Published:Updated:

இது நூல் அல்ல... புரட்சி!

வீரயுக நாயகன் வேள்பாரி - புத்தக வெளியீட்டு விழா

பிரீமியம் ஸ்டோரி
இது நூல் அல்ல... புரட்சி!

சாகித்ய அகாடமி  விருதுபெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் ஓவியங்கள் மணியம் செல்வன்

னந்த விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் குடும்பங்களில் ஒருவராகவே மாறிவிட்டவர் ‘வீரயுக நாயகன் வேள்பாரி.’ அந்தத் தொடர் புத்தக வடிவம்பெற்று, சென்ற வாரம் வெளியிடப்பட்டது. தமிழகமெங்குமிருந்து திரளாக வந்து கலந்துகொண்டு சிறப்பித்துத் தங்களின் குடும்ப விழாவாக மாற்றினார்கள் நம் பாசக்கார வாசகர்கள்.  

இது நூல் அல்ல... புரட்சி!

சென்னை, குமாரராஜா முத்தையா ஆடிட்டோரியத்தில் எங்கு பார்த்தாலும் ‘பாரி பாரி’ என வாசகர்கள் மந்திரம்போல உச்சரித்துக்கொண்டிருந்தனர். வெற்றிலை பாக்கும் வாழைப்பழமுமாக வித்தியாசமான  வரவேற்பு, ஆளுயர பாரி ஓவியத்துடன் செல்ஃபி எடுக்கும் ஏற்பாடு, கண்காட்சியாக வைக்கப்பட்ட ம.செ-வின் ஓவியங்கள் என அரங்கிற்கு வெளியிலேயே தொடங்கிவிட்டது ‘பறம்புத் திருவிழா.’

தமிழகத்தின் அரசியல், சூழலியல், இலக்கியம் எனத் துறைசார்ந்த சான்றோர் பெருமக்கள் மேடையில் நிறைந்திருக்க, கவிஞர் வெய்யில் நிகழ்வைத் தொகுத்து வழங்க, ஆனந்தவிகடனின் இணை ஆசிரியர் சுகுணா திவாகரின் வரவேற்புரையோடு ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நூல் வெளியீட்டு விழா தொடங்கியது.  வாசகர்கள் கலந்துகொண்ட உரையாடல், ‘பனையன் மகனே’ பாடலுக்கு மெட்டமைத்துப் பாடிய வாசகி என மேடையில் வாசகர்களுக்கும் வேலையிருந்தது.

இது நூல் அல்ல... புரட்சி!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட முதல் தொகுதியைத் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனும் இரண்டாம் தொகுதியை சூழலியலாளர் கோ.சுந்தர்ராஜனும் பெற்றுக்கொண்டனர்.

``கலைஞர் மட்டும் இருந்திருந்தால் இப்படியொரு படைப்பைக் கொடுத்ததுக்காக வெங்கடேசனை உச்சிமோந்து பாராட்டியிருப்பார். இது நூல் அல்ல, புரட்சி. இப்படிப்பட்ட ஒரு படைப்பை வெளியிடுவதில் பெருமைப்படு கிறேன்” என உணர்ச்சி பொங்கப் பேசினார் ஸ்டாலின்.

“இரயில் பயணம் மாதிரி என்னை ஒவ்வொரு வாரமும் மூழ்க வைத்தது வேள்பாரி. படிக்கும் போது ஏற்பட்ட என் உள் உணர்வுகள் அப்படியே வந்து ஓவியமாக அமர்ந்தது. வெங்கடேசன் எழுத்துக்கு இணையாக ஓவியங்களை வரைய முயற்சி செய்தி்ருக்கிறேன்” என ம.செ பேசி முடிக்கையில் தங்கள் கனவு நாயகர்களுக்கு உயிர் கொடுத்த தூரிகைச் செல்வனுக்குக் கரவொலியால் அன்பையும் நன்றியையும் தெரிவிக்கத் தவறவில்லை அரங்கம். 

இது நூல் அல்ல... புரட்சி!

விகடனின் நிர்வாக இயக்குநரும், ஆனந்த விகடனின் ஆசிரியருமான பா.சீனிவாசன் பேசும்போது, ``அறம் சார்ந்த வாழ்வுக்கு எப்பொழுதும் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது என வேள்பாரி மீண்டும் நிரூபித்திருக்கிறான். விரைவில் ஒலிச்சித்திரமாக, நாடகமாக, வெப் சீரிஸாக, திரைப்படமாக வேள்பாரி பல அவதாரம் எடுக்கவிருக்கிறான்” எனச் சொன்னதும் வாசகர்கள் உற்சாகத்தில் விசிலடித்து அமர்க்களப்படுத்தினர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், “கற்ற மரபிற்கும், கற்காத மரபிற்கும் இடையிலான உரையாடல் இந்த நாவல். போரைப் பற்றிய நாவல். ஆனால், போருக்கு எதிரான நாவல். மிக முக்கியமான அரசியலை வேள்பாரி பேசுகிறது” என்றார். திரைப்பட இயக்குநர்கள் சசிகுமார் மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அடுத்து வந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி  ஆர்.பாலகிருஷ்ணன் “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பட்டியலைப் பார்க்கையில் 3446 பேர் பாரி அல்லது பாரியோடு தொடர்புடைய பெயரை வைத்திருக்கிறார்கள். பாரி - 2109 பேர், பாரி வள்ளல் - 827, பாரி வேந்தன் - 87, பாரி மன்னன் -66, வேள்பாரி என்று தமிழ்நாட்டில் 17 பேர் இருக்கிறார்கள், பாரிவேள் என்கிற பெயரில் 16 பேர் இருக்கிறார்கள், தமிழ்ப்பாரி என இருவர் இருக்கிறார்கள், செந்தமிழ்ப்பாரி என்று ஏழு பேர் இருக்கிறார்கள்’’ என அவர் பேசி முடிக்க ஆச்சர்யத்தில் உறைந்தனர் பாரியின் ரசிகர்கள். 

இது நூல் அல்ல... புரட்சி!

அதன்பின் சி.பி.எம்-மின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். பழனி பாலாஜி மருத்துவமனையின் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் செந்தாமரைச்செல்வி வேள்பாரி மற்றும் ஆனந்த விகடனுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

இறுதியாக ஏற்புரை வழங்க வந்தார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். ``வேள்பாரி என்னுடைய நாவல் அல்ல. தமிழ்ச்சமூகத்தின் ஈராயிரம் ஆண்டு நினைவின் படைப்பு அது. 2281 சங்கக் கவிதைகளிலிருந்து எடுத்துக் கோத்த முத்துகள் வேள்பாரி. பாரியைப் பற்றி, தமிழ் அறம், தமிழ்ப் பரப்பு, தமிழ் மாண்புகளைப் பற்றித் தொகுத்து வைத்த வேலையைத்தான் நான் செய்திருக்கிறேன். பாரியைப் பற்றிப் பெருங்காவியமே எழுதப்பட்டிருக்க வேண்டும். பாரியை வென்ற மூவேந்தர்கள் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தனர். பாரியின் நினைவு ஆட்சியாளர்களின் தொண்டையில் சிக்கிய முள். அவர்கள் மறைக்க நினைத்தாலும் குத்திக் குத்தி வெளியே வந்துகொண்டுதான் இருக்கும். எனவேதான், பாரியின் நினைவு அழிக்க முடியாத ஒன்றாக இருந்துகொண்டிருக்கிறது” என அவர் பேசி முடிக்க, கைத்தட்டல்கள் நிற்க சில நிமிடங்கள் ஆனது.

இனி காலம் முழுவதும் பறம்பின் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது விழா.

- சக்தி தமிழ்ச்செல்வன்


படங்கள்: விகடன் டீம்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு