்கள்!
கரிசல் மண் எல்லாம் வெள்ளைப் பூக்கள்!

ச.ஆ.பாரதி

அடுத்த கட்டுரைக்கு