Published:Updated:

`உலகளவில் விளையாட வேண்டும்’ - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்!

`உலகளவில் விளையாட வேண்டும்’ - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்!
`உலகளவில் விளையாட வேண்டும்’ - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்!

தேசிய அளவில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பால் பேட்மின்டன் போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி சிறந்த விளையாடு வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

`ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா' சார்பில் 64-வது விளையாட்டுப் போட்டிகள் ஆந்திர மாநிலம் நெல்லூரில் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. மாநிலங்களுக்கு ஓர் அணி என மொத்தம் 29 அணிகளுக்கு இடையில் நடைபெற்ற பால் பேட்மின்டன் போட்டியில், தமிழகத்தின் சார்பாக விளையாடிய 8 பேர் கொண்ட பெண்கள் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று அசத்தியிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தமிழக அணியின் சார்பில் விளையாடிய ஈரோட்டைச் சேர்ந்த பள்ளி மாணவியான பசும்பொன் என்பவர் தேசிய அளவில் சிறந்த பால் பேட்மின்டன் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தின் சார்பாக விளையாடி வெற்றி பெற்ற அணியில் இருந்த மொத்தம் 8 பேரில், இரண்டு மாணவிகள் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். வெற்றி பெற்றதையடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை சந்திக்க வந்திருந்த மாணவிகள் பசும்பொன் மற்றும் காவ்யாஞ்சலி ஆகியோரிடம் பேசினோம். ``ஏற்கெனவே மாநில அளவில் நடைபெற்ற பால் பேட்மின்டன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பால் பேட்மின்டன் போட்டியானது சர்வதேச அளவில் இன்னும் விளையாடப்படவில்லை. சர்வதேச அளவில் பால் பேட்மின்டனுக்கான போட்டிகள் நடைபெறும் பட்சத்தில், நிச்சயமாக அதையும் வெற்றி பெறும் திறமைகளை நாங்கள் வளர்த்திருக்கிறோம். தனியார் பள்ளிகளில் பால் பேட்மின்டன் போட்டிக்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் பால் பேட்மின்டன் விளையாட்டே இல்லை. அரசுப் பள்ளிகளிலும் இந்தப் போட்டிக்கான பயிற்சியை மாணவிகளுக்குக் கொடுத்தால், இன்னும் பல பெண்கள் தேசிய அளவில் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பார்கள்" என்றனர்.