'ஆனை ஆனை அழகர் ஆனை...
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை...
கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை...
மாயாறுத் தண்ணீரைக் கலக்கும் ஆனை... 
குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சுதாம்...
பட்டணம் எல்லாம் பறந்தோடிச்சாம்...’

- அந்த யானைகளைப் பார்த்ததும் சிறு பிள்ளையாக மாறி கொங்குமண்டலத்துக்கு ஏற்றபடி ரீ-மிக்ஸ் பாட்டுப் பாடினேன்!

வள்ளியே சுந்தரவள்ளியே...

முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமில்தான் இந்த உற்சாகப் பாட்டு. கொஞ்சம் யானை கதை பேசுவோமா?

##~##

குமரனுக்கு உடம்பு எல்லாம் மச்சம்! முகாமுக்கு வந்த 37 பேரில் அவன் மட்டும்தான் செம க்யூட் பாய். வயசுப் பொண்ணு யானைகள் எல்லாம் அவனை வைத்த கண் வாங்காமல் சைட் அடிக்க... பாவம், 'மகளிர் மட்டும்’ பஸ்ஸில் மாட்டிய வாலிபப் பையன் நிலைமை ஆகிவிட்டது அவனுக்கு. அதுவும் அவன் ஸ்டைலாக ஒரு கரும்புத் துண்டைத் தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்தால் சுற்றி நின்று பிளிறிக் கலாய்க்கிறார்கள் தோழிகள்!

கடந்த கால முகாம்களில் 50-ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, இந்த முறை 37-ஆகக் குறைந்துவிட்டது. எட்டுப் பேருக்குக் காய்ச்சல் என்பதால் லீவு கொடுத்துவிட்டார்கள்! முகாமில் யானைகளுக்கு செம குஷி. என்ன ஒன்று, கோயிலில் இருந்து லாரியில் மேட்டுப்பாளையம் வரும் வரையில் வண்டியின் குலுக்கல்களில் டார்ச்சர் ஆகின்றன யானைகள். ஆனால், ஊட்டி மலை ஏற்றப்பட்டபோது சிலுசிலுவென்ற குளிர்ந்த காற்றில் கிறங்கிப்போயின.

முகாம் நடக்கும் தெப்பக்காடு பகுதி அருகே தங்களை வரவேற்று அடிக்கப்பட்ட செவி அதிரும் மேளதாள சத்தத்தைக் கேட்டதும், 'ஆஹா! காட்டுக்கு உள்ளேயும் சாமி சிலையைத் தூக்கச் சொல்லு வாங்களோ?’ என்பதுபோலக் கொஞ்சம் ஜெர்க் ஆகின. ஆனால், முகாமுக்குள் நுழைந்ததும் 'நெக்ஸ்ட்... ரெஸ்ட்டோ ரெஸ்ட்’ என்று லைஃப் ஸ்டைல் மாறிப்போனதில் படு உற்சாகம் அவற்றுக்கு.

கேரள ஆயுர்வேத சிகிச்சைக்கு வந்த வி.ஐ.பி. போல் முகாமில் யானைகளுக்கான தினப்படி கவனிப்பு செம ஆரோக்கியமாக இருக்கிறது. முதுமலை மூலிகைச் செடிகள் இடையே ஊர்ந்து, வளைந்து ஓடும் மாயாற்றில் அழுக்குத் தேய ஆனந்தக் குளியல் போடுவதால், யானைகளுக்குச் சதை இடுக்கு களில் உள்ள புண்கள் எளிதில் ஆறிவிடுமாம். சூர்யோ தயத்தில் நடைப் பயிற்சி, குடல் புழுக்களை வெளியேற்றும் குணம் படைத்த மஞ்சள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் அடங்கிய உணவு என்று அத்தனையுமே 'அடடே’ கவனிப்புகள்.

37 பேரையும் கூர்ந்து கவனித்தால் 'ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு ஃபீலிங்’மா! ஸ்ரீபெரும் புதூரில் இருந்து வந்திருக்கும் கோதைக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அடிக்கடி சர்க்கஸ் ஜம்போபோல் முன் இரு கால்களை யும் தூக்கி, கியாமியாவெனப் பிளிறுகிறாள். 'நட ஆனை, படு ஆனை’ என்று பாகன் லேசாக அதட்டினாலும் அடங்குவது இல்லை. பதிலுக்குப் பாகனைச் செல்லமாக முட்டிக் கலாய்க்கிறாள் அவள்.

வள்ளியே சுந்தரவள்ளியே...

அழகர்கோவில் சுந்தரவள்ளிதான் எல்லோரையும்விட ஜூனியராம். அறுந்த வாலுப் பிள்ளை இவள். பக்கத்தில் இருக்கும் லட்சுமியின் வாலைப் பிடித்து இழுப்பது, நடைப் பயிற்சிக்குப் போகும்போது எதிரே வரும் யானைகளின் துதிக்கையில் இருந்து கரும்பைப் பிடித்து இழுப்பது, அசந்து படுத்திருக்கும் யானையின் அடிவயிற்றில் கிச்சுமுச்சு மூட்டுவது என்று ஆல் டைம் அழிச்சாட்டியம் செய்கிறாள். முகாமின் கடைக்குட்டி என்பதால் ஓவர் செல்லமும்கூட.

   முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கத்து ஆண்டாள், பெட் காபி குடிக்காமல் எழுந்திருப்பது இல்லை. அதுவும் ஃபில்டர் காபிதான் வேண்டுமாம்! செம சுகவாசி இவள். தலையில் கோதிவிட்டால் ஆனந்தமாகக் கண் சொருகுகிறாள். கூடவே, குறும்பும் இருக்கிறது. நெற்றியில் நாமம் வரைந்துகொண்டு இருந்த பாகனிடம் இருந்து சாக்பீஸைப் பிடுங்கி, புதருக்குள் ஒளித்துவைத்துவிடுகிறாள். திரும்பவும் இன்னொரு சாக்பீஸைக் கொண்டுவந்தால் அதையும் பிடுங்கிக்கொள்கிறாள். பாகன்கொஞ்சி, கெஞ்சினால்தான் திரும்ப எடுத்துக்கொடுக்கிறாள். திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயிலின் குமரனுக்குச் சில யானைகள் சன்னமாக ரொமான்ஸ் குரல் கொடுக்க... அவன் நெளிவதைப் பார்க்கச் செம கிளுகிளுப்பு!

வள்ளியே சுந்தரவள்ளியே...

பொதுவாக, வளர்ப்பு யானைகளைக் காட்டு யானைகள் விரும்புவது இல்லை. அதனால், இந்த யானைகளின் சிறுநீர் மற்றும் சாண வாசனை வனத்தில் சுற்றித் திரியும் சில ஆண் யானைகளை டிஸ்டர்ப் செய்திருப்பதாகத் தகவல். இரவு நேரங்களில் முகாமைச் சுற்றி போடப்பட்டு இருக்கும் வேலி ஓரமாக காட்டு ஆண் யானைகளின் நடமாட்டம் தென்படுகிறதாம். உடலுறவு வேட்கையோடு உலாவரும் 'மஸ்து’ பிடித்த ஆண் யானைகள் ஏதாவது உள்ளே புகுந்துவிட்டால், சிக்கலாகிவிடுமே என்பது பாகன்களின் கவலை.

48 நாட்கள் நடக்கும் முகாம் மூலம் யானைகளின் உடலும் மனசும் புத்துணர்வு பெற வாய்ப்பு அதிகம். ஆனால், முகாம் முடிந்த பின்பு ஆலயம் நோக்கி நகர்த்தப்படும்போது 'வீ மிஸ் யூ மா’ என்று வனம் பார்த்து யானைகள் பிளிறப்போவது யாருக்குப் புரியும்?!

வள்ளியே சுந்தரவள்ளியே...

- எஸ்.ஷக்தி,சித்தார்த்
படங்கள்: கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு