Published:Updated:

சரிகமபதநி டைரி - 2018

விகடன் விமர்சனக்குழு

சரிகமபதநி டைரி - 2018

பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2018

த்து நிமிடங்களுக்கு முன்பாகவே அரங்கம் வந்து விட்டார் அந்த மூதாட்டி. 80 ப்ளஸ் வயதிருக்கும். முதுகு குனிந்து வாக்கரின் உதவியுடன் கவனமாக நடந்து இருக்கையில் வந்தமர்ந்தார். (மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்)

சரிகமபதநி டைரி - 2018

“ரொம்ப உடம்புக்கு முடியல...” என்றார் தன்னை விசாரிக்க வந்தவரிடம். ‘`சீஸன்ல பரத்சுந்தர், வித்யாவை அஞ்சு தடவையாவது கேட்பேன்... போன தடவை நாரதகான சபாவுல கீழே விழுந்துட்டேன்... அதிலேர்ந்து அலைய முடியல... நேத்து அகாடமில பரத்சுந்தர் கேட்டேன்... இன்னிக்கு வித்யாவைக் கேட்க வந்திருக்கேன்... இங்கே இருந்துண்டு பேப்பர் பார்த்தா தினமும் எதாவது கச்சேரிக்குப் போகணும்னு தோண்றது... இந்த மாதக் கடைசில 75 கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற முதியோர் இல்லத்துல போய்ச் சேர்ந்துடப்போறேன்... வித்யாகிட்ட பாட்டி ரொம்ப கேட்டேன்னு சொல்லு...” என்று அம்மையார் முடிக்க, திரை விலகியது.

குழந்தைப் பருவத்தில் அபஸ்வரம் ராம்ஜியின் இசைமழலைக் குழுவில் இணைந்து, படிப்படியாக வளர்ந்தும் வளர்க்கப்பட்டும் கிடுகிடுவென்று முன்னேறி, இன்று தனக்கென்று இடம் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறார் வித்யா கல்யாணராமன்.

யாரோ வலுக்கட்டாயமாகத் தன்னை இசை வட்டத்துக்குள் பிடித்துத் தள்ளி விட்டதுபோல் விளக்கெண்ணெய் முகத்துடன் இல்லாமல், அனுபவித்து முழு சந்தோஷத்துடன் பாடுகிறார் வித்யா. பாசிட்டிவ் உடல் மொழியுடன் பக்கவாத்தியக் கலைஞர்களுடன் கண்களாலேயே உரையாடுகிறார். கேட்பவர்களிடம் உற்சாக உரமேற்றுகிறார். cliche தான் என்றாலும், சொல்லாமல் இருக்க முடியவில்லை. எதிர்கால நம்பிக்கை ஸ்டார் வித்யா!

சரிகமபதநி டைரி - 2018

நீலகண்ட சிவனின் ‘என்றைக்கு சிவ கிருபை வருமோ’ பாடலை ‘கன்றின் குரல் கேட்டுத் தெரிந்து வரும் பசுபோல்’ என்று அனுபல்லவி வரிகளுடன் ஆரம்பித்தபோது, அரங்கினுள் பசுக்களும், கன்றுகளும் நுழைந்து விட்ட பிரமை! இந்தப் பாடலுக்கான முகாரி ராக ஆலாபனை அருமை. குரலில் கொஞ்சம் கனம் கூட்டிக்கொண்டால் இன்னும் ஜோராக இருக்கும்.

‘மீனாட்சிமேமுதம்’ என்கிற தீட்சிதரின் கமகக்ரியா ராக (நமக்கெல்லாம் பூர்வி கல்யாணி!) பாடலில் ஸ்வரங்களின்போது தச கம கப்ரியே என்று பிரித்து ரிபீட் செய்து பாடி, தன் குரு சுகுணா வரதாச்சாரியாக்கும் என்பதை உணர்த்தினார்! முத்துசுவாமி தீட்சிதர் எட்டயபுரத்தில் தனது கடைசி சுவாசம் அடங்குவதற்கு முன்பாக சீடர்களை இந்தப் பாடலைத்தான் பாடச் சொல்லிக் கேட்டிருக்கிறார். ‘மீனலோசனி பாசமோசினி’ என்ற வரியை முணுமுணுத்துக்கொண்டே மீனாட்சிதேவியுடன் கலந்துவிடுகிறார். இது வரலாறு.

சரிகமபதநி டைரி - 2018

“ `என்னடி மாயாவி நீ...’ என்கிற கவிஞர் விவேக்கின் வரிகளை, சந்தோஷ் நாராயணனின் இசைமைப்பில் பாடி ‘வட சென்னை’யில் இன்னொரு ஹிட் கொடுத்த சித் ஸ்ரீராம், தென் சென்னையில் சபா மேடைகளில் மும்மூர்த்திகளின் பாடல்களைப் பாடி, புகழ் ஏணியில் இப்போது விறுவிறுவென்று ஏறிக்கொண்டிருக்கிறார்.

மீனாட்சி மகளிர் கல்லூரியில் இவரின் கச்சேரி. மேடையில் இவர் வந்து நின்றதும், அரங்கின் பின் வரிசையிலிருந்து ‘ஆ... ஊ...’ என்று உரக்கக் குரல் கொடுத்து வரவேற்றவர்கள் கல்லூரி மாணவிகள்!

அதட்டல், உருட்டல், மிரட்டல் குரல் சித் ஸ்ரீராமுக்கு. அதை உயர்த்திப் பாடும்போது பெருசுகள் காதுபொத்திக் கேட்க வேண்டிய பரிதாபம். கர்னாடக இசைப் பாடல்களில் சாந்தமும் சௌக்கியமும் முக்கியம் என்பதை உணர்ந்து குரலைச் செப்பனிட்டுக்கொண்டால் ஸ்ரீராம் உச்சம் தொடுவது நிச்சயம். ஏற்கெனவே கலைந்திருக்கும் தலைமுடியை மேலும், கலைத்து விட்டுக்கொள்வது இவரின் ஸ்டைல்!

மகளிர் கல்லூரியில் தர்மவதியும், காம்போதியும் முழு நிலவாக வெளிச்சம் பரப்பின. ஆலாபனையில் பக்கத்து வீட்டு ஸ்வரங்கள் எதுவும் மூக்கை நுழைக்கவில்லை. சஞ்சாரங்களில் கீழும் மேலுமான பயணத்தில் சில இடங்கள் ‘ஆகா’ போடவைத்தன. பூர்விகல்யாணியைக் கொஞ்சமாகப் பாடினாலும் மிக்ஸியில் சுற்றிய ஜூஸாக அது இனித்தது. மீனாட்சி மேமுதம் கீர்த்தனை. ‘மீனலோசனி பாசமோசனி’யில் நிரவல். தம்பி பாஸ் ஆயிட்டாரு!

காலையில் துயில் எழுந்ததும், சீதா பிராட்டியின் கர ஸ்பரிசத்தினால் தூய்மை பெற்ற வெண்ணெயையும், பாலையும் அமுது செய்யும்படி ரகுவீரனை வாஞ்சையுடன் அழைக்கிறார் தியாகராஜர் (ஆரகிம்பவே - தோடி) சித் ஸ்ரீராம் பாடிய தினுசில் தியாகராஜரும் அன்று பாடியிருந்தால் அந்த ஸ்ரீராமனுக்கு அமுது அஜீரணம் கண்டிருக்கும்!

சரிகமபதநி டைரி - 2018

எஸ்.வரதராஜன் வயலின், நெய்வேலி வெங்கடேஷ் மிருதங்கம். கேட்கணுமா? கேட்கணும். நிச்சயம் கேட்கணும்.

ட மொழியில் ஒரு சுந்தரகாண்டம் சுலோகத்துடன் கச்சேரி தொடங்கினால், பாடுபவர் அமிர்தா முரளி என்று பார்க்காமலே சொல்லிவிடலாம். அவசரமற்ற, ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான சங்கீதம் மியூசிக் அகாடமியில் வழங்கினார். இதை வைத்தே முன்னேறிவிட முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இவருக்கு பலிக்கட்டும்!

தியாகராஜரின் உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகளில் ஒன்றாக, ‘படலிக தீர’ என்ற ரீதிகௌள பாடலும் ஒன்று. சீதையுடன் காட்டுக்குச் சென்று, மாயமானைக் கொன்று, மூர்க்கனாகிய ராவணனின் மதத்தையடக்கி, ஐயமில்லாத விபீஷணனுக்குப் பொன்மயமான இலங்காபுரியை அளித்து... என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இது மாதிரியான ராமாயண உபன்யாசப் பாடலை கச்சேரி மேடைக்குயில் பாடிய அமிர்தாவுக்குப் பாராட்டு. இவரின் பட்டியலில் வராளி, கல்கட, கல்யாணி, கரகரப்ரியா ராகங்கள் அணிவகுக்க, வயலினில் அனுராதா ஸ்ரீதர் பக்கவாத்தியதர்மம் மீறாமல் அழகுபடப் பின் தொடர்ந்தார்.

சங்கீத மும்மணிகள் எம்.எஸ்., டி.கே.பி.,
எம்.எல்.வி. ஆகியோர் அமர்ந்து கோலோச்சிய நாற்காலியில் இன்றைய இளைஞிகளில் யார் உட்காரப் போகிறார்கள்? சும்மா சைக்கிள் கேப்ல ஒரு கேள்வி!

குரு சஞ்சய் ஸ்டைலில் பாடுவதை விட்டு விட்டு தனக்கென்று தனி ஸ்டைலில் பாட ஆரம்பித்திருக்கிறார் சந்தீப் நாராயணன். மிமிக்ரியை நிறுத்திவிட்டதில் மகிழ்ச்சி!

சரிகமபதநி டைரி - 2018

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கச்சேரியில் மோகனத்தில் வர்ணம், கேதாரத்தில் ஆனந்த நடன பிரகாரம், ஆபோகியில் விருத்தம் பாடி சபாபதிக்கு, கலகலவென்று கணீர்க் குரலில் டேக் ஆஃப். இவரிடம் பாவம், உருக்கமெல்லாம் ரேஷனில்தான் கிடைக்கும்!

அம்பானி வீட்டுக் கல்யாணம் மாதிரி சங்கராபரணத்தைத் தடபுடலாக அலங்காரம் செய்து மிரளச் செய்யவில்லை சந்தீப். சின்ன மண்டபத்தில் நடக்கும் சிம்பிள் திருமணத்துக்கு ஒப்பானது அவரது ஆலாபனை.

கேட்கும் திறனற்றவரின் காதில் சங்கு ஊதுவது மாதிரியாக, இரண்டுமணிநேரக் கச்சேரியில் ராகம் - தானம் - பல்லவி தேவையா என்ற பழைய பல்லவியைப் பாடாமல், இதனால் தனி ஆவர்த்தனத்துக்கு நேரம் கம்மியாகிவிடுகிறதே என்று ஆதங்கப்படாமல், ரா - தா - ப - விக்கு சந்தீப் பாடிய சண்முகப்ரியாவைக் கேட்டால், அது பழுதற்றதாகவே இருந்தது என்பது நிஜம்!

முதுகுப் பிரதேசத்தில் இடுப்புப் பகுதியில் ஏதோ பிரச்னை. அதனால் மேடையில் சப்பணமிட்டு அமர முடியவில்லை. நாற்காலியில் உட்கார்ந்து பாடினார் இளைஞர் ஸ்ரீராம் பார்த்தசாரதி, பார்த்தசாரதி சுவாமி சபாவில். இந்நேரம் குணமாகியிருக்கும்.

இவர் பாடிய தினம் வைகுண்ட ஏகாதசி.  அதனால், அனைத்துப் பாடல்களும் விஷ்ணுமீதாகவே இருந்தன. இரும்பு மாதிரியான ஸ்ட்ராங்கான குரலில் அடாணாவில் ‘நாரத கான லோல...’வை ஆரம்பித்தபோதே, ஆடியன்ஸ் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். அடுத்து வந்ததும் அந்த மகானின் பாடல்தான். திருப்பதியில் திரை விலக வைத்த கௌளிபந்து ராகப்பாடல்.

பெருமாளின் வீதி உலா தொடர்ந்தது. நெய்வேலியாரின் சீடரான ஸ்ரீராம், சுரட்டி ராகத்தை விரிவாக்கத்துக்கு எடுத்துக்கொண்டார். குரல் சூப்பராக ஒத்துழைக்க, கீழ் ஸ்தாயியில் சுரட்டி சங்கதிகள் சுழன்று அடித்தன. வளர்ந்து செல்லும்போது காதுகளுக்குள் வட்டமடித்தது. தீட்சிதரின் ‘ஸ்ரீ வேங்கடகிரீஸ’ பாடலில் பாவங்களைப் போக்கும் திருகோகர்ண க்ஷேத்திரத்தில் உறைபவனை தரிசித்து கோவிந்தா போட வைத்தார்!

சரிகமபதநி டைரி - 2018

ஸ்ரீராம் பாடியதில் அன்றைய பெஸ்ட், மாரு பெஹாக் ராகம். இந்துஸ்தானி உஸ்தாதுகளுக்கு சவால் விடுவது மாதிரி, ஏற்ற இறக்கங்களை அழுத்தமாக வெளிப்படுத்தி ஸ்ரீராம் பாடியதும், மைசூர் வி.ஸ்ரீகாந்த் வயலினோடு வாரணாசி வரை பின்தொடர்ந்ததும் ஜோர். ‘காயதி வனமாலி’ என்கிற சதாசிவ பிரம்மேந்திரரின் கீர்த்தனை.

‘வரலாமா உன் அருகில்... பெறலாமா உன் அருளை’ - இது ‘சர்வம் தாள மயம்’ சினிமாவில் இடம் பெறும் பாடல். ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியிருக்கிறார். கேட்டால் பிடிக்கும்!

பாரதிய வித்யா பவன் மெயின் ஹாலில் (கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்) ஸ்ரீரஞ்சனி சந்தான கோபாலன். வயலின், பி. அனந்தகிருஷ்ணன்; மிருதங்கம், சாய்கிரிதர்; கடம், திருச்சி முரளி.

ஆலாபனைச் சுற்றில் பாடகி பாடிய அத்தனையையும் வயலினில் திருப்பி வாசிக்க அவசியமில்லை. அதேபோல், அவர் பாடியதை விட்டுவிட்டு சொந்த சரக்கை இவர் வாசிக்கவே கூடாது. மகா பாவமது!

பாடகி பாடிக்கொண்டிருக்கும்போது அது காதிலேயே விழாத அளவு மிருதங்கத்தில் துணி தோய்த்துக்கொண்டிருக்கக் கூடாது. மிருது அங்கம் என்றே அதற்குப் பெயர். தனியின்போது எதிரில் வயலினுடன் உட்கார்ந்திருப்பவரைப் பார்த்து - அவர் எவ்வளவுதான் நண்பராக இருப்பினும் - சிரித்துக்கொண்டே வாசிக்கக் கூடாது. மேடை நாகரிகம் பின்பற்றணும்!

ஸ்ரீரஞ்சனி பாடும்போது கலர் மத்தாப்பு சத்தம் போட்டு எரிவதுபோல் இருந்தது. புஸ்வாணம்போல் வண்ண மயம். சங்கதிகளிலும், பிருகாக்களிலும் கெட்டித் தயிரில் தேன் கலந்த மாதிரி அத்தனை இனிமை. முக்கியமாக பந்துவராளி ஒரு சோற்றுப் பதம். ராகத்தை அவர் வளர்த்திச் சென்ற விதமும், உதடுகளைக் குவித்துக்கொண்டு ‘ம்...’கார நாதம் ஒலிக்க அங்கங்கே பந்துவராளியுடன் கபடி விளையாடியதும் சுற்றுச் சூழலை குஷிப்படுத்தின! தியாகராஜரின் ‘ரகுவர நந்நு...’வும், ‘மனசுந நீகே கொந்நானு’ வரிகளில் நிரவலும் விறுவிறு சுறுசுறு...

இசைத் துறையில் dynasty பிரச்னை கிடையாது. வாரிசுகள் முன்னுக்கு வந்தால் வயிறு எரியாமல் வரவேற்பவர்களே அதிகம்!

- டைரி புரளும்...

வீயெஸ்வி - படங்கள்: கே.ராஜசேகரன், சு.குமரேசன், பிரியங்கா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு