Published:Updated:

108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி மருத்துவர்! - தகவல் வெளிவந்தது எப்படி?

108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி மருத்துவர்! - தகவல் வெளிவந்தது எப்படி?
108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி மருத்துவர்! - தகவல் வெளிவந்தது எப்படி?

ந்தியாவின் மற்ற மாநிலங்களை விடத் தமிழக சுகாதாரத் துறை முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது என்று ஆளும் அரசாங்கம் பெருமிதம் பேசி வருகிறது. ஆனால், உடலுறுப்பு தானத்தில் முறைகேடு, ரத்தப் பரிமாற்றத்தில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று என சுகாதாரத் துறை மீது எழுந்துள்ள அடுத்தடுத்த புகார்கள், மக்களின் நம்பகத்தன்மையை அசைத்துப் பார்ப்பதோடு அச்சத்தையும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்து சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையின் அவசர சிகிச்சை மையத்தில் ரேச்சல் ஜெனிபர் என்ற பெண் மருத்துவராகப் பணியாற்றியுள்ள அதிர்ச்சித் தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது.

விபத்து, மருத்துவ அவசரங்கள், பிரசவம் என அவசரக் காலங்களில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான உன்னதத் திட்டமாக 2008-ம் ஆண்டு தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் 108 ஆம்புலன்ஸ் சேவை. GVK EMRI (Emergency Management and Research Institute) என்ற தனியார் நிறுவனம் இந்தச் சேவையை அளித்து வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவைக்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின்னர் அவற்றின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனை சேவைகளை அளிக்கும் 104 தொலைபேசி சேவை, பிரசவித்த தாய்மார்களுக்கான தாய்சேய் வாகன சேவைத் திட்டத்துக்கான 102 தொலைபேசி சேவை, பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளுக்கான 14417 தொலைபேசி சேவை, சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கான அவசர சிகிச்சை மையம் உள்ளிட்ட சேவைகளையும் இதே நிறுவனம்தான் வழங்கி வருகிறது. இந்நிலையில் உயிர்காக்கும் சிகிச்சையாகக் கருதப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி மருத்துவர் பணியாற்றியது மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி காவல் துறையில் கொடுத்த புகாரையடுத்தே இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. அவரிடம் பேசினோம்.

``சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் அரசு, தனியார் கூட்டமைப்பில் இயங்கி வரும் அவசர சிகிச்சை மையத்தை ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த மையத்தில் மருத்துவராக வேலை பார்க்கும் ரேச்சல் ஜெனிபர் எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்காமல், போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கி பணி மேற்கொண்டு வருவதாக எங்கள் இயக்கத்திற்குத் தகவல் கிடைத்தது. 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்தான் தகவலைத் தெரிவித்தார்.

நாங்கள் விசாரித்ததில், ரேச்சல் ஜெனிபர் அளித்த சான்றிதழில், 2015-ம் ஆண்டு அவர் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்ததாகவும் '103680' என்ற பதிவெண்ணில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த விவரங்களை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் இணையத்தில் சரிபார்த்தபோது அது வேறொரு மருத்துவரின் விவரங்களைக் காண்பித்தது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு புகார் அளித்தபோது அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. பலமுறை ஈஞ்சம்பாக்கம் அவசர சிகிச்சை மையத்திலும் புகார் அளித்தோம் அப்போதும் நடவடிக்கை எடுக்காததால், இறுதியாக நீலாங்கரை காவல் நிலையத்தில் கடந்த 12-ம் தேதி புகார் கொடுத்தோம். அதன்பிறகே, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் தரப்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்து நான்கு நாள்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், ரேச்சல் ஜெனிபரை இதுவரை கைது செய்யவில்லை. அவரின் முகவரி இருந்தும், இன்னும் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இது வேடிக்கையாக இருக்கிறது. அவர் அந்த சிகிச்சை மையத்தில் பணியாற்றியபோதுதான் அதிக அளவிலான இறப்புகள் நடந்திருக்கின்றன. உரிய சிகிச்சை அளிக்கமுடியாமல் போனதால்கூட இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம். எனவே, இறப்புகளுக்கான காரணங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும். 

ரேச்சல் ஜெனிபர் மீதான நடவடிக்கை மட்டும் போதாது. அவர் சான்றிதழ்களைச் சரிபார்த்தவர்கள், பணியில் சேரக் காரணமானவர்கள்,

போலிச் சான்றிதழ் தயாரித்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டும்" என்கிறார் வழக்கறிஞர் பாலாஜி. 

உயிர் காக்கும் சிகிச்சையாகக் கருதப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் இவ்வளவு மெத்தனமாகப் பணியாளர் சேர்ப்பு நடந்தது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் உமா மகேஸ்வரியிடம் கேட்டோம்.

``அவசர சிகிச்சை மையத்தில் பணியாற்றும் அனைவரும் தற்காலிகப் பணியாளர்கள்தான். ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனமே இதற்கான பணியிடங்களையும் நிரப்புகின்றனர். பணியாளர்களின் சான்றிதழ்களைச் சரிபார்ப்பதும் அந்த நிர்வாகத்தினர்தான். இந்த விவகாரத்துக்குப் பிறகு ரேச்சல் ஜெனிபர் அளித்த சான்றிதழ் குறித்து நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். அந்தப் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்து காவல் நிலையத்திலும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடமிருந்து விளக்கம் வந்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"  என்றார்.

இதுபோன்ற தவறுகள் தொடராமல் இருக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவச் செயற்பாட்டாளர் டாக்டர் புகழேந்தியிடம் கேட்டோம்.

``வருமானம் கொட்டும் டாஸ்மாக்கை அரசே நடத்திக்கொண்டு, உயிர் காக்கும் மருத்துவ சேவைகளைத் தனியாரிடம் நிர்வகிக்க கொடுத்ததே இதற்கு அடிப்படைக் காரணம். தனியார் நிறுவனங்கள் பணியாளர்களைத் தெரிவு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், அரசியல்வாதிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பணிவாய்ப்பு கொடுப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கொடுத்த தகவலால்தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. போலிச் சான்றிதழ்களை வழங்கி இன்னும் எத்தனை பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களால் எத்தனை உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது அரசுக்கே வெளிச்சம். சான்றிதழ்களைச் சரிபார்க்கும் தொழிநுட்ப வசதிகள் அதிகரிக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் கண்டறியப்பட்டால் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையே ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளர் டாக்டர் புகழேந்தி.