Published:Updated:

``தம்பிக்கு வேலை தேடிப் போனேன்; அது எனக்கே கிடைச்சிடுச்சு" டெலிவுரி வுமன் ஜெயலட்சுமி

``தம்பிக்கு வேலை தேடிப் போனேன்; அது எனக்கே கிடைச்சிடுச்சு" டெலிவுரி வுமன் ஜெயலட்சுமி
``தம்பிக்கு வேலை தேடிப் போனேன்; அது எனக்கே கிடைச்சிடுச்சு" டெலிவுரி வுமன் ஜெயலட்சுமி

இணையத்தில் ஆர்டர் செய்வது அல்லது போன் செய்தால் வீட்டுக்கே வந்து உணவைத் தந்துசெல்லும் முறை மாநகரங்களில் மட்டுமல்லாமல், சிறு நகரங்களிலும் அதிகரித்துவருகிறது. போக்குவரத்து சிக்னல்களில் இருசக்கர வாகனங்களில் பணிபுரியும் நிறுவனத்தின் சீருடையோடு செல்லும் டெலிவரி மேன்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் பின்னே, அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏதேனும் ஒரு வீட்டுக்கான உணவு தயாராக இருக்கும். இந்தத் துறையில், அதிக எண்ணிக்கையில் வேலைக்கு ஆள்கள் தேவைப்படுகின்றனர். ஆண்கள் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த வேலையில், சில மாதங்களுக்கு முன் வேலையில் இணைந்தார் ஜெயலட்சுமி. அவர் சேர்ந்த நிறுவனம் ஸ்வக்கி ( Swiggy). எப்போதும் பரபரப்பாக இருசக்கர வாகனத்தில் பறக்கும் இந்த வேலையை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று அவரிடம் கேட்டேன். 

``என் தம்பிக்கு நல்ல வேலை ஏதாவது கிடைக்குமானு தேடிட்டு இருந்தேன். அப்படித்தான் அசோக் நகர்ல இருக்கும் ஸ்வகி கம்பெனிக்குப் போனேன். அந்த வேலைக்குப் போக, என் தம்பிக்கு விருப்பம் இல்லனு சொல்லிட்டார். நான் மறுபடியும் அங்கே போய், அந்த வேலையை எனக்குத் தருவீங்களானு கேட்டேன். அவங்களும் கொஞ்ச நாள் யோசித்துச் சொல்கிறோம்னு சொன்னார்கள். சில நாள் கழிச்சு, அழைப்பு வந்துச்சு. போனேன். வேலை செய்யப் பிடிச்சிருந்துச்சுன்னாலும் கூட, இரண்டு விஷயங்களைச் சொல்லியே வேலைக்குச் சேர்ந்தேன். ஒண்ணு, எனக்கு ஸ்மார்ட் போனை சரிவரப் பயன்படுத்தத் தெரியாது. அடுத்தது, சாயந்தரம் ஆறு மணி வரைதான் வேலை செய்வேன்." என்று சிரித்தபடியே சொல்கிறார் ஜெயலட்சுமி. இந்த வேலை முடிந்ததும், ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்‌ஷியனாக ( Lab technician) வேலை பார்க்கிறார்.

தனக்கு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்த தெரியாது என ஜெயலட்சுமி சொன்னாலும் மிக குறுகிய காலத்தில், ஆப்களைப் பற்றியும் கூகுள் மேப்பையும் நன்றாகப் பழகிகொண்டு, சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறார். தன் கணவர் உள்ளிட்ட யாரின் துணையுமின்றியும் தம் பிள்ளைகளைப் படிக்க வைத்துவருகிறார். அவரிடம் மேலும் பேசியபோது, 

``நான் வேலைக்குப் போறது, சாதனை செய்கிறதுக்காக இல்ல. எம் புள்ளைகளைப் படிக்க வைக்கணும். அதுங்க எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கொடுக்கணும். மூத்த பொண்ணு, என்ஜினீயரிங் படிக்கிறா. ரெண்டாவது பொண்ணுக்கு டாக்டராகணும்னு ஆசை. அதுக்காக நீட் பரீட்சைக்காகப் படிச்சிட்டு இருக்கா. எனக்கு இந்த வேலை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஏன்னா, எனக்கு டூ வீலர் ஓட்ட பிடிக்கும். காலையில, சரியா ஒன்பது மணிக்கு வந்துடுவேன். ஆறு மணி வரைக்கும் வர்ற ஆர்டர்களை டெலிவரி செய்வேன். நான் டெலிவரி செய்யற வீடுகள்ல, ஒரு ஆணை எதிர்பார்த்திருந்தவங்க என்னைப் பார்த்ததும் ஆச்சர்யப்படுவாங்க. அடுத்த நிமிஷமே நல்லாப் பேச ஆரம்பிச்சிருவாங்க. சிலர் மனசு விட்டு வாழ்த்துவாங்க. வேலை செய்றதுல ஆண் என்ன, பெண் என்ன? என்னைப் பார்த்துட்டு, இன்னும் சில பெண்களும் வேலைக்கு வந்திருக்காங்க." என்று பேசும் ஜெயலட்சுமியின் குரலில் அத்தனை தன்னம்பிக்கை. 

ஸ்வகி நிறுவனத்தில் முதல் பெண் ஊழியர் ஜெயலட்சுமிதான். இன்று நாடு முழுவதும் இந்நிறுவனத்தில் 6.-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெண்கள் விண்வெளிக்கே பயணிக்கும் நிலை வந்தபோதும், மக்களோடு பழகும் வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதில் பெரும் சவால் இருக்கத்தான் செய்கிறது. அதை தம் துணிச்சலால் வென்று காட்டியிருக்கிறார் ஜெயலட்சுமி. தொடரட்டும் வெற்றிப் பயணம்.