Published:Updated:

``தும்பைப் பூ ஞாபகமிருக்கிறதா?!” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்

மனிதக் குலத்துக்கு மகத்தான மருத்துவ சேவை ஆற்றும் சின்னஞ்சிறு செடி தும்பை. குறிப்பாகச் சளி, சைனஸ் பிரச்னைகளுக்கு அற்புதமான தீர்வு தும்பையில் இருக்கிறது.

``தும்பைப் பூ ஞாபகமிருக்கிறதா?!” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்
``தும்பைப் பூ ஞாபகமிருக்கிறதா?!” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்

தும்பைச் செடியைப் பார்க்கும்போதெல்லாம் மனம் குழந்தை ஆகிவிடுகிறது. பால்யத்தில் பட்டாம்பூச்சி பிடிப்பதற்காகத் தும்பைக் காடுகளில் தவம் கிடந்த நினைவுகள் நிழலாடுகின்றன. பட்டாம்பூச்சிக்காகப் பொறுமையாகக் காத்திருக்கும் நேரத்தில் தும்பைப் பூவைப் பறித்து தேனை உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்போம். அந்தத் தேனின் சுவையை விடச் சிறந்த இனிப்புச் சுவையை இதுவரை என் நாக்கு அறிந்ததில்லை. பட்டாம்பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது தவறான செயல் என்பதையும் அப்போது அறிந்திருக்கவில்லை.

எங்கள் கிராமத்தில் ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனத்தை நம்பியே விவசாயம். ஆடிப்பட்டத்தில் கம்பு, சோளம் விதைப்பார்கள். ஊடுபயிராகத் தட்டை, மொச்சை, துவரை போன்ற பயறு வகை பயிர்களையும் விதைப்பார்கள். கார்த்திகை முடிந்து மார்கழி தொடங்கும் காலங்களில் மொச்சை அறுவடைக்குத் தயாராகி விடும். அப்போது சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து காட்டுக்காரர்களுக்குத் தெரியாமல் மொச்சைக் காயைப் பறித்து வந்து வேக வைத்துத் தின்போம். ஒரு மண் பானையில் தண்ணீர் ஊற்றி மொச்சையைக் கொட்டி, அதில் ஒன்றிரண்டு தும்பைச் செடிகள் வைத்து மூடி, அடுப்பில் வைத்து விடுவோம். சற்று நேரத்தில் தும்பை வாசத்துடன் ஆவி வெளியேறும். இதுதான் மொச்சை வெந்துவிட்டதற்கான அடையாளம். உடனே பானையை இறக்கி மொச்சையைப் பங்குப் போட்டு உரித்து உரித்துத் தின்போம். காலப்போக்கில் கிணறுகளில் தண்ணீர் வற்றி, விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. இந்த நடைமுறையும் எங்கள் தலைமுறையோடு வழக்கொழிந்துபோனது. ஆனால் தும்பைச் செடிகள் முன்னை விட அதிக அளவில் முளைத்துக் கிடக்கின்றன. இந்தச் செடிகளைப் பார்க்கும்போதெல்லாம் மொச்சை வாசனை நினைவில் மணக்கிறது.

ஊருக்கு வெளியே  நடை போனபோது, ஓரிடத்தில் ஏராளமான தும்பைச் செடிகளைப் பார்த்தேன். மனம் குதூகலித்தது. தும்பைப் பூவை எடுத்து உறிஞ்சி தேன் குடித்தேன். அந்தச் சுவை பால்யத்தின் பள்ளத்தாக்கில் என்னைத் தள்ளியது. என்னைத் சுற்றி ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன. வார்த்தையில் வர்ணிக்க முடியாத அற்புத அனுபவம். நினைவின் அடுக்குகளில் ஈரம் கசியும் நினைவுகள். அந்த நினைவுகளிலிருந்து மீண்டு வரவே நீண்ட நேரம் ஆனது. தும்பைப் பற்றிய செய்திகளை மனம் அசை போட்டது.

மனிதக் குலத்துக்கு மகத்தான மருத்துவ சேவை ஆற்றும் சின்னஞ்சிறு செடி தும்பை. குறிப்பாகச் சளி, சைனஸ் பிரச்னைகளுக்கு அற்புதமான தீர்வு தும்பையில் இருக்கிறது. இயற்கையின் அற்புதத்தைப் பாருங்கள். மழைக்காலம் முடிந்த பிறகு பனிக்காலம் வருகிறது. இந்தக் காலங்களில் மனிதர்களுக்குச் சளி பிடிப்பது இயல்பு. இந்தச் சளியை இலவசமாகப் போக்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது தும்பை. எத்தனையோ மலர்களில் தேன் இருந்தாலும் பட்டாம்பூச்சிக்குப் பிடித்தது தும்பைத் தேன்தான். காரணம் இதன் மயக்கும் சுவை. தேனை உண்டு மயக்கத்தில் பறக்கக் கூட தோன்றாமல் படுத்துக் கிடக்கும் பட்டாம்பூச்சிகள். மற்ற நேரத்தில் பட்டாம்பூச்சிகளை பிடிப்பதைவிடத் தும்பையில் தேனுண்ட பட்டாம்பூச்சிகளைப் சுலபமாகப் பிடித்து விடலாம். அதனால்தான் சிறுவர் கூட்டம் தும்பை வனங்களில் துள்ளித் திரிகின்றன. ஆனால், தற்காலக் குழந்தைகள் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து இம்சிப்பதில்லை என்பது நல்ல விஷயம்.

தும்பையில் உள்ள மருத்துவக் குணம் ஆச்சர்யப்படத்தக்கது. தலையில் நீர் கோத்து கஷ்டப்படுபவர்கள் தும்பை இலைச் சாற்றை மூன்று சொட்டு மூக்கில் விட்டு, உள்ளுக்குள் உறிஞ்சித் தும்மினால் அடுத்த 1 மணி நேரத்தில் கபாலத்தில் இருக்கும் தேவையில்லாத நீர்க்கூட சர சரவென வெளியேறும். ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் 20 தும்பைப் பூக்களைப் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, அந்தப் பாலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் தொண்டையில் உள்ள சளி வெளியேறும் என்கிறது சித்த மருத்துவம். இதை இன்றைக்கும் கிராமங்களில் செயல்படுத்துகிறார்கள். 

LEUCAS ASPERA என்ற தாவரவியல் பெயர் கொண்ட தும்பை ஆயுர்வேதத்தில் `துரோண புஸ்பி' என அழைக்கப்படுகிறது. இது விஷ முறிவுக்கான முக்கிய மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. 

சிறுவயதில் ஏற்படும் சிரங்கு நமைச்சல் கொப்புளங்களுக்குத் தும்பை இலையை அரைத்து நாலைந்து நாள்களுக்கு மேற்பூச்சாகப் பூசி விடுவார்கள். சிரங்கு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். சாதாரண விஷக் கடிக்கு இதன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து நசுக்கி உள்ளுக்குள் குடிக்கக் கொடுத்து நிறைய தண்ணீர் குடிக்கக் கொடுப்பார்கள். அத்துடன் இரண்டு மூன்று சொட்டு மூக்கில் விடுவார்கள். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து விஷ முறிவு ஏற்படும். தும்பைச் செடியைப் பூக்களுடன் பறித்து வந்து தண்ணீரில் இட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். இந்தத் தண்ணீரில் வேது பிடித்தால் ஒற்றைத் தலைவலி ஓடிவிடும். தலா பத்து சொட்டு தும்பைப் பூ சாறு, தேன் இரண்டையும் கலந்து குடித்தால் நா வறட்சி, அதிக தாகம், அசதி ஆகியவை நீங்கி விடும் என்கிறது சித்த மருத்துவம். 

இத்தனை அற்புதங்களை சின்னஞ்சிறு இலைகளுக்குள்ளும் வெண்மை மாறாப் பூக்களுக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறது தும்பை. சளி, தலைவலி போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு இயற்கையின் வைத்தியத்தையும் கைக்கொள்ளுங்கள். உடலும் மனமும் நலமாகும்.