Published:Updated:

மேரிகோல்டு முதல் ஃபிளாட்ஸ் வரை... 2019-ன் ட்ரெண்ட்ஸ்!

எலுமிச்சை, அன்னாசி, கார்ன், ஆம்பர், மஸ்டர்டு போன்ற பல்வேறு ஷேடுகளை கொண்டிருக்கும் மஞ்சள் நிறத்தில், இந்த ஆண்டின் ட்ரெண்டாகப் போவது `மேரிகோல்டு' ஷேடுதான்.

மேரிகோல்டு முதல் ஃபிளாட்ஸ் வரை...  2019-ன் ட்ரெண்ட்ஸ்!
மேரிகோல்டு முதல் ஃபிளாட்ஸ் வரை... 2019-ன் ட்ரெண்ட்ஸ்!

புதுமைகளை விரும்பாத மனிதர்களே இல்லை. உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை நிர்ணயிப்பது அதன் தனித்தன்மைதான். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடை ஆபரண உலகை ஆக்கிரமிக்கப்போகும் ட்ரெண்ட்ஸ் என்னவென்று பார்ப்போம்.

மேரிகோல்டு:

லட்சக்கணக்கான வண்ணங்களில், இந்த ஆண்டு அனைத்துக் கடைகளையும் ஆக்கிரமிக்கப்போகிற நிறம் `மஞ்சள்'. எலுமிச்சை, அன்னாசி, கார்ன், ஆம்பர், மஸ்டர்டு போன்ற பல்வேறு ஷேடுகளை கொண்டிருக்கும் மஞ்சள் நிறத்தில், இந்த ஆண்டின் ட்ரெண்டாகப் போவது `மேரிகோல்டு' ஷேடுதான்.

இது டார்க் முதல் வெளிர் நிற ஸ்கின் டோன்கள் வரை அனைவர்க்கும் பிரைட்டான தோற்றத்தைத் தரும். இதோடு `பளிச்'செனக் கண்களைக் கவரும் `நியான்' நிறங்களும் இந்த ஆண்டின் ட்ரெண்டி நிறங்களில் ஒன்று.

Tie - Dye பேட்டர்ன்:

கடந்த சில ஆண்டுகளில் கலம்காரி, பிளாக் பிரின்ட் போன்ற பேட்டர்ன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த வரிசையில் இந்த ஆண்டு ட்ரெண்ட் செட் செய்யப்போகும் பேட்டர்ன் Tie - Dye பேட்டர்ன்தான். கி.பி 500-களில் இருந்தே இந்த பேட்டர்ன் நடைமுறையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீண்ட வெற்றுத் துணியில் ஆங்காங்கே நூல் சரங்களைக் கட்டிவிட்டு, பிறகு சாயத்தில் முக்கி எடுத்துப் பதப்படுத்தும் நுட்பம், Tie - Dye. ராஜஸ்தானின் `பாந்தனி', `இக்கத்' போன்றவையும் Tie - Dye பேட்டர்ன்களில் உருவானவைதான்.

பஃப் ஸ்லீவ்:

முழு நீளக்கை, 3/4 நீளக்கை, ஸ்லீவ்லெஸ் போன்றவை சென்ற ஆண்டு ட்ரெண்டானது. புடவையின் பிளவுஸ்களில்கூட கழுத்து டிசைனைவிட ஸ்லீவ்களின் முக்கியத்துவம் அதிகமானது. `ப', `V', `U' என எந்த வகை கழுத்து பேட்டர்னாக இருந்தாலும், இந்த ஆண்டு ட்ரெண்டாகப் போவது `பஃப்' ஸ்லீவ்கள்தான். வெஸ்டர்ன் உடைகள் முதல் நம்ம ஊரு பாவாடை தாவணி வரை அனைத்திலும் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

எல்லாமே மேட்சிங்தான்:

இதுநாள் வரை டார்க் நிற ஆடைகளுக்கு, வெளிர் நிற இணை ஆபரணங்கள் அணிவதும் இதற்கு நேர்மாறாக அணிவதும்தான் ஃபேஷன். ஆனால், இந்த ஆண்டு, `மேட்சிங்' ஆண்டாக இருக்கப்போகிறது. அதாவது, ஒரே டிசைன்களிலான ஆடை மற்றும் ஆபரணங்கள் அதிகம் மார்க்கெட்டில் கிடைக்கும். ஒரே டிசைனிலான டாப், பாட்டம் மற்றும் ஹேண்ட்பேக் என நமக்குக் குழப்பமில்லாத ஷாப்பிங் செய்ய இந்த ஆண்டு உதவும்.

ஃபிரிஞ்:

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு `ஃபிரிஞ் ஃபேஷன்' இந்த ஆண்டு மீண்டும் களமிறங்கியிருக்கிறது. ஆடைகளின் நுனிகளை `ட்ரிம்' செய்தபடி அலங்காரம் செய்வதுதான் `ஃபிரிஞ்'. `ரெட்ரோ' காலகட்டங்களில் இந்த `ஃபிரிஞ்' இல்லாத ஆடை ஆபரணங்களோ, காலணி மற்றும் ஹேண்ட்பேக்குகளையோ பார்த்திருக்கவே முடியாது. வெஸ்டர்ன் ஆடைகளில் அதிகத் தாக்கம்கொண்ட இந்த பேட்டர்ன், இந்த ஆண்டு, நம் பாரம்பர்ய உடைகளிலும் செயல்படுத்தப்படலாம்.

ஃபிளாட்ஸ்:

இந்த ஆண்டு, அதிகளவு `ஹீல்ஸ்' கொண்ட காலணிகளின் அழிவுக்காலம் என்றே சொல்லலாம். ஏனெனில், `ரன்வேகளில்' ஆடைகளோடு எப்போதும் முக்கிய அங்கமாய் இருப்பது `ஹீல்ஸ்'தான். இந்த வழக்கத்தையே மாற்றியமைத்திருக்கிறது சென்ற ஆண்டின் பல ஃபேஷன் ஷோக்கள். இப்பொழுதெல்லாம் ஹீல்ஸைவிட மக்களின் பெரும்பாலான சாய்ஸாக இருப்பது 'ஃபிளாட்ஸ்'தான். அதிலும், பலவிதமான அலங்காரத்துடன், ஃபேன்சியாகக் கிடைப்பதால் அதிகப்படியான மக்கள் இதற்கு மாறியிருக்கின்றனர். உடல்நலமும் இதில் அடங்கும்.

இவற்றோடு பாம்புத்தோல் ப்ரின்ட்ஸ், பேட்ச் வேலைப்பாடு, இறுக்கமான ப்ளீட்ஸ் போன்றவையும் இந்த ஆண்டு ட்ரெண்டாகவுள்ளது.