Published:Updated:

மாருதி சுஸூகியின் விலை உயர்வு... நிஸானின் புதிய எஸ்யூவி... மோட்டார் அப்டேட்!

7 வேரியன்ட்களில் கிடைக்கும் புதிய வேகன்-ஆரில் டிரைவர் காற்றுப்பை - ABS & EBD, பின்பக்க பார்க்கிங் சென்சார் ஆகியவை ஸ்டாண்டர்டு. ஆனால் அலாய் வீல், LED DRL மிஸ்ஸிங்!

மாருதி சுஸூகியின் விலை உயர்வு... நிஸானின் புதிய எஸ்யூவி... மோட்டார் அப்டேட்!
மாருதி சுஸூகியின் விலை உயர்வு... நிஸானின் புதிய எஸ்யூவி... மோட்டார் அப்டேட்!

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸூகி, தனது கார்களின் விலையை 10,000 ரூபாய் வரை (டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில்) அதிகரித்திருக்கிறது. ஜனவரி 10, 2019 முதலாக இந்த விலை உயர்வு அமலுக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. கடந்தாண்டு இறுதியிலேயே இதுகுறித்த செய்திகள் இணையத்தில் வலம் வந்தாலும், தமது கார்களின் விலையை எவ்வளவு ஏற்றப் போகிறோம் என்பதை மாருதி சுஸூகி அப்போது அறிவிக்கவில்லை. எதிர்பார்த்தபடியே சர்வதேச அளவில் இருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துவரும் மூலப்பொருள்களின் விலை ஆகியவற்றைக் காரணம் காட்டியே, இந்த விலை ஏற்றமும் அமைந்திருக்கிறது. மற்ற கார் தயாரிப்பாளர்களின் விலை உயர்வு இதோ!

*வரும் ஜனவரி 23-ம் தேதி களமிறங்கப்போகும் முற்றிலும் புதிய வேகன்-ஆர் காரின் புக்கிங்கை அதிகாரபூர்வமாகத் தொடங்கியிருக்கிறது மாருதி சுஸூகி. 11,000 ரூபாய் செலுத்தி, மாருதி சுஸூகியின் வலைதளம் அல்லது டீலர்ஷிப்பில் காரை புக் செய்யலாம். இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் கார்கள் தயாரிக்கப்படும் Heartect ப்ளாட்ஃபார்மில்தான் இதுவும் தயாரிக்கப்பட இருக்கிறது. முந்தைய மாடலைவிட 35 மிமீ அதிக வீல்பேஸ் மற்றும் 125 மிமீ அதிக அகலம் என அளவில் வளர்ந்திருக்கும் புதிய வேகன்-ஆர், எடையில் 50-65 கிலோ வரை எடை குறைந்திருக்கிறது. இதில் தற்போது ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தவிர, புதிதாக 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் சேர்த்திருக்கிறது மாருதி சுஸூகி. இரண்டுக்கும் 5 ஸ்பீடு மேனுவல்/ AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கிறது.  

*7 வேரியன்ட்களில் கிடைக்கும் புதிய வேகன்-ஆரில் டிரைவர் காற்றுப்பை - ABS & EBD, பின்பக்க பார்க்கிங் சென்சார் ஆகியவை ஸ்டாண்டர்டு. டாப் வேரியன்ட்களில் முன்பக்கப் பயணிக்கான காற்றுப்பை, எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கக்கூடிய வசதிகொண்ட இண்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் என டூயல் டோன் கேபினில் போதுமான வசதிகள் இருக்கின்றன. இதன் வீல்பேஸ், இக்னீஸ் காருக்குச் சமமாக இருப்பது ப்ளஸ். 4.5-5.5 லட்ச ரூபாய்க்கு (எக்ஸ்-ஷோரூம்) வெளிவரப்போகும் புதிய வேகன்-ஆர், மாருதி சுஸூகியின் Arena ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. க்விட் 1.0, சான்ட்ரோ, டியாகோ, டட்ஸன் கோ ஆகிய கார்களுடன் இது போட்டிபோடுகிறது. காரில் அலாய் வீல், LED DRL மிஸ்ஸிங்.

*தனது எஸ்யூவியான கிக்ஸ் காரை, ஜனவரி 22-ம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது நிஸான். இதன் புக்கிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தொடங்கிவிட்ட நிலையில், 25,000 ரூபாய் செலுத்தி, இந்த நிறுவனத்தின் வலைதளம் அல்லது டீலர்களில் காரை புக் செய்யலாம். டெரானோவில் தான் பெற முடியாத வெற்றியை, அதிக வசதிகளுடன் ஸ்டைலாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் கிக்ஸ் வாயிலாகப் பெறும் முனைப்பில் உள்ளது நிஸான். ரெனோவின் மேம்படுத்தப்பட்ட MO ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கிக்ஸ், சர்வதேச மாடலைவிடப் பெரிதாக இருக்கிறது. 4,384 மிமீ நீளம் - 1,813 மிமீ அகலம் - 1,656 மிமீ உயரம் - 2,673 மிமீ வீல்பேஸ் ஆகியவை இதை உறுதிபடுத்துகின்றன. கேப்ச்சரில் இருக்கும் அதே 4 சிலிண்டர் இன்ஜின் - மேனுவல் கியர்பாக்ஸ் அமைப்பையே, இந்த எஸ்யூவியிலும் பொருத்தியிருக்கிறது நிஸான். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், 110 bhp பவர் மற்றும் 24 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 

*இதுவே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 106 bhp பவரையும் 14.2 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் பின்னாளில் வெளிவருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிகிறது. Floating பாணியிலான 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டி, 360 டிகிரி கேமரா, லெதர் வேலைப்பாடுகளுடன் கூடிய டேஷ்போர்டு, தானாக இயங்கும் LED ஹெட்லைட்ஸ் - கிளைமேட் கன்ட்ரோல் ஏசி - வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், 17 இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள் என கேபினில் அதிக வசதிகள் இருப்பது ப்ளஸ். மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் 'தல'யாக இருக்கும் க்ரெட்டா தவிர  எஸ்-க்ராஸ், கேப்ச்சர், BR-V, டஸ்ட்டர், புதிதாக வரப்போகும் XUV 3OO ஆகிய கார்களுடன் போட்டி போட உள்ளது கிக்ஸ். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை, 9-15 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் எனத் தெரிகிறது.