Published:Updated:

'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்!' - மேகாலயா சுரங்கம் உணர்த்தும் உண்மை

'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்!' - மேகாலயா சுரங்கம் உணர்த்தும் உண்மை

ஒரு மீட்புப்பணியில் ஈடுபடும் இந்திய அரசு இயந்திரத்தின் மொத்தத் திறனே இவ்வளவுதானா? இவ்வளவுதான் என்றால் நம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் பெருமைகொள்ள இனி என்னவிருக்கிறது?

'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்!' - மேகாலயா சுரங்கம் உணர்த்தும் உண்மை

ஒரு மீட்புப்பணியில் ஈடுபடும் இந்திய அரசு இயந்திரத்தின் மொத்தத் திறனே இவ்வளவுதானா? இவ்வளவுதான் என்றால் நம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் பெருமைகொள்ள இனி என்னவிருக்கிறது?

Published:Updated:
'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்!' - மேகாலயா சுரங்கம் உணர்த்தும் உண்மை

ர் எதிர்பாராத விபத்து, ஓர் அரசை உலுக்க வேண்டும், துரிதமாகச் செயல்பட்டு அதில் சிக்கியவர்களை மீட்க வேண்டும். அது குறித்து கவலை கொள்ள வேண்டும். நாடும் நாட்டு மக்களும் பதற வேண்டும். அப்படி ஒரு விபத்து தாய்லாந்து நாட்டில் கடந்த வருடம் நிகழ்ந்தது. கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி கால்பந்தாட்ட பயிற்றுநர் அவருடன் சென்ற சுமார் பன்னிரண்டு மாணவர்கள் தாய்லாந்தில் இருக்கிற தம் லுங் நாங் என்ற குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள். தாய்லாந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்பு குழுவினர் அவர்களை உயிருடன் மீட்டனர். குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரையும் உயிருடன் வெற்றிகரமாக மீட்டு வந்ததை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடினர். ஆனால் அப்படி எதுவுமே நிகழாமல் உலகத்தில் இருந்து தனித்து விடப்பட்ட ஒரு சுரங்க விபத்துதான் மேகாலயா சுரங்க விபத்து.

மேகாலயாவில் ஜைண்டியா மாவட்டத்தில் லைடெயின் என்ற ஆறு ஓடுகிறது. ஆற்றை ஒட்டிய பகுதிகளில் அனுமதியில்லாத பல சுரங்கங்கள் செயல்பட்டு வந்தன. 2014-ம் ஆண்டே மேகாலயா அரசு சுரங்கங்கள் தொடர்ந்து இயங்குவதற்குத் தடை விதித்திருந்தது. ஆனாலும் தடையை மீறி சட்ட விரோதமாகப் பல சுரங்கங்கள் செயல்பட்டு வந்தன. அப்படி ஜைன்டியா மாவட்டத்தின் சான் என்ற கிராமத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி 'எலிப்பொறி' என்கிற பெயரில் செயல்படும் சுரங்கத்தில் 20 பேர் பணியாற்றி வந்தனர். இந்தச் சுரங்கம் 370 அடி ஆழம் கொண்டது. மழை காரணமாக லைடெயின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர் 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் 70 அடி வரையிலும் புகுந்தது. இதனால் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 20 தொழிலாளிகள் சுரங்கத்திற்கு உள்ளேயே மாட்டிக்கொண்டனர். அதில் 5 பேர் துரிதமாகச் செயல்பட்டு வெளியே வந்துவிட்டனர். மீதி 15 பேரும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.  

டிசம்பர் 13-ம் தேதியே தேசிய பேரிடர் மீட்புக்குழு சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. சுரங்கத்தில் தேங்கி இருந்த சுமார் 12,00,000 லிட்டர் நீரை ராட்சத பம்புகளை வைத்து வெளியேற்றினர். ஆனால்  மழை தொடர்ந்து பெய்ததால் சுரங்கத்திற்கு வருகிற தண்ணீரின் அளவு அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆழ்கடல் நீச்சல் வீரர்களான "டைவர்ஸ்" வீரர்களைப் பயன்படுத்தி சிக்கியிருப்பவர்களைக் கண்டுபிடிக்கும் பணியை மீட்பு குழுவினர் தொடங்கினர். ஆனால் அவர்களால் சுரங்கத்தின் 40 அடி ஆழம் வரையே செல்ல முடிந்தது. சோனார் கருவிகள் மற்றும் ஆழ்துளை கேமராக்கள் கொண்டு முயற்சி செய்தும் சுரங்கத் தொழிலாளர்கள் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் ஒட்டு மொத்த குழுவும் தோல்வியைச் சந்தித்தது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. 10வது நாளாகச் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதுவரை சுரங்க பணியாளர்கள் சிலரது ஹெல்மெட்டுகள் மட்டுமே மீட்க முடிந்தது. இரண்டு ராட்சத பைப்புகள் மூலம் சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வந்தன. சுரங்கத்தின் 70 அடியில் இருந்த நீரை வெளியேற்ற முடியாமல் ஒட்டு மொத்த மீட்புக் குழுவும் செய்வதறியாது நின்றனர்.

இதற்கிடையில் டிசம்பர் 23-ம் தேதி சுரங்கத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப் படி இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஜைண்டியா மாவட்டத்தின் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார். இடையில் உயர் அழுத்த மோட்டார் இல்லாத காரணத்தால் இந்த மீட்புப் பணி 6 நாட்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. விசாகப்பட்டினத்திலிருந்து 15 கடற்படை உள் நீச்சல் வீரர்களும் மேகாலயா விரைந்தனர். ஒடிசாவிலிருந்து சிறந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் எனப் பலரும் இந்த மீட்புப் பணியில் இணைந்தனர். ஜனவரி 4-ம் தேதி சட்டவிரோதமாக இயங்கிய சுரங்கத்தைக் கவனிக்காமல் இருந்ததால் மேகாலயா அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அப்போது வரை கூட ஒரு பணியாளரையும் மீட்க முடியவில்லை. ஜனவரி 5-ம் தேதி சுரங்க விபத்து குறித்து தொடரப்பட்ட வழக்கில் ''சட்டவிரோத சுரங்கம் பற்றிய, 'புளூபிரின்ட்' அரசிடம் இல்லை; எனவே, மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது; தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 72 பேர், மீட்புப் பணியில், முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்,'' என, மேகாலயா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.  

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம், “சுரங்கத்தில் சிக்கியோரை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை, 7-ம் தேதி சமர்ப்பிக்கும்படி, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றம் தெரிவித்த கருத்தில், "மீட்புப் பணிகள் திருப்தியளிக்கும்படியாக இல்லை. சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்கள் இறந்துவிட்டார்களோ, இல்லை உயிரோடு இருக்கிறார்களோ அவர்களை மீட்டு வெளியே கொண்டு வருவதே அரசின் கடமை. சுரங்க பணியாளர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருக்கிறது” எனக் கூறியது. ஜனவரி 13-ம் தேதி "இன்று வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒரு தொழிலாளிகூட இன்னும் மீட்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் வரும் நாள்களில் இந்த மீட்புப் பணிகளை முடித்துக்கொள்ளும் நிலை உருவாகலாம்" என மேகாலயா அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் விபத்து நிகழ்ந்து 32 நாட்கள் கழித்து நேற்று ஜனவரி 17-ம் தேதி நிலக்கரி சுரங்கத்தில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் Underwater Remotely Operated Vehicle எனப்படும் சிறிய ரோபோ மோட்டார் வாகனம் மூலம் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "210 அடி ஆழம் கொண்ட எலிப்பொறி சுரங்கத்தினுள் சுமார் 60 அடி ஆழத்தில் ஒரு தொழிலாளியின் சடலத்தைக் கடற்படை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மற்ற தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியாத நிலையில், மீட்புப் பணி இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய பேரை 18 நாட்கள் கழித்து கண்டுபிடிக்க இந்திய அரசு தாய்லாந்து நாட்டிற்குப் பெரிதும்  உதவியது. இந்த நடவடிக்கையில் இந்தியாவில் செயல்படும் மிகப்பெரிய நிறுவனம் தன்னுடைய சக்தி வாய்ந்த மோட்டார்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. சம்பவம் நடந்து 33 நாட்களைக் கடந்தும் இந்தச் சம்பவம் பெரிதுபடுத்தப்படாமல் இருப்பதும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருப்பதும் சிக்கி கொண்ட 15 குடும்பங்களின் எதிர்காலத்தைக் கேள்வி குறியாக்கி இருக்கிறது. உண்மையில் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு வீரர்களுமே பாராட்டுக்குரியவர்களே; அவர்களின் செயல்பாடுகளில் நாம் எவ்விதக் குறையும் சொல்லமுடியாது. ஆனால், இத்தனை நாள்களாகியும் தொழிலாளர்களை மீட்கத் தொழில்நுட்ப ரீதியாகத் திராணியற்றுக் கிடக்கும் இந்திய அரசைத்தான் இங்கே நாம் கேள்வி கேட்கவேண்டும். ஒரு மீட்புப்பணியில் ஈடுபடும் இந்திய அரசு இயந்திரத்தின் மொத்தத் திறனே இவ்வளவுதானா? இவ்வளவுதான் என்றால் நம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் பெருமைகொள்ள இனி என்னவிருக்கிறது?

சுரங்கத்தில் சிக்கியிருப்பது ஊழியர்கள் அல்ல; உயிர்கள்!