Published:Updated:

நிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா!

நிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா!
நிலவில் முளைவிட்ட பருத்தி விதை... சாதனைப் படைத்த சீனா!

சந்திரனில் முதல் முறையாக ஒரு பருத்தி விதையை முளைக்கச் செய்யும் முயற்சியில் வெற்றியடைந்திருக்கிறது சீனா. நிலவில் மனிதர்கள் இறங்கி, பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும்கூட அதன் மறுபக்கத்தைப் பற்றிய பல தகவல்கள் தெரியாமலேயே இருந்து வந்தன. எனவே, அதன் சந்திரனின் மறு பக்கத்தில் இறங்கி ஆய்வு செய்வதற்காகக் கடந்த டிசம்பர் மாதம் Chang'e 4 என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது சீனா. அந்த விண்கலம் இந்த மாத தொடக்கத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அங்கே தாவரங்கள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக `சிறு உயிர்க் கோளம்’ என்ற சோதனையை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்காக விதைகள், மண், காற்று, நீர் என ஒரு தாவரம் வளர்வதற்குத் தேவைப்படும் பொருள்களைக் கொண்ட ஒரு கொள்கலன் அந்த விண்கலத்தினுள்ளே இருந்தது. சோங்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதை உருவாக்கியிருந்தார்கள். இந்நிலையில் நேற்றைக்குப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்கள் இந்தப் பரிசோதனை வெற்றி பெற்று விட்டது என அறிவித்திருக்கிறார்கள். அதன் படி 3-ம் தேதி விண்கலம் நிலவில் இறங்கியவுடன் விதைகள் வளர்வதற்காகத் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அதன் பிறகு சில நாள்கள் கடந்து விட்ட நிலையில் கொள்கலனில் இருந்த பருத்தி விதை முளைவிட்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ``சந்திரனின் மேற்பரப்பில் மனிதன் உயிரியல் வளர்ச்சி சோதனைகளை நடத்தியது இதுவே முதல் முறை’’ என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, இது விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.