Published:Updated:

``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்!"- மர்மம் விலகாத ஒமுவாமுவா

``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்!"- மர்மம் விலகாத ஒமுவாமுவா
``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்!"- மர்மம் விலகாத ஒமுவாமுவா

அந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி. கனடாவைச் சேர்ந்த வானவியலாளர் ராபர்ட் வேரிக் ஹவாயில் இருக்கும் போதுதான் முதன் முதலாக அதைக் கண்டுபிடித்தார். அப்பொழுது அந்தப் பொருள் பூமிக்கு மிக அருகில் பயணம் செய்து கொண்டிருந்தது. ஆனால் அதை இதற்கு முன்பு வரை யாருமே பார்த்திருக்கவில்லை. அப்படி இருக்கும் போது திடீரென எங்கே இருந்து இது வந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஒரு வேளை அது வேறொரு பால்வெளிப் பகுதியிலிருந்து பயணப்பட்டு வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினார்கள். எனவேதான் அதற்கு ஹவாய் மொழியில் `தொலை தூரத் தூதுவன்' என்று பொருள் கொண்ட ஒமுவாமுவா (Oumuamua) என்ற பெயரைச் சூட்டினார்கள். அது முதலில் விண்கல் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதைக் கவனிக்கும் போது அதில் ஏதோ மர்மம் இருப்பது போலத் தெரிந்தது. 

வேற்றுக் கிரக வாசிகளால் அனுப்பப்பட்ட ஆய்வுக் கலமா ஒமுவாமுவா ?

ஒமுவாமுவா என்ற அந்த மர்மப் பொருள் கண்டறியப்பட்டு ஒரு வருடத்தைக் கடந்திருக்கிறது. ஆனால் அதன் மர்மம் இன்னும் விலகியபாடில்லை. இந்நிலையில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் வானவியல் துறை தலைவரான அவி லோப் (Avi Loeb) அது வேற்றுக் கிரக வாசிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார். கடந்த வாரம் ஹாரெட்ஸ் (Haaretz) என்ற இஸ்ரேல் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில்தான் இதைத் தெரிவித்திருக்கிறார். தற்பொழுது உலகில் இருக்கும் வானவியலாளர்களில் இவர் முக்கியமானவராகக் கருதப்படுபவர். இதே கருத்தை கடந்த வருடமே கூறியிருந்தார். மேலும் அதற்கு என்ன காரணம் என்பதற்கான சில ஆதாரங்களையும் முன் வைக்கிறார்.

ஒமுவாமுவாவைப் பொறுத்தவரையில் அதைச் சந்தேகிக்க வைக்கும் முதல் விஷயம் அதன் பயணப் பாதை. விண்வெளியைப் பொறுத்தவரையில் அங்கே ஈர்ப்பு விசை என்பது இருக்காது. சூரியன் போன்ற நட்சத்திரங்கள் அல்லது பூமி போன்ற கிரகங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொலைவு வரைக்கும் அவற்றின் ஈர்ப்பு விசை இருக்கும். எனவே விண்வெளியில் பயணப்படும் ஒரு பொருள் அதை வேறு புற விசைகள் தொந்தரவு செய்யாத வரை அதன் திசையை மாற்றாமல், வேகத்தில் மாற்றமின்றி பயணிக்கும். அதைத்தான் இயற்பியல் விதிகளும் குறிப்பிடுகின்றன. ஆனால் ஒமுவாமுவாவின் பயணப்பாதை வேறு விதமாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் வேறு ஒரு விஷயமும் இருக்கிறது. அது அதன் வேகம். நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே இருந்து பல விண்கற்கள் உள்ளே வந்து கொண்டிருக்கின்றன. அவை பெரிய அளவிலான விண்கற்களாவோ அல்லது வால்மீன்களோ ஏதுவாக இருந்தாலும் அவை பயணிக்கும் வேகத்தின் தன்மையில் ஓர் ஒற்றுமை இருக்கும். சூரியனை நோக்கி அதி வேகத்தில் வரும் அவற்றின் வேகம் சூரியனை விட்டு விலகிச் செல்லும் போது குறைவாக இருக்கும். ஆனால் ஒமுவாமுவா இந்த விஷயத்திலும் அப்படியே எதிராக இருந்தது. சூரியனை நெருங்கி விட்டு பூமிக்கு அருகில் வந்த போது அதன் வேகம் இயல்புக்கு மாறாக அதிகரித்துக் காணப்பட்டது. இப்படி வேகம் திடீரென அதிகரிப்பது இதற்கு முன்பு ஒரு விண்கல்லுக்கோ அல்லது வால்மீனுக்கோ நடந்தது கிடையாது. 

அடுத்ததாக இதன் வடிவத்தை எடுத்துக்கொண்டால் நீள் வடிவமாகக் காணப்படுகிறது. இப்படி ஒரு வடிவத்தை நமது சூரிய மண்டலத்தில் உள்ளே இருக்கும் விண்கற்களில் பார்க்க முடியாது. மேலும் இது விண்கல் அல்லது வால்மீனுக்கான தன்மைகளையும் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் வால்மீன்கள் சூரியனை நெருங்கும் போது தூசிகளையும், வாயுக்களையும் வெளியிடும். அதன் மூலமாக அவற்றை எளிதாக அடையாளம் காண முடியும். ஆனால் ஒமுவாமுவாவில் அதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை. இது போல பல விஷயங்களில் அது மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால்தான் ஒமுவாமுவா வேற்றுக் கிரக வாசிகளுக்குத் தொடர்புடைய ஒரு பொருளாக இருக்கக்கூடும் என அவி லோப் சந்தேகித்திருக்கிறார். ஒரு வேளை இது நமது சூரியக் குடும்பத்தை ஆராய அவர்களால் அனுப்பப்பட்ட ஆய்வுக் கலமாக இருக்கவும் வாய்ப்புண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

``இது மட்டும் உண்மையாக இருந்தால் மனிதனின் வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருக்கக் கூடும்" மேலும் " எதிர்காலத்தில் நாம் சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறும் போது வேறு சிலரையும் சந்திக்க வேண்டியிருக்கலாம்" என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவரை வேற்றுக் கிரகவாசிகள் பூமிக்குள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏலியன்கள் என்பதே கற்பனை விஷயமாகத்தான் இதுவரை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.