Published:Updated:

உலகில் அவசியம் பார்க்க வேண்டிய இடம் ஹம்பி... நியூயார்க் டைம்ஸ் அங்கீகாரம்!

உலகில் அவசியம் பார்க்க வேண்டிய இடம் ஹம்பி... நியூயார்க் டைம்ஸ் அங்கீகாரம்!
உலகில் அவசியம் பார்க்க வேண்டிய இடம் ஹம்பி... நியூயார்க் டைம்ஸ் அங்கீகாரம்!

இந்திய மண்ணின் சிற்பக் கலையையும், கட்டடக் கலையையும் வெளிநாட்டினர் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும், இன்று வரை அஜந்தா, எல்லோரா முதல் தஞ்சைப் பெரியகோயில் வரை அவர்களின் ஆச்சர்யத்துக்கு  சான்றாக உள்ளன. கலைச்சின்னமும், சுற்றுலாத்தலமுமான 'ஹம்பி'யும் அதில் ஒன்று.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ளது ஹம்பி. சமீபத்தில், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்ட, 2019-ல் உலகில் பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது ஹம்பி. முதல் இடத்தை கரீபியன் தீவிலுள்ள 'போர்ட்டோ ரிக்கோ' பிடித்துள்ளது. ஹம்பி, யுனெஸ்கோவின் உலக பாரம்பர்யச் சின்னங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

பெல்லாரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வார்கள். லோட்டஸ் பேலஸ், குயின்ஸ் லேக், நவபிருந்தாவனம், ராமர் வாலியை வதம்செய்த இடம் போன்ற பல்வேறு சுற்றுலாத்தலங்களும், பிரசித்திபெற்ற திருத்தலங்களும் அங்கு அமைந்துள்ளன. அவற்றுள் அவசியம் பார்க்கவேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்தான் ஹம்பி. 

14-ம் நூற்றாண்டில், தென்னிந்தியாவை ஆண்ட விசயநகரப் பேரரசின் தலைநகரமாக ஹம்பி திகழ்ந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம், 'துங்கபத்ரா' ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அழகான கற்கோயில்களும், அதில் நுட்பமான கலை நேர்த்தியோடு செதுக்கப்பட்ட சிற்பங்களும், அதைச் சுற்றியுள்ள மலைகளும் காண்போரை பிரமிக்கவைப்பவை. பல படையெடுப்புகளைக் கண்டுள்ள ஹம்பி, அத்தனைக்குப் பிறகும்  சிற்பங்கள் சிதிலமடைந்தபோதும், அதன் அழகும் கலைநுட்பமும் இன்றும் வியப்பை அளிப்பவை. ஹம்பியை கோபுரம் இல்லாத கோயில் என்றும் சிலர் கூறுவர்.

விசயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சிறப்பாகத் திட்டமிட்டு, கலை அழகியலோடு உருவாக்கப்பட்டது இந்த நகரம். இங்குள்ள கல் தேர் இதன் சிறப்புமிக்க அடையாளம். சிற்பங்கள் உருவாக்கப்பட்ட கல், தனித்துவம் வாய்ந்தது என்பர்.  அவற்றின் மேல் செதுக்கப்படும் சிற்பங்களின் வடிவத்தை, குறிப்பிட்ட நாழிகைக்குள் திருத்திக்கொள்ளவும் இயலக்கூடும், அப்படிப்பட்ட கற்களினாலேயே இங்குள்ள சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தியாவில், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களின் பட்டியலில் ஹம்பி தொடர்ந்து முதல் 5 இடங்களில் உள்ளது. 2014-ம் ஆண்டில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட கர்நாடக வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் முதல் இடத்தைப் பிடித்தது.

இங்கே, கூடை கூடையாகத் திராட்சைகள் மலிவாகக் கிடைக்கின்றன. இந்த நகருக்குச் செல்லும் வழியில் இயங்கிவரும் உணவகங்களில் காரத்துக்காக பச்சை மிளகாயை அரைத்துக் கொடுக்கின்றனர். ஆம்லெட், ஆஃபாயில் போன்றவற்றுடன், அரைத்த பச்சை மிளகாயையும் சேர்த்தே பரிமாறுகின்றனர். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஆண்டுதோறும் கர்நாடக சுற்றுலாத் துறை சார்பில், ‍‌'ஹம்பி விழா' நடத்தப்படுகிறது. மற்ற நாள்களில் ஹம்பிக்குச் செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதியோ, சரியான சாலை வசதியோ, தங்கும் வசதியோ எதுவும் கிடையாது.

சுற்றுலா வருபவர்கள், வாடகை வண்டிகளிலோ அல்லது  சொந்த வண்டிகளிலோ செல்லலாம். இந்த நகரத்தைச் சுற்றி ஹம்பி போன்ற கோயில்கள், நகரத்தில் எஞ்சியுள்ள கட்டடங்களின் கலைநயத்தைக் கண்டுகளிக்க ஷேர் ஆட்டோக்கள் வழிவகைசெய்கின்றன. 2016- 17-ம் ஆண்டில், ஹம்பிக்கு 5.35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதில், 38,000-க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டினர் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஹம்பி, சரியான பராமரிப்பு இல்லாததால், இவற்றில் எஞ்சியுள்ள சிற்பங்கள் மெள்ள மெள்ள அழிந்துவருகின்றன. அரசு, ஹம்பியின் தொன்மையைப் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளலாம் எனப் பெருமூச்சுவிட்டபடியே செல்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.