Published:Updated:

``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவ்ளோ வேணும்னாலும் எடுக்கலாம்'' - `ஐயமிட்டு உண்' ஃபாத்திமா

"மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் என்னை நேரில் அழைத்து வாழ்த்தினார். அவரோட பிஸியான டைம்ல என்னை அழைத்துப் பேசினதெல்லாம் பெரிய விஷயம். இதுபோன்ற ஊக்கம்தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்குது."

``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவ்ளோ வேணும்னாலும் எடுக்கலாம்'' - `ஐயமிட்டு உண்' ஃபாத்திமா
``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவ்ளோ வேணும்னாலும் எடுக்கலாம்'' - `ஐயமிட்டு உண்' ஃபாத்திமா

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு 
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்."

இவை கவிஞர் கண்ணதாசனின் பொன் வரிகள். சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஐசா ஃபாத்திமா ஜாஸ்மின். பல் சீரமைப்பு மருத்துவரான இவர் கண்ணதாசனின் இவ்வரிகளுக்கு உயிரோட்டம் பாய்ச்சுகிறார். ஆம், விகடன் வாசகர்களுக்கு ஃபாத்திமா பற்றிய அறிமுகம் தேவையில்லை. கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் சென்னை பெசன்ட் நகரிலுள்ள ஒரு பொது இடத்தில் ஏழைகளுக்கு உதவும் வகையில் `ஐயமிட்டு உண்' என்ற பெயரில் ஃப்ரிட்ஜ் ஒன்றை வைத்து ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். ஓராண்டு முடிந்த நிலையில் தற்போது பெங்களுர் உட்பட ஐந்து இடங்களில் இந்த  ஃப்ரிட்ஜ் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி அசத்தி இருக்கிறார். 

``உலகம் முழுவதிலும் போதுமான ஊட்டச்சத்துகளோடு கூடிய உணவுகள் கிடைக்காமல் 80 கோடி மக்கள் பசியோடு வாழுறாங்கன்னு ஐ.நா சொல்லுது. ஆனா, நாம ஒவ்வொரு நாளும் சகட்டு மேனிக்கு உணவுகளை வீணாக்கிட்டு இருக்கிறோம். சமைப்பதற்கு முன்பாக ஆரோக்கியமானதா இருக்கணும்னு பார்த்துப் பார்த்து சமைக்கிற நாம வயிறு நிறையுற அளவு சாப்பிட்டுட்டு மீதமானதை அப்படியே குப்பையில கொட்டிடுறோம். ஆனா, கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. ஒருவேளை கூட  உணவு கிடைக்காம எத்தனை பேர் அவதிப்படுறாங்கன்னு. நாம போதும்னு தூக்கி எறியுறதை இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவலாமேன்னு முடிவு பண்ணிதான் நான் இந்த கான்செப்ட்டைக் கொண்டு வந்தேன்.

ஆரம்பத்துல நிறைய சிக்கல்கள் இருந்தது. ஆனா, பெசன்ட் நகர்ல ஓப்பன் பண்ணின பிறகு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு. அப்போ நான் ஒரு முடிவு பண்ணினேன். ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு ஒரு முறையும் ஒரு புதிய பகுதியில இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தணும்னு. ஆனா, இந்தத் திட்டத்துக்குக் கிடைத்த வரவேற்பு போன மார்ச் மாதத்துக்குள்ளேயே ஐந்து இடங்கள்ல வெற்றிகரமாச் செயல்பட ஆரம்பிச்சிடுச்சு. இதுக்கு முக்கியக் காரணம் எங்களோட வாலன்டியர்ஸ்தான். ஏன்னா ஒரு விஷயத்தை ஈஸியா ஆரம்பிச்சிடலாம். ஆனா, அதை நல்லபடியா தக்க வெச்சிக்கிறதுக்கு நம்பிக்கையான மனிதர்கள் வேணும். 

இப்போதைய சூழல்ல சோஷியல் ஒர்க் பண்றதுக்கு வாலன்டியர்ஸ் வர்றதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். என்கிட்ட 110 பேர் இருக்கிறாங்க. இவங்கள்ல நிறைய பேரு ஃபேஸ்புக் மூலமாதான் என்னை கான்டாக்ட் பண்ணினாங்க. இப்படி வாலன்டியரா வர்றவங்க முதல்ல ஃப்ரிட்ஜ் வெக்கிறதுக்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்து கொடுக்கணும். அதுக்குப் பிறகு தினமும் ஒருமுறையாவது அந்த இடத்தைப் போய் பார்க்கணும். என்னதான் செக்யூரிட்டியோட கன்ட்ரோல்ல இருந்தாலும் வாலன்டியரா இருக்கிறவங்க அடிக்கடி போய் பார்த்தாதான் அங்க உள்ள நிறை, குறைகளை கண்டுபிடிச்சு சரி செய்ய முடியும். சென்னைல பெசன்ட் நகருக்குப் பிறகு அசோக் நகர், ஆலந்தூர், கந்தன்சாவடியில ஆரம்பிச்சோம். தமிழ்நாட்டைத் தவிர பெங்களூரிலும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாச்சு. அங்கே ஹரீஷ்ங்கிறவருதான் பார்த்துக்கிறாரு. நாம அங்க ஆரம்பிச்சதுக்கப்புறம் நிறைய இடங்கள்ல வெச்சிட்டாங்க. அதைப்பார்க்கும்போது ரொம்பவே பெருமையா இருக்கு” என்கிறார் புன்முறுவலோடு. 

அவரிடம் `ஐயமிட்டு உண்' கான்செப்ட் எந்த அளவுக்குப் பலன் கொடுத்திருக்கு. இதிலுள்ள சாதக, பாதகங்கள் என்ன என்று கேட்டதும் புன்னகை மாறாமல் பதில் கொடுக்கிறார். 

```இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரை பெரிய அளவிலான எந்தப் பிரச்னையும் வரலை. வாட்ச்மேன் துணிகளை எடுக்கவிட மாட்டேங்கிறாரு, மூணு துணிகளுக்கு மேல கொடுக்க மாட்டேங்கிறாரு மாதிரியான சின்னச் சின்ன பிரச்னைகள்தான் வந்துட்டு இருக்கு. யார் வந்து எடுத்தாலும் நாங்க மூணு துணிகளுக்கு மேல எடுக்க விடுறதில்லை. ஏன்னா, உண்மையிலேயே தேவைப்படுறவங்க சரியான முறையில் அதைப் பயன்படுத்திக்குவாங்க. சிலர் மூன்று துணிகளுக்கு மேல் எடுத்துட்டுப் போய் எடைக்குப் போட்டுடுறதா தகவல் வந்தது. அதனாலதான் இந்த முடிவு. மற்றபடி சாப்பாட்டைப் பொறுத்தவரை அவங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக்கலாம். அதோட, முன்ன விட இப்போது நிறைய போன் கால்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு.

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் என்னை நேரில் அழைத்து வாழ்த்தினார். அவரோட பிஸியான டைம்ல என்னை அழைத்துப் பேசினதெல்லாம் பெரிய விஷயம். இதுபோன்ற ஊக்கம்தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்குது. இப்போ அடுத்ததா தி.நகர்லயும் ஃபிரிட்ஜ் வைக்கப் போறோம். அதுக்கான இடம், வாட்ச்மேன், வாலன்டியர்னு எல்லாமே ஃபைனல் பண்ணியாச்சு. பொங்கல் லீவுங்கிறதுனால நிறுத்தி வெச்சிருக்கோம். சீக்கிரமே அதுக்கான வேலையைத் துரிதப்படுத்தணும்” என்றவர் இறுதியாக, ``இங்க எல்லாருமே பொதுவானவங்கதாங்க. யாருக்கும் எதுவும் நிரந்தரம் இல்ல. நம்மகிட்ட அதிகமா இருக்கிறதை இல்லாதவங்களுக்குக் கொடுக்கிறோம். என்ன ஒண்ணு நாம கொடுக்கும்போது அதை வாங்குறவங்களுக்கு நெருடலா இருக்காது. தேவைப்படுறவங்க உரிமையோடு போய் ஃபிரிட்ஜ்ல இருந்து எடுத்துப்பாங்க. அவ்வளவுதாங்க” என்கிறார் ஃபாத்திமா. 

வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது என்பார்கள். ஆனால், எறும்பொன்றுக்குச் சீனி வைப்பதையே ஸ்டேட்டஸாகப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளும் இந்த இணையச் சமூகத்துக்கு மத்தியில் ஃபாத்திமா வரமாக வந்திருக்கிறார். இவரின் சேவை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் விரிவடையட்டும். வாழ்த்துகள் ஃபாத்திமா!