Published:Updated:

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லகின் மிகப் பழமையான வாய்க்கால்களில் ஒன்றாக ஐ.நா. அவையால் அங்கீகரிக்கப்பட்ட வாய்க்கால் ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால். பவானி ஆற்றில் இருந்து பிரிந்து 56 மைல் தூரம் சீறிப் பாய்ந்து ஓடுகிறது இந்த வாய்க்கால். ஒருகாலத்தில் ஓஹோ என்று விவசாயத்தைச் செழிக்கவைத்த இந்த வாய்க்காலை இன்று பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது. வரலாறு தெரியாமல் இந்த வாய்க்காலைக் களங்கப்படுத்திவிட்டன தோல் தொழிற்சாலைகள். இதன் நெகிழ்வூட்டும் வரலாற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஈரோட்டைச் சேர்ந்த 'இந்தியாவுக்காக இந்தியர்கள்’ அமைப்பின் அகரம் பார்த்திபன்.

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!
##~##

''தன்னைத் தானே நாடு கடத்திக்கொண்ட ஒரு மன்னன் இருந்தான் என்றால், அவர்தான் காலிங்க ராயன். அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு என ஐந்து நாடுகளாக இருந்தது. கி.பி 1282-ல் பாண்டிய மன்னன், வீரபாண்டியனின் பிரதிநிதியாகப் பூந்துறையைத் தலைமை இடமாகக்கொண்டு கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர் காலிங்கராயன். இவருடைய சொந்த ஊர் வெள்ளோடு. இவர் வாழ்ந்த பகுதிகள் முழுவதும் மேட்டுப் பகுதிகள் என்பதால் இங்கு ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனம் மட்டும்தான்.

போதுமான நீர் வசதி இல்லாததால், இங்கு விவசாயம் செழிக்கவில்லை. முக்கிய உணவுப் பயிரான நெல்கூட விளைவிக்க முடியவில்லை. இந்த நிலையில் காலிங்கராயன், தன் மகனுக்குப் பெண் கேட்க தஞ்சைப் பகுதியில் வசிக்கும் தன் சகோதரி வீட்டுக்குப் போனார். அப்போது அந்த வீட்டின் சமையல்காரன், 'இவர் களுக்கு விருந்து சமைக்கப் பழைய அரிசி போடுவதா? புதிய அரிசி போடுவதா?’ என்று கேட்டு இருக்கிறான். அதற்கு காலிங்கராயனின் உறவினர்கள், 'நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த அரிசியாக இருந்தால் என்ன?’ என்று கேலி செய்திருக்கிறார்கள்.

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!

இதைக் கேட்டுப் பொறுத்துக்கொள்ள முடியாத காலிங்கராயன், எங்களுடைய புன் செய் நிலங்களை எல்லாம் நன்செய் நிலங்களாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். பவானி ஆற்றில் இருந்து தங்களுடைய மேட்டுப் பகுதியை நோக்கி வாய்க்கால் வெட்டி நீரைக் கொண்டுவருவதுதான் காலிங்கராயனின் திட்டம். ஆனால், மேட்டுப் பகுதியை நோக்கி வாய்க்கால் வெட்டுவது சாத்தியம் இல்லை என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

ஒருநாள் காலிங்கராயனுக்கு ஒரு பாம்பு, மேட்டை நோக்கி வளைந்து நெளிந்து செல்வதுபோலக் கனவு வருகிறது. அதன்படி வாய்க்காலையும் வளைத்து நெளித்து வெட்டுவது என முடிவு எடுக்கிறார். வாய்க்கால் வெட்டுவதற்கு நிதி கேட்டு இவர் தன் இன மக்களிடம் போனபோது, எவருமே உதவ முன் வரவில்லை. அப்போது இவருடைய தாயார், 'தயிர் விற்ற பணம் தாவாரம் வரை கிடக்குது; மோர் விற்ற பணம் முகடு வரை கிடக்குது; எடுத்து வாய்க்காலை வெட்டு’ என்று சொல்லவே, வாய்க்கால் வெட்டும் பணியைத் தொடங்குகிறார். காலிங்கராயன் வாய்க்காலை வெட்டும்போது, அவருக்கு உடல் உழைப்பில் பெரிதும் கைகொடுத்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களே.

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!

அவர் சபதம் எடுத்தபடியே வெற்றிகரமாக வாய்க்காலை வெட்டி பவானி ஆற்றுத் தண்ணீரை மேட்டுப் பகுதியை நோக்கிப் பாயச் செய்தார். புன்செய் நிலங்கள் எல்லாம் நன்செய் நிலங்களாகின. அப்போது, 'காலிங்கராயன் தன்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்காகத்தான் வாய்க்காலை வெட்டினார்’ என்று சிலர் பேசக் கேட்ட காலிங்கராயன், 'இந்த வாய்க்காலில் இருந்து நானோ என்னுடைய சந்ததியினரோ ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூடப் பயன்படுத்த மாட்டோம்’ என்று சொல்லிவிட்டு, ஊத்துக்குளிக்கு இடம் பெயர்ந்துவிட்டார்.

உலகிலேயே மேட்டை நோக்கிப் பாய்கிற ஒரே வாய்க்கால் இது ஒன்றுதான். வளைந்து நெளிந்து பாய்வதால் இதைக் கோணவாய்க்கால் என்றும் சொல்வர். 800 ஆண்டுகள் பழமையான இந்த காலிங்கராயன் வாய்க்காலை, கழிவுகளில் இருந்து காப்பாற்றுவதே தன்மானத் தமிழன் காலிங்கராயனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்!'' என்கிறார் பார்த்திபன்.   

காக்க... காக்க காலிங்கராயனைக் காக்க!

- கி.ச.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு